மின் பணியாளர்களின் தேவை அதிகரித்து வரும் காலம் இது. எல்லா அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும் அவசரத் தேவைக்கு கைகொடுப்பவர்கள் இவர்கள்தான். இந்த துறையில் படித்தவர்களும் வெற்றி பெறுகிறார்கள். கல்வி நிறுவனங்களில் படிக்காமல், எலெக்ட்ரீஷியன் ஒருவரிடம் உதவியாளராக இருந்து கற்றுக் கொண்டு தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். திரு. ஜி. கோபி, குன்றத்தூரில் ஜிஎஸ் எலெக்ட்ரிகல் என்ற பெயரில் மின்சாதனங்கள் விற்பனையகம் ஒன்றை நடத்தி வருவதோடு வீடுகள், அலுவலகங்களுக்கான மின் பணிகளையும் செய்து கொடுக்கிறார். இவருடைய தொழில் பற்றி இவரிடம் கேட்ட போது,
”எனக்கு சிறு வயதில் இருந்தே எலெக்ட்ரிகல் வேலைகள் மீது ஆர்வம் இருந்தது.
பல வகையான மின் விளக்குகளைப் பார்த்து வியப்பேன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த உடன் எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்டரானிக்ஸ் டிப்ளமா படிப்பில் சேர்ந்தேன். அந்த படிப்பில் முதல் ஆறு மாதங்கள் மின்னியல் பற்றியும், அடுத்த ஆறு மாதங்கள் மின்னணுவியல் பற்றியும் கற்றுக் கொடுத்தார்கள்.
பின்னர் அனுபவம் பெற்ற எலெக்ட்ரிசிட்டி போர்டு லைசன்ஸ் ஹோல்டர் (Eb Licence Holder) ஒருவரிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தேன். சம்பளம் குறைவாக இருந்தாலும் வேலைகளைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு நானே சொந்தமாக மின் பணிகளை செய்து கொடுக்கத் தொடங்கினேன். வாடிக்கையாளர்கள் அழைக்கும் நேரத்தில் உடனுக்குடன் சென்று பணிகளை முடித்துக் கொடுத்து நியாயமான கட்டணங்களைப் பெறுவேன். இதனால் என்னுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.
மின் பணிகளுக்கான மின் பொருட்களை வேறு கடைகளில் வாங்கித்தான் பணிகளைச் செய்து கொண்டு இருந்தேன். கையில் கொஞ்சம் சேமிப்பு சேர்ந்த உடன் நாமே ஒரு மின்பொருட்கள் விற்பனையகம் நடத்தலாம் என்று முடிவு செய்து ஒரு கடையையும் தொடங்கினேன். மொத்த விலைக்கு பொருட்களை வாங்குவதால் விலை குறைவாக இருக்கும். இதன் வாயிலாகவும் என் லாபம் அதிகரிக்கிறது. இந்த தொழில் எனக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
இந்தத் தொழிலைப் பொருத்த வரையில் எப்போதும் வேலை இருந்துக் கொண்டே இருக்கிறது. எந்த வேலை எடுத்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். நிறைய விசிட்டிங் கார்டுகளை அச்சடித்து வைத்திருக்கிறேன். சந்திப்பவர்கள் அனைவரிடமும் என் விசிட்டிங் கார்டை கொடுப்பேன். இந்த பழக்கம் என் தொழில் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட அளவுக்கு உதவியது.
என்னிடம் இருவர் பணிபுரிகிறார்கள். எனக்கு இந்தத் தொழிலில் பதினைந்து ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. எனக்கு பிளம்பர் வேலைகளும் தெரியும். நான் எலக்ட்ரீஷியன் வேலைகளை கற்றுக் கொள்ளும் போதே பிளம்பர் வேலைகளையும் சேர்த்துக் கற்றுக் கொண்டேன். ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போது பிளம்பர் வேலைகளையும் செய்து கொடுக்கிறேன். பிளம்பர் தொழிலில் கூடுதாலாக லாபம் கிடைக்கும். சில இடங்களில் மின்பணி, பிளம்பிங் என்று இரண்டையும் சேர்த்துச் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
பிஇ படித்தவர்கள் இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபட்டு வேலைகளைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் நேரடியாக எதாவது தொழிற்சாலையில் சூப்பர்வைசர் பணிக்கு சென்று விடுவார்கள். அதனால் படித்து விட்டு வருபவருக்கும், எங்களுக்கும் எந்த வித போட்டியும் இருக்காது. நாங்கள் பல இடங்களில் வேலை செய்து கற்றுக் கொண்டதால் எங்கள் அளவிற்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது. அவர்களுக்கு எங்கள் அளவிற்கு அனுபவம் இருக்காது.
வெற்றி என்பது நாம் கற்றுக் கொள்வதிலும், கவுரவம் பார்க்காமல் வேலைகளைச் செய்வதிலும் தான் இருக்கிறது என்று கருதுகிறேன். மேற்கண்ட பணிகளுடன் எனக்கு 300 அடி வரை மோட்டார் மாட்டத் தெரியும்; மெயின் போர்ட் அசெம்பிள் (Main Board Assemble) செய்ய தெரியும், ஈபி பாக்ஸ் லைன் (Eb Box Line) போட்டு ஒவ்வொரு அறைக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்கத் தெரியும், லைட், ஃபேன், மிக்சி மற்றும் க்ரைண்டர் போன்றவற்றிற்கு ஏஎல்எம்ஸ் (ALMS) மற்றும் எம்சிபி (MCB) போட்டு பிரிக்கத் தெரியும். அதனால்தான் என்னால் இந்தத் தோழிலில் சிறப்பாகவும் செயல்பட முடிகிறது, அதிக அளவில் லாபமும் பார்க்க முடிகிறது.” என்றார், திரு. கோபி.
-ச. சங்கீதா