– பால்சன் எஞ்சினியரிங் திரு. அழகுதுரை
வேலை பார்த்தாலும், தொழில் செய்தாலும் முழு மனதுடன் செயல்பட வேண்டும். அதுவே வளர்ச்சியைக் கொண்டு வரும். சிறப்பாக வேலை செய்பவர்கள், அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளுக்கு செல்வார்கள். அல்லது வாய்ப்பு வரும்போது சொந்தமாக தொழில் தொடங்கி வெல்வார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார், திரு. அழகுதுரை. இவர் சென்னை, திருமுல்லைவாயில் தொழிற்பேட்டையில் உள்ள பால்சன் எஞ்சினீயர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்.
பாளையங்கோட்டை அரசினர் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் பி. இ. பட்டம் பெற்றபின், சென்னையில் உள்ள ஒரு பெரிய வாட்டர் பிளான்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் எப்படி பணி புரிந்தார்? அடுத்த கட்ட வளர்ச்சி எப்படி தொடங்கியது? இது பற்றி அவர் கூறியபோது,
”வேலை பார்த்த அந்த நிறுவனத்தில் ஆர்வத்துடன் உழைத்தேன். நான், வேலை பார்த்த அந்த நிறுவனத்தின் உரிமையாளரே அசந்து போவார். போதுமான ஆட்கள் இல்லாத நிலையிலும் பலமுறை நான் தனியாக இருந்து, எந்திரங்களை வடிவமைத்து இருக்கிறேன். அந்த உழைப்புதான் என்னுடைய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது. உரிமையாளரிடமும் நல்ல பெயர் வாங்கித் தந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்தமாக வாட்டர் பிளான்ட் தொழிலில் இறங்கலாம் என்று எண்ணி அந்த நிறுவன உரிமையாளரிடம் அதைப்பற்றிக் கூறியபோது, அவர் என்னை ஊக்கப்படுத்தி, அவருக்கு வந்திருந்த சில ஆர்டர்களையும் கொடுத்து உதவினார்.
தொழிலை என் நண்பர் ஒருவரோடு சேர்ந்து தொடங்கினேன். நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. இடைஇடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் வரத் தொடங்கின. நண்பரிடம் நேரடியாக இது பற்றிப் பேசி, அவரிடம் இருந்து பிரிந்து எனது வாழ்விணையர் திருமதி. சொர்ணகலாவுடன் இணைந்து பால்சன் (Paalson) எஞ்சினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினேன்.
ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். பொதுவாக, நீர் சுத்திகரிப்பு பிளான்ட் அமைப்பவர்கள், அவற்றுக்கான எந்திரங்கள், கருவிகளை வெளி நிறுவனத்தில் இருந்து வாங்குவார்கள். நாங்கள் அப்படி வெளி நிறுவனங்களில் இருந்து வாங்குவது இல்லை. அனைத்து விதமான எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை சொந்தமாக தயாரித்து பயன்படுத்துகிறோம். எங்கள் நிறுவனத்தில் ஏழு மெக்கானிக்கல் பொறியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். நேர்மையான உழைப்பாளிகள். குறிப்பாக, நேரத்திற்குள் பிளான்ட்டை அமைத்து முடித்து விடுவார்கள்.
அண்மையில் தூத்துக்குடியில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்ககு கடல் நீரை குடிநீராக்கும் பிளான்ட் ஒன்றை அமைத்துக் கொடுத்தோம். ஒரு மணி நேரத்திற்கு மூன்றாயிரம் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றித் தரும் இந்த பிளான்டில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் நாங்களே தயாரித்தவைதான்.
எங்களிடம் நூற்றுக்கும் குறையாத நிலையான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதாவது, பிளான்ட் அமைத்துத் தருவதோடு எங்கள் வேலை முடிந்துவிடுவதில்லை. அதற்கான பழுதுபார்ப்பு சேவைகளையும், நாங்களே செய்து தருகிறோம். ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய்க்கு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் ஒரு ஏக்கரில் எந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. சுமார் நூறு பேர்களுக்கு நேர்முகமாகவும், சுமார் ஐநூறு பேர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்குகிறோம்.
எங்கள் தொழில் சிறப்பாக நடப்பதற்கு ஐந்து உத்திகளை பின்பற்றுகிறேன். அவை,
1. எந்திரங்கள் தயாரித்துக் கொடுத்தல் மற்றும் பிளான்ட் அமைப்பதை விரைவாக முடித்துக் கொடுத்தல்.
2. வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த செலவை விட குறைந்த செலவில் செய்து கொடுக்கிறோம்.
3. வாடிக்கையாளர்களுடனான நட்புறவை பேணிக் காக்கிறேன். அவர்களுக்கான வேலைகளைச் செய்து கொடுக்கும்போது ஒரு அணுகுமுறை, வேலை முடிந்தவுடன் ஒரு அணுகுமுறை என்று இருக்காது. எப்போதும் ஒரே மாதிரியாக பழகுவேன். ஒரு பிளான்ட்டில் சின்னதாக ஒரு பழுது ஏற்பட்டிருக்கும். அந்தப் பழுதை நாம் போய் செய்து கொடுத்தால் அதற்கான கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தையே பெற முடியும். ஆனாலும் அதனை எந்த தயக்கமும், தள்ளிப்போடலும் இல்லாமல் செய்து கொடுப்பேன்.
4. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிக்கவனத்துடன் பணிகளைச் செய்து கொடுப்பேன்.
5. நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்.
நாங்கள் அமைக்கும் பிளான்ட்கள் தவிர மற்ற எங்களைப் போன்ற தொழில் செய்யும் நிறுவனங்களுக்குத் தேவையான எந்திர வடிவமைப்புகளையும் செய்து கொடுக்கிறோம். தற்போது புதியதாக உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கு தேவையான குழாய்களையும் அமைத்துத் தருகிறோம். இந்த வாய்ப்பு கூட வாடிக்கையாளர்களிடன் நாங்கள் கொண்டிருக்கும் நட்புணர்வால் கிடைத்தது. அதாவது, நாங்கள் அமைத்துக் கொடுத்த ஒரு வாட்டர் பிளான்ட்டில் இருந்த மேலாளர், இன்னொரு நிறுவனப் பணிக்கு சென்றார். அங்கே உணவத் தொழில் பிரிவுக்கான குழாய்கள் அமைக்க வேண்டும். அவர், உடனே என்னை அழைத்து, அந்த பணியை செய்து கொடுக்கும் வாய்ப்பை வழங்கினார். இப்போது எங்கள் நிறுவனத்தின் பணிகளில் அதையும் இணைத்துக் கொண்டோம்.
எங்கள் நிறுவனம் இலாபகரமாக செயல்படுவதற்கு என் மனைவி திருமதி. சொர்ணகலா இயக்குநராக இருப்பதும் ஒரு காரணம். பண வரவு செலவை அவர்தான் நிர்வகிக்கிறார். இதனால் என்னால் மற்ற பணிகளை சிறப்பாக கவனிக்க முடிகிறது.” என்றார், திரு. அழகுதுரை.(8825846135)
இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள தலைவன்கோட்டை. இவருடைய தந்தையார் ஒரு பருத்தி வணிகர். திரு. அழகுதுரை ஒரு தமிழ் ஆர்வலர். தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வடமொழி கலவாத தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்று விரும்புகிறவர். அதை பரப்புரையாகவும் மேற்கொள்பவர். இதன் காரணமாகவே தன் மகனுக்கு அதியமான் என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
ஆ. வீ. முத்துப்பாண்டி