உரம் இட்டு அதிகபட்சம் 15 நாள்களில் வளரக்கூடிய, அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒருவகை உணவுப்பொருளே காளான். அதன் வளர்ப்பு என்பது மிக எளிதான ஒன்று ஆகும்.
காளான் வளர்ப்பில், முதன்மையான மூலப்பொருள் வைக்கோல். முதலில், அதை சிறுசிறு துண்டுகளாக வெட்டவேண்டும். பின், தூயநீரில் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் ஊற வைக்கவேண்டும். போதுமான நேரம் கழிந்ததும், அதை உலர வைத்து ஒன்றரை மணிநேரம் சூடுகலனில் சூடுபடுத்த வேண்டும். ஏனென்றால், அப்பொழுதுதான் வைக்கோலானது பேக் செய்வதற்கான ஏற்ற நிலையை அடையும். ஆனாலும், வைக்கோலில் சிறிது ஈரப்பதம் இருக்கவேண்டும்.
அடுத்து, காளான்விதை மற்றும் வைக்கோல் வைத்து காளான் படுக்கை தயாரிக்க வேண்டும். ஒரு நெகிழிப் பையில் சிறிது வைக்கோல் போட்டு நன்கு அழுத்த வேண்டும். பின்பு, அதன்மேல் ஒரு கைப்பிடி அளவு விதைகள் தூவி மீண்டும் வைக்கோல் வைத்து நன்கு அழுத்த வேண்டும். இப்படியே ஐந்து அல்லது ஆறு அடுக்குகள் வரை சேர்க்கலாம். நெகிழிப் பையின் அளவுக்கு ஏற்றவாறு அடுக்குகள் அமைக்கலாம். இறுதியாக, பையை நன்கு அழுத்தி இறுக்கமாக கட்டவேண்டும்.
Also Read: வேகமாக வளரும் ஒட்டுநெல்லி
விதை வளர்ச்சிக்கும், பரவலுக்கும் காற்று தேவை. எனவே, பையில் துளை இட்டு 25 டிகிரி செல்சியசில் வைக்க வேண்டும். இரண்டு நாட்களில் பையில் வெள்ளை நிறத்தில் ஒரு மாற்றம் ஏற்படும். அதுவே, ஸ்பான் ரன் என்கின்ற விதைப் பரவல் நிகழ்வு ஆகும். பதினைந்து நாட்களில் முற்றிலும் வெள்ளை நிறத்தில் மாறி கேசிங் சாயில் அதாவது உரம் மண் (மேற்பூசும் மண்) இடுவதற்கான நிலையை அடைந்து விடும்.
உரம் மண்ணாக மண்புழுக்களின் உரத்தை சேர்க்கலாம். அந்த பையை இரண்டாக வெட்டி அதில், உரத்தை சேர்க்க வேண்டும். பையில் முக்கால் பங்கு வைக்கோலுடன் கூடிய விதையும், கால் பங்கு உரம் மண்ணும் இருக்க வேண்டும். மண் சேர்க்கும்போது அழுத்தக் கூடாது. ஒரு வாரத்தில் அதில், சிறிய சிறிய முளைகள் வந்து இருக்கும்.