– தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் திரு. ஜி. சங்கரன் பேட்டி
தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் (டான்பா) , பிளாஸ்டிக் தொழில் முனைவோருக்கு வழி காட்டும் அமைப்பாகவும், ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்போது அவற்றுக்கு தீர்வு காண முயற்சிக்கும் சங்கமாகவும் இருக்கிறது. இதன் தலைவர் திரு. ஜி. சங்கரன். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது, எனவே அவற்றின் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்து உள்ள நிலையில், சில பகுதிகளில் தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசும் வரும் ஆண்டில் இருந்து பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இது பற்றி திரு. சங்கரன், பிளாஸ்டிக் பயன்பாட்டை முறைப்படுத்தி எப்படி சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த முடியும் என்பதை விளக்கிக் கூறினார். அவர் கூறியவற்றில் இருந்து..
”தொடக்க காலங்களில் மெலமைன், ஃபார்மல்டிஹைட் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப் பட்டன. பழைய கருப்பு டெலிஃபோன்கள், மின்கருவிகள், உணவு தட்டுகள் போன்றவை மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் மூலப் பொருட்களால்தான் தயாரிக்கப்பட்டன. ஆனால் மேற்படி பொருட்கள் கழிவுகளாக மாறியவுடன் தூக்க எறிவது என்பது அன்றாட நிகழ்வு கிடையாது. அப்பொருட்களை பல ஆண்டுகள் பயன்படுத்திய பிறகுதான் குப்பையாக மாறும்.
மேலே சொன்ன பல பொருட்கள் நாளடைவில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் மூலப் பொருட்களால் உற்பத்தி செய்யத் தொடங்கிய உடன், மறுசுழற்சி செய்ய முடியாது என்னும் சிக்கல் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.
இந்தியாவில் 1991-க்குப் பிறகு தாராளமயப் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, மக்களிடையே அதிக அளவில் நுகர்வு பொருட்களை பயன்படுத்தி வாழும் வாழ்க்கை முறை பெருகத் தொடங்கியது. மெல்ல மெல்ல வணிகத்தின் அனைத்து துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் வளரத் தொடங்கியது. அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல், அவற்றின் இயற்கைத் தன்மை மாறாமல் இருக்க, அதற்கேற்ற பேக்கிங் பொருட்கள் தேவைப்பட்டன.
பல்வேறு திறன் கொண்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களை பல அடுக்குகளாகச் சேர்த்து, புதிய முறைகளில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டன. மேற்படி பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படும் பொருட்கள் பல மாதங்கள் கெடாமல் இருந்தன. ஆனால் பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் பைகள் கழிவிகளாக மாறும்போது, அவை மக்கவும் இல்லை; அந்த பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்யவும் முடியவில்லை.
இன்று வரை இந்தியாவில் வணிகமுறையில், பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் பைகள் (மல்டி லேயர் பிளாஸ்டிக்ஸ்) வரத் தொடங்கிய் நாட்களில் இருந்து இன்று வரை உருவாகி வரும் மல்டி லேயர் பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் நிலத்தில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோதான் வருகின்றன.
தற்போது தடை இல்லை என்று தமிழக அரசு விலக்கு அளித்துள்ள எண்ணெய் பைகள், நெய் பைகள் போன்றவை அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பைகள்தான். மறுசுழற்சி செய்யக்கூடிய ஒரு அடுக்கு கொண்ட சாதாரண பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை, ஆனால் மறுசுழற்சியே செய்ய முடியாத பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை இல்லை என்கிறது, அரசு. இந்த அறிவிப்பு வியப்புக்கு உரிய ஒன்றாக இருக்கிறது.
தவிர பன்னாட்டு நிறுவனங்களான இந்துஸ்தான் லீவர், நெஸ்லே, அமுல், ஐடிசி போன்ற அனைத்து நிறுவனங்களும் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகளில்தான் அடைத்து விற்கப்படுகின்றன. பெட்டிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் சரம்சரமாகத் தொங்கும் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள்தான்.
