இன்றைக்கு புதுப்புதுப்பாணியில் உடைகளை வடிவமைத்து தைத்துத் தருவதால் சாதாரண தையற்கடையில் இருந்து மாறுபட்டு அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏராளமாகவே கொட்டிக் கிடக்கின்றதைக் காண முடிகின்றது.
மகளிர் ப்ளவுஸ் உடை சாதாரண மாதிரியில் தைக்க கூலி ரூ. 150 என்றால் ஃபேஷன் சார்ந்த ப்ளவுசிற்கு தையல் கூலி ரூ. 750 முதல் 2000 வரையில் தையல் கூலியை பெற முடிகின்றது.
எம்பிராய்டரி வேலைப்பாடுகள், ஆரி ஒர்க், மிரர் ஒர்க், சிக்கன்காரி ஒர்க், ஜர்தோஷி எம்பிராய்டரி வேலைப்படுகள் ப்ளவுஸ் உடையில் துணி மேலமைப்பு அலங்காரம் (Surface Ornamentation), தற்போது கட்டோரி ப்ளவுஸ் மூன்று துண்டுகள், நான்கு துண்டுகள் மற்றும் ஐந்து துண்டுகளில் கட்டிங் அமைப்பு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்ற ப்ளவுஸ்களுக்கு டீன்-ஏஜ் பதின் பருவப் பெண்களிடையே நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றன.
திருமண டிசைனர் ப்ளவுஸ் (Wedding Designer’s Blouse), செலிபிரிட்டி டிசைனர் ப்ளவுஸ்கள் தயாரிப்பதால் அதிக அளவில் வருமானம் ஈட்ட முடிகின்றது. கமீஸ், சுடி – டாப்ஸ், பட்டியாலா சல்வார், டோத்தி சல்வார், ப்ளசோ (Plazzo) பேன்ட் வகைகள் வாடிக்கையாளரின் உடல் அளவுகளைக் கொண்டு தயாரிக்கும் முறையில் (Made to Measure System) தொடர்ந்து வேலை இருந்த வண்ணம் இருக்கின்றன.
ஃபேஷன் டிசைனிங் டிப்ளமா, டிகிரி, முதுகலைப்பட்டப் படிப்புகள் பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பாடாமாக போட்டிப்போட்டுக் கொண்டு நடத்த முன் வந்த வண்ணம் இருக்கின்றன. மாணவியரின் ஆர்வம் தற்போது ஃபேஷன் டிசைனிங் பக்கம் திரும்பி வலம் வரத்தொடங்கி இருக்கின்றன. சொந்தத் தொழில் செய்வதில் தற்போதைய பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
ஃபேஷன் உடைகளை உருவாக்குவதில் கலை ஆர்வமும், டிராயிங் அடிப்படை நுனுக்கங்களும் அடித்தளமாக உள்ளன. துணி இரகங்களைத் தேர்வு செய்தல், தேர்ந்தெடுத்த துணி இரகங்களில் ஃபேஷன் உடைகளாக வடிவமைக்க கிரியேட்டிவிட்டியும் (Creativity) அவசியமாகும்.
கடை எங்கு இருந்தாலும் வாடிக்கையாளர்கள் தேடி வந்து ஆர்டர் கொடுக்கக் கூடிய வகையில் நல்ல பொருத்தமான உடைகளைத் தைத்து குறித்த நேரத்தில் டெலிவரிக் கொடுப்பதால் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் சூழல் தானாகவே அமைந்துவிடும் என்பதில் ஐயப்பாடில்லை.
ஒரு வாடிக்கையாளருக்கு பொருத்தமான உடைகளைத் தைத்துக் கொடுப்பதன் மூலமாக அவர்களின் வாய்மொழி மூலமாகவே மேலும் பத்து புதிய வாடிக்கையாளர்களை பெற சாத்தியக் கூறுகள் காணக் கிடைக்கின்றன. இன்றைய ஃபேஷன் வடிவமைப்புகளால் ஆன உடைகளைக் காண்பதற்கு www.pinterest.com என்ற இணையத் தளத்திற்கு செல்லவும்.
புதிதாக ஃபேஷன் துறையில் காலடி எடுத்து வைப்பவர்கள் போதிய அளவு தையல் தொழில் செய்யும் அனுபவம் பெற்று இருத்தல் அவசியமாகும்.
