“அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உருவாகும் உலகத்தரம் வாய்ந்த ஆடியோ சாதனங்களுக்கு இணையாக நாங்களும் தயாரிக்கிறோம். அதே சமயம், வெளிநாட்டுக் கருவிகளின் விலையில் மூன்றில் ஒரு பாகமே எங்கள் பொருட்களின் விலை இருக்கும்” என்கிறார் டார்வின் டெக்னாஜீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜான்தங்கச்சன்.
இசை உலகில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் திரு. ஜான்தங்கச்சன் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. இசைக்கு உயிராகத் திகழும் ஆடியோ சாதனங்களின் நுட்பங்களை ஆய்ந்து அறிந்தவர் கடந்த முப்பது ஆண்டுகளாக இத்துறை தொடர்புடைய கருவிகளின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். ‘ஹோம் தியேட்டர்’ அமைப்பு உருவாக முக்கியக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.
ஆடியோ-வீடியோ துறையில் ஆர்வம் கொண்டவர்கள், இது தொடர்பாக வணிகத்தில் ஈடுபட்டு சாதிக்க விரும்புபவர்கள் மற்றும் இசைப் பிரியர்கள் இவர் கடந்து வந்த வெற்றிப்பாதையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். நம் வளர்தொழில் இதழுக்காக இவரை பேட்டி கண்டோம். நமக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து,
”என் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பூமாலை கிராமம். பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து எனக்கு பிடித்த எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பாடப் பிரிவில் டிப்ளமோ படித்தேன். என் தந்தையார் திரு. ஜான், ஒர் அற்புதமான ஆளுமை குணம் கொண்டவர். விவசாயியான அவர் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு புதுமை இருக்கும், ஒரு முழுமை இருக்கும்.
ஒரே வேலையை என் தந்தை உள்பட ஜந்து பேர் தனித்தனியாக செய்வார்கள். என் தந்தையார் முடிக்கும்போது அதில் ஒரு மாறுதல் தெரியும் அவசியம் ஏற்படின் பொதுப் பிரச்சனைகளிலும் அவர் இறங்குவார். என் தந்தையின் முனைப்புக்குப் பிறகுதான் எங்கள் கிராமத்திற்குள் அரசுப் பேருந்து வந்தது. பால் கூட்டுறவு மையம் செயல் படத்தொடங்கியது.
என்னுடன் பிறந்தவர்கள் ஜந்து சகோதரிகள் மூன்று சகோதரர்கள். பெரிய குடும்பம். குடும்பத்தையும் நன்கு கவனித்துக் கொள்வார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் தந்தையாருடன் சேர்ந்து விவசாயத் தொழிலில் ஈடுபடுவேன். எந்த வேலையாக இருந்தாலும் அதை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற பாடத்தை அவரிடம் கற்றேன். எதையும் திறம்பட செய்ய வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டேன்.
என்னைப் போல என் அண்ணன் திரு. பேபி ஜானும் எலக்ட்ரானிக் படித்து இருந்தார் அது வானொலி, டேப்-ரெக்கார்டர் புழக்கத்தில் இருந்த காலம். என் அண்ணனுக்கு திருச்சூரில் இருந்த பிலிப்ஸ் நிறுவனத்திலும், எனக்கு மர்பி நிறுவனத்திலும் பழுது நீக்குபவர்களாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
பின் என் அண்ணன் நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் சர்வீஸ் சென்டர் வைத்து வீட்டில் இருந்தபடியே தொழில் செய்தார். நான் பணி முடித்து இரவில் அங்கு சென்று வேலை செய்வேன். பணித்திறனில் அண்ணனையும் முந்த வேண்டும் என்று முயற்சி செய்வேன்
எங்கள் இருவரின் திறன் திருச்சூரைத் தாண்டி பரவியது. உள்ளூர் சர்வீஸ் சென்டரில் பழுது பார்க்க முடியாமல் கைவிடப்பட்ட வானொலிப்பெட்டி, விசிஆர் மற்றும் ஆடியோ கருவிகள் எங்களிடம் வந்தன. இந்த வகையில் பல்வேறு சாதனங்களையும் பழுது நீக்கிக் கொடுத்தோம். உலகத்தரம் வாய்ந்த பல்வேறு வெளிநாட்டுக் கருவிகளின் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் அப்போது காணக் கிடைத்தன. நள்ளிரவு தாண்டி விடியற் காலை மூன்று மணி வரை கூட அங்கு வேலை செய்த நாட்கள் பல.
தொலைக்காட்சி அறிமுகமான போது, அது தொடர்பான பயிற்சி வகுப்பில் சேர 1980 ல் சென்னை வந்தேன். திருவல்லிக்கேனியில் செயல்பட்ட அந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பல நுட்பங்களை தெரிந்து கொண்டேன். என் அண்ணனின் நண்பரான திரு. ஜெய்சன் அண்ணாசாலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். சர்வீஸ் துறையில் எனக்கு இருந்த திறமையை அறிந்து கொண்ட அவர், ஆடியோ தொடர்புடைய டேப் ரெக்கார்டர், ஆம்ப்ளிஃபயர், ஸ்பீக்கர் முதலான கருவிகளை பழுது நீக்கிக் கொடுத்து பராமரிக்கும் மையத்தை உடனே தொடங்கு என்று சொல்லி அதற்கான ஏற்பாட்டையும் உடன் இருந்து செய்து கொடுத்தார்.
