பல துறைகளில் தொழில் நுட்பத்தால் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும், விவசாயத் துறையைப் பொருத்தவரையில் அது, பாதிப்பாகவே அமைகிறது. அதுமட்டும் இல்லாமல், தொழில் நுட்பங்களின் பெருக்கத்தால் விவசாயத் துறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், புதுநபர்கள் வருவது, பெரிய அளவில் அதாவது, 50, 100 ஏக்கர்கள் அளவில் விவசாயம் செய்தல், தொழில் நுட்பங்களை விவசாயத்திற்கு சாதகமாகப் பயன்படுத்துவது, போன்றவற்றை மேற்கொண்டால் மட்டுமே விவசாயம் செழிக்கும்.
பல்லடம் பக்கத்தில் உள்ள வாவிபாளையத்தில் நிவி கார்டன் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவர் பெரிய அளவில் நெல்லித்தோட்டம் வைத்து உள்ளார். மேலும், அவர்களின் ஒரு தோட்டம் ஒட்டன்சத்திரத்தில் மலையடிவாரத்தில் உள்ளது. அவர் 25 வருடங்களாக நெல்லி விவசாயம் செய்து வருகிறார். இந்தியாவில், நெல்லியில் புதுரகங்கள் வந்தால் அதை வாங்கி இங்கு இருக்கும் ரகத்துடன் ஒட்டு சேர்த்து அதை பயன்படுத்தி வருகிறார். நெல்லி விவசாயம் பற்றி அவர் கூறியதாவது,
நான் 1995-ல் நெல்லி சாகுபடி தொழிலுக்கு வந்தேன். முதலில், எலெக்ட்ரானிக்ஸ் கடைதான் வைத்து இருந்தேன். வறட்சியிலும் நல்ல விளைவுதரும் என்று நெல்லி பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அந்த நேரம், கோவை பல்கலைக் கழகத்தால் ஙிஷி1 என்ற ரகம் அறிமுகப் படுத்தப்பட்டு இருந்தது.
அந்த ரகமானது மிகவும் வீரியம் வாய்ந்தது ஆகும். அதாவது, ஒரு மரத்தில் 100-ல் இருந்து 150 கிலோ வரை காய்கள் காய்க்கும். ஒருவருக்கு பத்து நாற்றுகள் என்ற வீதத்தில் அவர்கள் வழங்கினர். மேலும், குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய புதிய ரகங்கள் வந்து இருப்பதாக கூறினர். நான் அவற்றில் இருந்து 100 நாற்றுகள் வாங்கினேன். அவைகள் பெரிய அளவில் காய்கள் தரும் மரங்கள் ஆகும். தொடக்கத்தில் அதிகபட்சம் 250 நாத்துகளுடன் தொடங்கினேன். சொட்டுநீர் அமைத்து, இயற்கை உரங்களான மாட்டு சாணம், வேப்பம் புண்ணாக்கு, ஆட்டு எரு ஆகியவற்றை சேர்த்தேன்.
முதலில் 5 ஏக்கரில்தான் என்பணி தொடங்கியது. நான் பத்தாம் வகுப்பு வரை பயின்று உள்ளேன். நெல்லி விவசாயம் பற்றி எனக்குத் தெரியாது. அதனால், வனத்துறை, வேளாண் பல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் உதவியை நாடினேன். அவர்கள்தான் ஒட்டுகட்டி செடி வளர்க்கும் முறையை கூறினார்கள். ஒட்டுகட்டி வளர்க்கும் மரத்தில் ஒரு காயின் எடையானது 50 கிராமில் இருந்து 90 கிராம் வரை இருக்கும். ஒரு இலைக்காம்பில் 32 காய்கள் வரை காய்க்கும்.
இரசாயண உரங்களை சேர்க்கும்போது, மரங்களின் காய்ப்புதிறன் ஒரு வருடம் கூடும். மற்ற வருடம் குறையும். ஆனால், இயற்கை உரம் அப்படி அல்ல. அவை, மண்ணையும் செழிப்பாக்கும், மரத்தையும் வளர்க்கும். எனது பண்ணையைச் சுற்றிலும் எல்லையாக வேங்கை, குமிழ் தேக்கு, ஈட்டி, மலைவேம்பு, செம்மரம் போன்ற மரங்களை நட்டு உள்ளேன். செம்மரம் மட்டுமே 30,000 மரங்கள் உள்ளன. இதுவரையிலும் இரண்டு லட்சம் மரங்களை வைத்து உள்ளேன். இன்னும் பத்து வருடத்தில் இப்பகுதி அதிக மழைபெறும் பகுதியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டும் இல்லாமல், பல்லுயிர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக அமையும். இதற்கு ஏற்றாற்போலவே நர்சரி தோட்டமும் பலன் கொடுக்கிறது. நர்சரி என்பது ஒரு அருமையான தொழில் ஆகும். வெளியில் இருந்து நாத்துகள் வாங்கினால் அதற்கு தனி செலவு ஆகும். ஆனால் நாமே உற்பத்தி செய்யும்போது உழைப்புக்கு ஏற்றவாறு வருமானம் கிடைக்கும். திரிபுரா வரைக்கும் வீரிய ஒட்டு ரகங்களை நாங்கள் வழங்கி வருகிறோம்.
ஒட்டுகட்டுதல்:
விதைபோட்டு வளர்ந்த ஒரு செடியுடன், காய்ப்பில் இருக்கும் மரத்தின் கிளையை சேர்த்துக் கட்டுதலே ஒட்டுகட்டுதல் ஆகும். அதாவது, விதைச்செடியில் இலைகளை எடுத்துவிட்டு அதை க்ஷி வடிவத்தில் வெட்ட(பிளத்தல்) வேண்டும். அதில், மரக்கிளையில் இருந்து வெட்டியப் பகுதியை கணு பாதிக்காமல் சீவி வெட்டப்பட்ட பகுதியின் உள்ளே வைத்து சேர்த்துக் கட்ட வேண்டும். அதில், துளிர் வரும்வரை ஒட்டப்பட்ட கிளைமேல் சிறிய பையால் (கவர்) உறையிட வேண்டும். ஒட்டுகட்டப்பட்ட பகுதிக்கு கீழே துளிர் வராதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும். 50 நாட்களில் ஒட்டுகட்டிய செடியானது துளிர் விட தொடங்கும்.
ஒட்டுகட்டும்போது, காய்ப்புதிறனானது அதிகம் இருக்கும். ஆனால் ரகம் மாறாது. விதை போட்டு வளர்ந்த செடியில் காய்ப்பு வர 5 அல்லது அதற்கும் மேல் ஆகலாம். ஆனால், வீரிய ஒட்டுரகம் வளரும்போதே காய்ப்புடன் வளரும்.
ஒரு வீரிய ஒட்டுரக நாற்றானது, எங்கள் நர்சரியில் ரூ.35-ல் இருந்து 50 வரை விற்பனை செய்கிறோம். வெளி நர்சரிகளில் ரூ.75 வரை விற்பனை செய்கிறார்கள்.
செடி வளர்ப்பு முறைகளையும், ஒட்டுகட்டுதலையும் நாங்களே இலவசமாக கற்றுத் தருகிறோம்.
– சா.கு. கனிமொழி