எல்லோராலும் தொழில் தொடங்கி இலாபகரமாக நடத்த முடியாது. அதற்குத் தனித்திறமை வேண்டும். தகுதி வேண்டும். எந்தத் தொழிலும் இலாபகரமாக நடக்க வேண்டும்.
உண்மையில் சிலகாலமாக நம்மிற் பலர் தம்மையறியாமலேயே நாட்டுக்குத் தீங்கு பயக்கும் செயல் செய்து கொண்டு வருகிறார்கள்.
நாம் அன்றாடம் பார்க்கும் சினிமாப்படங்களில் கூட அதன் தாக்கம் தெரியும். அதாவது ‘பணக்காரர்கள் எல்லாம் மோசமானவர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் சுயநலவாதிகள்’ என்ற தவறான கருத்தைப் பெரும்பான்மையான ஏழைகள், அல்லது வசதி இல்லாதவர்கள் நம்பும் படியாக வளர்த்து வருகின்றார்கள். இது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, உள்ளத்தையும் கெடுத்து மக்களை மயங்க வைத்துவிடும்.
உண்மை என்னவென்றால் தன் சொந்த முதலைப் போட்டு, சிந்தித்துத் தொழில் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தும் ஒரு தொழிலதிபர் வேறு எவரைக் காட்டிலும் இந்த நாட்டிற்கு அதிகமான சேவை செய்கின்றவர் ஆவார்; அவரால் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கின்றது; உற்பத்தியும் பெருகுகின்றது; உண்மையான செல்வமும் நாட்டிற்கு மிகுதியாகக் கிடைக்கின்றது. செலாவணியும் கிடைக்கின்றது; அவர்கள் தான் நாட்டிற்கு பயனுள்ளவர்கள். ஒரு நாட்டு மக்களுக்கு அவர்கள் தன்மைக்கு ஏற்ப ஆட்சி அமையும் என்பார்கள்!
உற்பத்திப் பெருக்கத்திற்கும், செல்வச் செழிப்பிற்கும் முதல் காரணமானவர்கள் தொழிலதிபர்களும் மேலாண்மை வித்தகர்களும்தான். நாம் மதிப்புக் கொடுத்துக் கோபுரத்தில் வைத்திருக்கும் கவர்ச்சிப் பொம்மைகளல்லர்! உழைக்கின்றவனுக்கும் அதை விட உழைப்பிற்கு வழி வகுக்கின்றவனுக்கும் நாம் எப்போதும் உற்சாகம் கொடுக்க வேண்டும்.
அவர்கள்மேல் பொறாமை கொள்ள வைத்து ஆதாயம் தேட அந்த அறியாமையை பயன்படுத்தக் கூடாது.
– டி.ஆர். கள்ளப்பிரான், திருநெல்வேலி