இன்றைய பெற்றோர் கல்விக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதிகமாக செலவும் செய்கிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஒரு அழுத்தத்தை மாணவர்கள் மீது திணிக்கிறார்கள். இதனால் மாணவர்கள் புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்கிறார்கள். மாணவர்கள் புரிந்து படிக்கும் தன்மையை இழக்கிறார்கள். ஒரு சில மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பு மற்றும் அருமையும் தெரிவது இல்லை. சில முறைகளைப் பின்பற்றினால், மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பையும், அருமையையும் உணர்த்த முடியும். அவை பின்வருமாறு,
“பகுதி நேர வேலை பார்த்தால் மட்டுமே, மாணவர்களால் படிக்க முடியும்” என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பகுதி நேர வேலை ஆனது படிப்பிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். படிக்கும் போதே, அதற்குத் தேவையான செலவுகளை அவனே பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு பணத்தின் அருமையும் கல்வியின் மதிப்பும் தெரியும். நாம் நமது நாட்டில் உள்ள கல்வி முறையை மாற்றி அமைத்தால், கல்வித்தரம் உயர்வதோடு நம் நாட்டின் மக்களிடையே பொருளாதாரமும் முன்னேறும்.
மாணவர்கள், அவர்களது கடின உழைப்பால் முன்னேறலாம். குறிப்பாக ஒரு மாணவி வீட்டில் இருக்கும்போதே, கைத் தொழில் ஒன்றைச் செய்வதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம். சான்றிற்கு ஒரு பெண் கைத்தொழிலாக தையல் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, வாஷிங் பவுடர் தயாரித்தல், மெழுகுவர்த்தி போன்ற சிறு தொழில்களைச் செய்து வருமானத்தை ஈட்டலாம். பெண் தொழில் முனைவோராக ஆகலாம். இதற்கு செய்ய வேண்டியது கடினமாக உழைப்பது மட்டுமே.
ஒரு கல்லூரியில் படிக்கும் போது மாணவர்கள் எவ்வாறு வருமானத்தை ஈட்டலாம்? படித்துக் கொண்டு இருக்கும்போது டியூசன் எடுப்பது, நமக்கு நல்ல அறிவைக் கொடுக்கும். நல்ல ஒரு சிந்தனையையும் தெளிவையும், புரிந்து கொள்ளும் திறனையும் வெளிப்படுத்தும். முக்கியமாக அரசு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாக இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் வொர்க், டைப்பிங் வொர்க் செய்து கொடுக்கலாம். அதன் மூலமும் வருமானம் கிடைக்கும். இவ்வாறு மாணவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே இந்த வேலையை செய்தால், பிற்காலத்தில் ஒரு தொழிலைச் செய்வதற்கு, இது ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும்.
பகுதி நேர வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி?
பகுதி நேர வேலையைத் தேர்ந்தெடுக்கும் போது, நாம் செய்யும் வேலை, நம் படிப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். சான்றாக, பி.எஸ்சி., வேளாண்மையைப் பற்றிப் படிப்பவர்கள், பகுதி நேர வேலையாக மூலிகைச் செடி வளர்த்தல், மரக்கன்றுகள் விற்றல், மண்புழு உரம் தயாரித்தல், அழகுச் செடி வளர்த்தல் மற்றும் விற்றல் போன்றவற்றைச் செய்யலாம். எம்பிஏ, எம்சிஏ, பிபிஏ, பிசிஏ படிப்பவர்கள், பகுதி நேர வேலையாக ப்ராஜெக்ட் வொர்க், டைப்பிங் வொர்க், புரோகிராமிங் உருவாக்கித் தருதல், மற்றும் மார்க்கெட்டிங் போன்ற வேலைகளை செய்யலாம்.
-அ. விஜயராணி, எம்பிஏ,
ஜெயமங்கலம், தேனி மாவட்டம்.