1999-ம் ஆண்டு நடுவணரசு, மறுசுழற்சி செய்யக்கூடிய கேரி பேக்குகள் குறைந்தது இருபது மைக்ரான் தடிமன் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. மறுசுழற்சி செய்ய இயலும் பைகளுக்கு ஒரு நிலை, மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களுக்கு ஒரு நிலை என்ற போக்கை நாங்கள் தொடர்ந்து அப்போது முதலே எதிர்த்து வருகிறோம்.நடுவணரசி 1999 – ஆண்டில் கொண்டு வந்த பிளாஸ்டிக் பற்றிய சட்டத்துக்கு மாற்றாக, 2011- ம் ஆண்டு ‘பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை’ என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்த போது, எங்கள் சங்கம், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் விடுத்தோம். பிறகு 2016-ல் நடுவணரசு பிளாஸ்டிக் தொடர்பாக மீண்டும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்த போதும், எங்கள் சங்கமும், எங்களுடன் இணைந்து செயல்படும் மற்ற சங்கங்களும் சேரந்து மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினோம். இதன் காரணமாக அந்த சட்டத்தில், 18-03-2018 – க்குள் பல அடுக்குகள் கொண்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்னும் ஒரு விதியைச் சேர்த்தனர்.
சங்கங்களும் நம் முயற்சிகளுக்கு பயன் கிடைத்தது என்று மகிழ்ந்தன. இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 18-03-2018 – க்கு இருபது நாட்களுக்கு முன் நடுவணரசு 2016 பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அந்த திருத்தத்தில், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடை செய்யப்படும் என்ற சட்டவிதி நீர்த்துப் போகும் அளவில், முற்றிலுமாக விதிகளில் மாற்றம் செய்து வெளியிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடுவணரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டது.
இந்த நேரத்திலாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் அளவுக்கு செயல்பட வேண்டும்.
இதற்கிடையே நடுவணரசு இருபது மைக்ரான், நாற்பது மைக்ரான், ஐம்பது மைக்ரான் என்று கேரி பைகளின் தடிமனைக் கூட்டிக் கொண்டே போனதே தவிர, கேரி பைகள் தயாரிப்பவர்கள் எந்த காலத்திலும் எந்த மைக்ரானைப் பற்றியும் கவலைப் படாமல், அவர்கள் விருப்பப்படி பத்து மைக்ரானுக்கும் கீழே என்று தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இந்த தடிமன் குறைந்த பிளாஸ்டிக் கேரி பைகளால், பிளாஸ்டிக் தொழில் அடைந்த அவமானம் அதிகம். தயாரிப்பாளர்களிடன் தடிமன் குறைந்த கேரி பைகளை ஓட்டாதீர்கள் என்றால் அவர்கள் கேட்பதில்லை.
பதினெட்டு மாநிலங்களில் பிளாஸ்டிக் கேரி பைகளை தடை செய்து விட்டார்கள். அதைப் பார்த்தாவது அரசு விதித்து உள்ள தடிமனில் பிளாஸ்டிக் கேரி பைகளை ஓட்டுவார்கள் என்று எதிர்பார்த்தால், அந்த எதிர்பார்ப்புக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. பழையபடியே தடிமன் குறைந்த பைகள்தான் ஓட்டபடுகின்றன. இதனால் எங்களைப் போன்ற சங்கங்களும் கேரி பைகளை தடை செய்வது சரிதான் என்று சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
நான் ஒரு முறை வெளியூர் சென்றபோது வழியில் காரை நிறுத்தி, ஒரு உணவகத்தில் இரண்டு இட்லி கொண்டு வருமாறு கூறினேன். பரிமாறுபவர் தட்டில் ஒரு பிரியாணி ஷீட்டை வைத்து அதன் மேல் இரண்டு இட்லிகளை வைத்து பரிமாறினார். முதலில் அந்த தட்டில் தொட்டுக் கொள்ள சட்னி போட்டார். ஒன்றும் ஆகவில்லை. அடுத்ததாக, சாம்பாரை ஊற்றினார். ஊற்றிய உடனேயே மஞ்சள் நிறத்தில் இருந்த சாம்பார் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி பிங்க் வண்ணமாகி விட்டது. அதிர்ச்சி அடைந்த நான், இட்லிகளை சாப்பிடாமலேயே அதற்கான பில்லுக்கு உரிய பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்து விட்டேன்.
