பின்னலாடைத் துறையில் பெரிய அளவில் இயங்கி வரும் திருப்பூர், ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கு என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறது. திருப்பூருக்குப் பின்னலாடைத் தொழிலகங்களே, உயிர் மூச்சு. 2012ல் ரூ.10 ஆயிரத்து 500 கோடியாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், 2017க்குள் ரூ.26 ஆயிரம் கோடியை எட்டிப் பிடித்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றுமதி வர்த்தகம் ஒரே சீரான நிலையில் இருந்தது. உள்நாட்டு பின்னலாடை வர்த்தகமும், ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளின் அளவை நெருங்கக் கூடியதாக இருக்கிறது. ‘ஒரு லட்சம் கோடி பின்னலாடை வர்த்தகத்தை, 2022க்குள் ஈட்ட முடியும்’ என்ற இலக்குடன், திருப்பூர் தொழில்துறை களமிறங்கி இருக்கிறது. இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் கடமையாக உள்ளது.
‘மேட் இன் திருப்பூர்’ என்பதை, உலக அளவில் பிரபலமாக்கிய பெருமை, திருப்பூர் தொழில் துறையினருக்கு உண்டு. இங்கு சிறு, குறு, நடுத்தரத் தொழிலகங்களே அதிகம். இங்கு உள்ள ஆடைத் தொழிலகங்கள் வேலை வாய்ப்பை அதிகரித்து வருகின்றன.
வங்கிகளில் கடன் பெறுவது தற்போது எளிதாகி இருக்கிறது. குறிப்பாக, திருப்பூர் தொழில்துறையினர் பலர், கடன் பெற்று, தொழிலை நவீனப்படுத்தி இருக்கின்றனர்.
இது பற்றி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொதுச் செயலாளர் திரு. டி. ஆர். விஜயகுமார், ”தகுந்த தொழில் நிறுவனங்களுக்கு, 59 நிமிட கடன் அனுமதித் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. தொழில் அனுபவம், நிறுவனத்தின் முறையான திட்டம் போன்றவற்றை வைத்து, இது வழங்கப்படுகிறது. உரிய கால அளவுகளில் கடன் தொகைய திரும்பச் செலுத்தும் சிறந்த தொழில்முனைவோராக விளங்கினால், கடன் தொகையை உயர்த்தி தருவதும், அதன் மூலம் தொழிலை மேம்படுத்துவதும் இயலக் கூடியதாக இருக்கிறது.
பன்னாட்டு ஆடை வணிகத்தில், செயற்கை இழை ஆடைகளுக்கான பங்களிப்பு, 75 சதவீதம். ஆனால், திருப்பூரின் ஏற்றுமதியில், செயற்கை இழை ஆடைகள், 10 முதல் 15 சதவீதம் வரை இடம் பெற்று உள்ளன. கட்டுப்படியாகும் விலையில், செயற்கை இழை ஆடைகளைத் தயாரிப்பது சாத்தியமானால், திருப்பூர், உலகச் சந்தையில் மேலும் சாதிக்க முடியும் .’நிஃப்ட்’ உடன் இணைந்து புதிய ஆடை வடிவமைப்புகள், தயாரிப்புகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஆடைத் தொழில் துறையில் ஆராய்ச்சிகளைப் வலுப்படுத்தும் போது, தீர்வுகளும் கிடைக்கின்றன.” என்கிறார்..
-ஏ. எம். ஜஹாங்கீர், திருப்பூர்