தமிழக அரசு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்ததால், இப்போது வாழையிலை, தேக்கு இலை மற்றும் பாக்கு மட்டை பிளேட் முதலியவை பயன்பாட்டுக்கு அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான சூழல் அமைகிறது.
அதிலும் பாக்குமட்டையில் உற்பத்தி செய்யும் பிளேட்டுகளுக்கு இன்று தேவை அதிகளவில் பெருகியுள்ளது. இந்தத் தொழிலுக்கு தொடக்க முதலீடு மிகவும் குறைவாகவே உள்ளது.
ஆனால் மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிகிறது. பலருக்கும் வேலைவாய்ப்பையும் கொடுக்க முடியும்.
பாக்கு மட்டை பிளேட் தயாரிக்கும் தொழில் தொடங்குவத்கு 10ஙீ10 சதுர அடி பரப்பளவுள்ள சிறிய அறை இருந்தால் போதும். ஆண் பெண் இருவரும் எளிதாக இந்தத் தொழிலைச் செய்யலாம்
இந்த பிளேட்களுக்கு உற்பத்திப் பொருட்கள் பாக்கு மட்டைகள்தான். இதன் விலை 2-3 ரூபாய் வரைதான் இருக்கும். மொத்தமாக வாங்கினால் இன்னும் சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம். மார்த்தாண்டம், சேலம், பொள்ளாச்சி, கோயமுத்தூர் முதலிய இடங்களிலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பாக்கு மட்டைகள் அதிகளவில் கிடைக்கின்றன.
பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி செய்ய பல்வேறு எந்திரங்கள் உள்ளன. கையால் இயக்கும் எந்திரங்கள் 25 ஆயிரம் ரூபாய் முதல் 32 ஆயிரம் ரூபாய்களுக்குள் கிடைக்கின்றன. இவற்றை விட சற்று அதிகமான விலைகளில் கால்களால் பெடல் செய்யும் எந்திரங்களும் கிடைக்கின்றன.
நம் தொழில் கொஞ்சம் சூடு பிடித்த பிறகு, பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி செய்ய, தானியங்கி எந்திரங்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.
தானியங்கி எந்திரங்கள் ரூபாய் 50 ஆயிரம் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
பாக்கு மட்டை தட்டை எளிதாக செய்துவிட முடியும். முதலில் பாக்கு மட்டையை 30 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 30 நிமிடம் கழித்து, வெயிலில் சற்று காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இவை தட்டு செய்ய தயாராகி விடும்.
இப்படி தயாரான பாக்கு மட்டையை, கையால் இயக்கப்படும் எந்திரத்தில் வைத்து ஓர் அழுத்து அழுத்தினால் (பிரஷ் செய்தால்) போதும். பாக்கு மட்டை பிளேட் தயாராகி விடும்.
வாடிக்கையாளர் தேவைக்கேற்ப 4 – 12 அங்குல விட்டங்களில் அளவுகளை மாற்றி மாற்றிச் செய்து கொள்ளலாம். சிற்றுண்டிக்கு சிறிய பிளேட்டுகளும், சாப்பாட்டு பெரிய பிளேட்டுகளும் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், குடும்ப விழாக்கள் போன்றவற்றிற்கு நாம் பாக்கு மட்டை பிளேட்களை சப்ளை செய்யலாம். அதுபோல, கையேந்தி பவன்கள், திருமண மண்டபங்கள், அரசியல் கட்சி விழாக்களுக்கும் இந்த பிளேட்டுகள் அதிகளவில் தேவைப்படும். மொத்த கடைகளில் கூட விற்பனை செய்யலாம்.
ஒரு பாக்குத் தட்டு ஒரு ரூபாய் என விற்பனை செய்தாலும், 50 ஆயிரம் தட்டுகளை உற்பத்தி செய்தால், உற்பத்திச் செலவுகள் போக, மாதம் 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.
– தேன்கனி, விருதுநகர்