நடவணரசு 1999 – ம் ஆண்டு முதலே தெளிவாக அறிவுறுத்தி வருவது, மறுசுழற்சி வாயிலாக கிடைக்கப்பெற்ற பிளாஸ்டிக் மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் ஷீட்டுகளையோ, கன்டெய்னர்களையோ, டப்பாக்களையோ உணவுப் பொருட்களை சேமிக்கவோ, எடுத்துச் செல்லவோ, பரிமாறவோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.
இன்றைக்கு சட்னி, சாம்பார் போட்டுக் கொடுக்கும் பைகள் ஆகட்டும், பிரியாணி ஷீட்டுகள் ஆகட்டும், ஒன்றாவது அசல் மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறாதா, என்று கேட்டால் இதற்கான பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. அனைத்தும் மறுசுழற்சி மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கபடுபவை ஆகத்தான் இருக்கின்றன. இப்போது எல்லாம் மறுசுழற்சி பிளாஸ்டிக் பைகளில் சூடாக உள்ள காப்பி, தேநீர் கூட விற்கப்படுகின்றன. இவை எல்லாம் உடல் நலனுக்கு கேடானவை. இதை எல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் புறக்கணித்து செயல்படும்போதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது.
பெரிய உணவகங்கள்ளோ, சிறிய உணவகங்களோ அனைத்திலும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அவற்றின் வேலை முடிந்த பிறகு, அப்படியே தெருக்களில் அல்லது குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். எனவே இங்கே திடக்கழிவு மேலாண்மை கடைப்பிடிக்காததுதான் சிக்கல்களை உருவாக்குகின்றன. முறையாக பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மக்காத குப்பை என்று தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது ஒன்றுதான் இதற்கான முறையான தீர்வு ஆக இருக்கும்.
பிளாஸ்டிக் கேரி பைகள் தடை செய்யப்பட்ட மாநிலங்களில், அதை எதிர்த்து உயர்நீதி மன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயங்களில், தடையை நீக்க வழக்குகள் தொடர்ந்தபோது, குப்பைகளுக்கு உற்பத்தியாளர்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும், குப்பையை முறையாக அப்புறப் படுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலைதானே என்று வாதாடினால், அதற்கு அரசுகள் அளிக்கும் பதில் மனுவில், குப்பைகளை எங்களால் சரியாக கையாள முடியவில்லை; அதற்கு வேண்டிய நிதி வசதியும் இல்லை; ஆட்களும் இல்லை, ஆகவேதான் பிளாஸ்டிக் கேரி பைகளைத் தடை செய்தோம் என்று கூறுகிறது. தீர்ப்பாயங்களும் அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டு பிளாஸ்டிக் கேரி பைகளை தடை செய்தது சரிதான் என்று தீர்ப்பு அளித்து விடுகின்றன.
2002 -ல் பிளாஸ்டிக் கேரி பைகளுக்குத் தடை என்ற அறிவிப்பு வந்தபோது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தடை இல்லை. அந்த தடையை எதிர்த்து போராடினோம், வெற்றி பெற்றோம். ஆனால் 2018 -ன் நிலைமை வேறு. தற்போது பதினெட்டு மாநிலங்களில் ஏற்கெனவே தடை நடைமுறையில் உள்ளது. நம் மாநிலம் பத்தொன்பதாவது ஆகும். கேரி பைகளைப் பொறுத்தவரை அதைத் தயாரிப்பவர்கள் தவிர, மற்ற பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பவர்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பாகத்தான் உள்ளனர். அதைப் போன்றே உணவுப் பொருட்கள் தொடர்பான தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மீதும் கோபத்தில்தான் உள்ளனர்.
எனவேதான் எங்கள் சங்கம், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்; பனியன் டைப்பில் உள்ள கேரி பைகள் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு தடை செய்யப்பட வேண்டும்; உணவுப் பொருட்கள் தயாரிக்க, பரிமாற, சேமித்து வைக்க, விற்பனை செய்ய, எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய வேண்டும்; மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் தவிர மற்ற அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் எந்த வித தடையும் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.” என்றார், திரு. சங்கரன்.(90030 23815)
– நேர்மன்