தெரு ஓரங்களில், சாலை ஓரங்களில் பல குட்டி குட்டி உணவுக் கடைகளை நாம் கடந்து சென்று இருப்போம். ஆனால், அந்த பாட்டாளி தொழில் முனைவோர்களிடம் இருந்து நாம் பல பாடங்களைப் படிக்கலாம் என்று தெரியுமா? அவர்கள் தரும் பாடங்கள் என்னென்ன?
ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
கையேந்தி உணவகங்களில், சட்னி சாம்பாரில் இருந்து கடைசியாக தூவப்படும் பருப்புப் பொடி வரை, அனைத்தும் ஒழுங்காக அடுக்கப்பட்டு இருக்கும். கையாள எளிதான பாத்திரங்களில், கடைக்காரர் எளிதாகவும்,. விரைவாகவும் எடுத்துப் பரிமாறும் வகையில் அமைந்து இருக்கும்.
இதனை நம் தொழிலுக்கும் பொருத்திப் பார்க்கலாம். எந்த தொழில் நுட்பம் அல்லது மூலப் பொருள் முதலில் தேவை, எவை கடைசியில் என்பதை சிந்தித்து உணர்ந்து வைத்து இருக்க வேண்டும். அவ்வாறு உணர்ந்தவற்றை அதே வரிசையில் செய்து முடிக்க வேண்டும்.
இடம் பார்த்துத் தொழில் செய்வோம்
கையேந்தி உணவுக் கடைகள், பொதுவாக வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் இடங்களில் தான் அமைக்கப்பட்டு இருக்கும். இதுபோல, சரியான இடத்தில் நமது தொழிலை / பொருளை வைத்தால், அதை விட சிறந்த விளம்பரம் இல்லை.
விரும்புவதைக் கொடுப்போம்
கையேந்திக் கடைகளில், அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் என்னென்ன உணவுகளை விரும்புவார்களோ அந்தந்த அயிட்டங்களை தயார் செய்து கொடுப்பார்கள். உடலுழைப்புத் தொழிலாளிகள் இருக்கும் பகுதிகளில் காரசாரமான கடினமான உணவுகளும்; அலுவலர்கள் இருக்கும் பகுதிகளில், மென்மையான உணவுகளும் தயாரிப்பதைப் பார்த்து இருப்போம்.
நம் பொருளுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்கள் மாறிய காலம் போய் விட்டது. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அதற்கேற்ப நம் பொருளின், உற்பத்தியின், சேவையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.
தேவையை முன்கூட்டியே கணிப்பது
மாலை 5.00 மணிக்குத் தொடங்கும் பரோட்டாக் கடைக்காக, கடைக்காரர், பிற்பகல் நேரங்களில் வெங்காயம் உரிப்பதையும், காய்கறிகளை வெட்டுவதையும் காணலாம். வாங்குவது வெட்டுவது அனைத்தும் கடை தொடங்கும் நேரத்திற்குள் முடிந்து விடும். இதனால் விரைவாக வாடிக்கையாளர்களைக் கவனிக்க முடியும்.
நம் தொழிலில் எதிர்காலத் தேவைக்கு (டிமாண்ட்) ஏற்றவாறு, முன்கூட்டியே கணித்து, நம் பொருட்களை உற்பத்தி செய்து வைத்து இருக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளரைக் காத்திருக்கத் தேவையில்லை.
ஒற்றுமையே உழைப்பு
கையேந்திக் கடைகளில் இரண்டு முதல் மூன்று பேர் இருப்பார்கள். ஒருவர் உணவு தயாரிப்பார்; இன்னொருவர் வாடிக்கையாளர் தேவையைக் கேட்டுப்பரிமாறுவார், இன்னொருவர் கல்லாவைக் கவனிப்பார். அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பார்கள்.
வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்கும் போது, உங்கள் சேவை நிறுவனத்தின் ஒற்றுமை முக்கியம். ஓர் அணியாக இணைந்து வேலை செய்யும் போது, தவறுகள் குறையும். நேரம் மிச்சப்படும். வேலையின் தரமும் உயரும்.
இலவசத்தின் தனித்துவம்
நாம் கையேந்திக் கடைகளில் சாப்பிடும் போது, நாம் விரும்பிச் சாப்பிடும் அயிட்டத்தை, வழக்கமான அளவை விட, கொஞ்சம் கூடுதலாகக் கொடுப்பார்கள். அல்லது 10 வடை பார்சல் வாங்கினால், இலவசமாக இரண்டு வடைகள் வைத்துக் கட்டுவார்கள்.
இந்த இலவசம் செய்யும் மாயம் அதிகம். வாடிக்கையாளர் கேட்பதைக் காட்டிலும், அதிகமாக அவருக்குக் கொடுத்து, அவரை அடுத்த முறையும் நம் பொருளை/சேவையைப் பயன்படுத்த உரிமையோடு வரவழைக்க வேண்டும்.
– ஜி. எஸ். மதன், குன்றத்தூர்