சென்னை நகரில் தோட்டம் அமைக்க தரையில் இடம் இல்லாத, ஆனால் சொந்த வீட்டு மாடியில் இடம் உள்ளவர்களிடம் மாடித் தோட்டம் அமைக்கும் எண்ணத்தை இயற்கை ஆர்வலர்கள் வளர்த்து வருகிறார்கள். சிலர் மாடித் தோட்டம் அமைத்துக் கொடுப்பதைத் தொழிலாகவும் செய்து வருகிறார்கள்.
அப்படி தொழிலாக செய்து வருபவர்கள், திரு. பிரேம்ராஜ் மற்றும் திரு. ஆனந்தன் என்ற இரு நண்பர்கள். மாடித் தோட்டம் அமைப்பது பற்றி அவர்கள் கூறும்போது,
”சென்னையில் மக்கள் மாடித்தோட்டம் அமைக்க விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் அழகுச் செடிகளை வைப்பதுதான் தோட்டம் என்று நினைக்கிறார்கள். அவர்களிடம் அழகு செடிகளை விட காய்கறிச் செடிகளை வளர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறோம். அவர்களிடம் பொறுமையாக இயற்கை மாடித் தோட்டத்தை பற்றி விளக்கிச் சொன்னால் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களிடம் தேவையான தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
அதன்பிறகு மாடித் தோட்டம் அமைத்துத் தரும் பணியை வழங்குவார்கள்.
செடிகளை, மண் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருவோம். இவ்வகை செடிகள் பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கும். அவ்வாறு வாங்கி வரும் ரோஜா செடியில் அல்லது மல்லிச் செடியில் பூக்கள் கூட பூத்து இருக்கும். இந்த கவர்ச்சியைப் பார்த்து செடிகளை வாங்கி விடுவார்கள். ஆனால் ஒரு மாதம் கடந்த பிறகு அவை அவற்றின் தன்மையை இழந்து விடும். காரணம் பிளாஸ்டிக் பையில் இருக்கும் மண்ணில் தொடந்து நாம் நீர் ஊற்றும் பொழுது மண் மிகவும் கெட்டியாகி விடுகிறது. அதனால் வேர்கள் அதன் தன்மையை இழந்து, மேற்கொண்டு வளர்வதில்லை.
ஆனால் நாங்கள் கோகோஃபீட் என்று சொல்லப்படும் தேங்காய்நாரில் செடிகளை வளர வைப்பதால், மண் கெட்டியாக மாறுவது இல்லை, நெகிழும் தன்மையில் இருப்பதால். நாம் வளர்க்கும் செடிகளும் நன்றாக வளரும்.
ஒரு மாடித் தோட்டம் அமைக்க குறைந்தது, ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். இதில் தேவையான விதைகள், கோகோஃபீட், இயற்கை உரங்கள், தோட்டக் கருவிகள், நிழற்கூட அமைப்பு, அமைத்து தரும் பொறுப்புகள், தொடர்ந்து தேவைப்படும் உதவிகள் இதில் அடங்கும்.
முதலில் விதைகளை கொண்டு தோட்டம் அமைத்து, ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் வந்து விதையில் இருந்து முளைத்துள்ள செடிகளை தனியே எடுத்து முழுமையாக தோட்டத்தை அமைப்போம். மாதம் ஒரு முறை அவர்களை தொடர்பு கொண்டு செடிகளின் வளர்ச்சி எப்படி உள்ளது, உரங்கள் ஏதாவது தேவைப்படுகிறதா என்று விசாரித்து செயல்படுகிறோம்.
மாடித் தோட்டத்தின் மூலம் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கீரைகள் போன்றவற்றை விளைவித்து பயன்படுத்தலாம்.
நாங்கள் மாடித்தோட்டம் அமைத்துத் தருவதுடன், ஓவியங்களையும் வரைந்து அழகுபடுத்துகிறோம். குறிப்பாக வீட்டில் உள்ள சுவிட்ச் பெட்டிகள் மீது மற்றும் மாடிப்படிக்கட்டு சுவர் போன்றவற்றில் ஓவியங்கள் வரைந்து அழகு படுத்துகிறோம்.
ஓவியங்களுக்கு ஆன கட்டணத்தை முதலிலேயே தெரிவித்து ஒப்புதல் பெற்ற பின்னர் வரைந்து கொடுப்போம். பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரையும் பயிற்சியும் கொடுக்கிறோம்.” என்றனர், இவர்கள். (79046 82203, 99404 26648)
– செழியன். ஜா