தன்னார்வமும், உழைப்பும் இருந்தால் எந்த வயதிலும் தொழில் தொடங்கி நடத்தலாம் என்கிறார், திரு. வெங்கட்ராமன். தனது அறுபத்து இரண்டாம் வயதிலும் ஒரு இளைஞரைப் போன்ற சுறுசுறுப்புடன் தனது எல். பி. & எல். பி. பேப்பர் பிளேட்ஸ் அண்ட் லேமினேட்டர் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். சென்னைக்கு அருகே உள்ள புழுதிவாக்கத்தில் இவரது தொழிலகம் அமைந்து உள்ளது. தனது தொழில் முயற்சி பற்றி அவர் கூறியதாவது,
“கடந்த இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டுடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். ஒரு முறை பயன்படுத்தும் தன்மை உள்ள பேப்பர் தட்டுகள், தொன்னை, கன்டெய்னர் லிட் போன்றவற்றை உற்பத்தி செய்கிறோம். இவை தவிர வண்ண மெழுகுவர்த்திகளையும் பல அளவுகளில் தயாரிக்கிறோம். இங்கு உற்பத்தியாகும் பொருள்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். படிப்படியாக வளர்ந்து வருகிறோம்.
தொடங்கிய புதிதில் அனைத்துப் பணிகளையும் நானே மேற்கொண்டேன். பின்னர் இரண்டு பணியாளர்களைச் சேர்த்துக் கொண்டேன். இப்போது நான்கு பேர்கள் பணி புரிகின்றனர். நான் இந்த தொழிலில் இறங்கும் யாரையும் போட்டியாளர்களாகக் கருதுவதும் இல்லை; எதையும் கமுக்கமாக வைத்து இருப்பதும் இல்லை. எனக்குத் தெரிந்த தொழில் செய்முறைகளை, இத்தொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு கற்றுத் தருவதிலும், அவர்களுக்கு எந்திரங்கள், கருவிகள் வாங்குவதில் உதவவும் காத்திருக்கிறேன்.
குறைந்த முதலீட்டில் இந்த தொழிலைத் தொடங்கி நடத்தலாம். குறைந்தது இருநூறு சதுர அடி இடத்திலேயே இதைத் தொடங்க முடியும். பெரிய முதலீட்டுடனும், பெரிய இடத்திலும் கூட இத் தொழிலைத் தொடங்கி நடத்தலாம். புதிய எந்திரங்கள் அல்லது பழைய எந்திரங்களை நாங்களே கூட வாங்கித் தருகிறோம். மூலப் பொருட்களையும் எங்களிடம் வாங்கிக் கொள்ள முடியும். பேப்பர் தட்டுகளை பல அளவுகளில், வடிவங்களில் தயாரிக்க முடியும். எங்கள் வாயிலாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான பயிற்சிகளை எங்களால் வழங்க முடியும்.” என்றார் திரு. எஸ். வெங்கட்ராமன். (9840033536, 9444061486)
-செ.வ. இராமாநுசன்