பொழுதுக் போக்கிற்காகவும், வீட்டுச் செலவினங்களை சரிகட்டுவதற்கு ஏற்ற உபரி வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கும் பெண்களுக்கு ஃபேஷன் உடைத் தயாரிப்பு உதவிகரமானதாகவே அமையப்பட்டு இருக்கின்றதை உணர முடிகின்றது.
அவ்வப்போது நேரத்தை ஒதுக்கி ஃபேஷன் டிபார்ட்மென்ட்ஸ் ஸ்டோர்களுக்கு சென்று கவனித்தல் வாடிக்கையாளர் விரும்பும் ஃபேஷன் உடைகள், தரம், விலை, புதிய வடிவமைப்பு முறைகளை மார்கெட்டிங் சுற்றோட்டமிடுவதன் மூலமாக எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.
உடைகளைத் தைத்த பின்னர் மாதிரி உருவ பொம்மைகளில் உடுத்தி வைப்பது, புதிய வாடிக்கையாளர்களை மனம் கவரச்செய்து விடும். காட்சிபடுத்தும் வணிகமுறை (Visual Merchandising and window display) மூலமாகவும், தங்களின் புதிய ஃபேஷன் உடைகளை வெப்சைட்களில் விளம்பரம் செய்வதன் மூலமாகவும் இந்த தொழிலை மேலும் சிறப்பாக செய்யலாம். இதன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம்.
வாடிக்கையாளர்களின் விவரக் குறிப்புகளை கணினி வழிப்பதிவு செய்து வைத்துக் கொள்வதன் மூலமாக அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தொடர்பு இருந்துக் கோண்டே இருக்க செய்கின்றது. வாடிக்கையாளரின் முகத்தை படம் எடுத்துக் கொண்டு உடைகளின் லைப்ரரியில் மென்பொருள் பயன்படுத்தி உடையின் தோற்றப் பொலிவைக் காண வழிச்செய்வதன் மூலமாக நிறைய அளவு புதுப்புது வாடிக்காயாளர்களை எண்ணிக்கை அளவில் உயர்த்திக் கொண்டே போக வாய்ப்புகள் உள்ளன.
ஃபேஷன் உடைகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான கைத்தேர்ந்த யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது ஃபேஷன் கண்காட்சி நடத்தி வெளி உலகிற்கு அறிமுகம் செய்வது என்பது இன்றைய காலக்கட்டத்தின் அவசியம் ஆகும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மேலும் பல புதிய டிசைன்களை தமது ஃபேஷன் தொழிற்கூடத்தில் உருவாக்குவது தொழில் விருத்திக்கு உறுதுணையாக இருக்கும்.
ஃபேஷன் உடைக்கு உகந்த ஃபேஷன் துணி இரகங்களைத் தேர்வு செய்வதில் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறுவதும் அத்தியாவசியம் ஆகும். சென்னையில் பிரபலமாக இயங்கி வரும் ஃபேஷன் டிசைனிங் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ / மாணவியர்கள் தமது ப்ராஜெக்ட் (Project) உடைகளுக்கான டிசைனிங் செய்த பின்னர் துணி இரகங்களைத் தேர்வு செய்வதற்கு என்று பிரத்தியேகமாக உள்ள கடைகளுக்கு படை எடுக்கத் தொடங்கிவிடுவது என்பது வாடிக்கையாகி விட்டது.
எனவே ஃபேஷன் துறையில் தொழில் முனைவோர் இந்த பாணியையும் மேற்கொள்வது நல்ல படிப்பாகவே கருதப்படுகின்றது.
திரைப்படத்துறை, சின்னத்துறை நடிக – நடிகையருக்கென்று பிரத்தியேக முறையில் புதுப்பாணியில் ஆன ஃபேஷன் உடைகளை வடிவமைப்பு செய்து தைத்துக் கொடுப்பதன் மூலமாக சினிமா / சின்னத் திரை சார்ந்த காஸ்டியூம் டிசைனராக அதிக அளவில் பெயரும், புகழும், பொருளும் ஈட்ட முடியும் என்பதே உண்மை ஆகும்.
“ஊக்குவிற்க ஆள்ருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்” என்கிற கவிஞர் வாலியின் பதிவு வைர வரிகளை இங்கு பதிவு செய்து இக்கட்டுரையை நிரைவு செய்கிறேன்.
– ஆர். எஸ். பாலகுமார்
(9283182955)