அண்ணாசாலையில் நூறு சதுர அடி கொண்ட கடையை மாத வாடகை ரூ 500 என்றவாறு பேசி முடித்து சர்வீஸ் சென்டரைத் தொடங்கினேன் திரு. ஜெய்சன், தொடர்ந்து அடுத்த கட்டமாக சர்வீஸ் சென்டர் திறப்பும் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 1990 ல் என் சர்வீஸ் சென்டரில் இருபது பேர் வேலை பார்த்தனர்.
வட மாநிலங்களில் இருந்து மட்டும் அல்ல அண்டை நாடுகளில் இருந்தும் அங்குள்ள சர்வீஸ் சென்டர்களில் கைவிடப்பட்ட ஆடியோ கருவிகள் எங்களைத் தேடி வந்தன. எங்கள் நிறுவனத்தின் புகழ் எல்லா திசைகளிலும் பரவியது.
ஆடியோ உலகம் ஒரு கடல் போன்றது. மேலைநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஒரு சில வகை ஆம்ப்ளிஃபயர் கருவிகள் கோடி ரூபாய்களில் விற்கப்படுகின்றன. மெக்கினடோஷ் (Macintosh), மார்க் லிவின்சன் (Mark Levinson), க்ரெல் (Krell) போன்ற மதிப்பு மிக்க வெளிநாட்டு தயாரிப்புகளை எங்களால் எளிதாக கையாள முடிந்த போது தோன்றிய எண்ணம்தான் மேக் இன் இந்தியா திட்டம். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் ஏற்பட்ட இந்த பொறிதான் எங்கள் டார்வின் நிறுவனத்தின் செயல்பாடாக மாறியது.
இப்போது பல இந்திய நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை வாங்கி, அதில் தங்கள் நிறுவனப் பெயரைப் பொறித்து விற்பனை செய்கி றார்கள். ஆனால், எங்களுடைய படைப்புகள் முற்றிலும் இங்கு தயாரிக்கப்படுபவை.
தொழில்நுட்பத்தில் நாங்கள் மிகவும் வலுவாக இருப்பதால், எந்த வெளிநாடும் கொடுக்க முடியாத தரத்தை குறைந்த விலையில் கொடுக்கிறோம். சான்றுக்கு ரூ 15 லட்சம் ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் அமெரிக்க தயாரிப்பு ஒலி பெருக்கிக்கு ஈடான கருவியை ரூ. 5 லட்சம் விலையில் நாங்கள் கொடுக்கிறோம்.
இன்றைக்கு சீன தயாரிப்புகள் அனைத்துத் துறைகளிலும் ஆக்கிரமித்து நிற்கின்றன. ஆடியோ உலகமும் இதில் அடங்கும். ஆனால் தொழில்நுட்ப அடிப்படையில் வளர்ந்த நாங்கள், எங்களுக்கென்று ஒரு வாடிக்கையாளர் கட்டமைப்புடன் இருப்பதால் வணிகத்தில் உறுதியாக நிற்கிறோம்.
இசைப் பிரியனான நான், பூக்களையும், புத்தகங்களையும், பாடல்களையும் ரசித்து நேசிப்பவன். தினமும் மூன்று மணி நேரம் நூல் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவன் இன்றைக்கும் ஒரு மணி நேரம் புத்தகம் படிக்காமல் இருக்க முடியாது.
இசை உலகில் ஏற்படும் மாற்றத்தை உணரும் முதல்கட்ட ரசிகர்ளில் ஒருவனாக நான் இருப்பேன். நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. எனவேதான் நேற்றையை விட என்னால் இன்று வலுவாக இருக்க முடிகிறது. இத்துறையில் யாரையும் போட்டியாளராகக் கருதாமல் வளர்வதையே நான் விரும்புகிறேன்.
சில ஆண்டுக்குள் முன்பு இசைக்கான ஒர் ஆங்கில மாத இதழ் வெளி வந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது. எனவே இசைப் பிரியர்கள் நூறுபேர்களை தேர்வு செய்து மாதம்தோறும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு என் செலவில் அந்த இதழை அனுப்பி வைத்தேன்.
இசைஞானி இளையராஜாவை சிறப்பிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இளையராஜா பங்கேற்ற அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து அனைத்துப் பணிகளையும் செய்தேன். இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட போது என் நிறுவனம் அமைந்து உள்ள தெரு முழுவதும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினேன்.
இவையெல்லாம் இயல்பாக நான் செய்தது. இசை மீதும் நம் இசைக் கலைஞர்கள் மீதும் இந்த மண்ணின் மீதும் கொண்ட பற்றின் வெளிப்பாடு. அதே நேரம் இந்த மண்ணும் இங்குள்ள வளங்களும் காப்பற்றப்பட வேண்டுமென்றால் நம் விவசாயமும் சிறு தொழில்களும் வளர வேண்டும் என்பதை நம் அறிவு சுட்டிக்காட்டுகிறது. இந்த சமூகப்பார்வையை இளைய தலைமுறை யிடம் சொல்லிப் புரிய வைக்கும் சமூகக் கடமையும் நமக்கு உண்டு. என் வெற்றிக்கு முதல் காரணம் என் தந்தையார் என்றால் அடுத்த காரணம் என் துணைவியார் திருமதி. லிசா தங்கச்சன் ஆவார். பொறுமையின் இலக்கணமான அவருடைய உறுதுணை எனக்கு வலுவான உதவி ஆகும்.
இன்றைக்கு ஆடியோ உலகில் உற்பத்தி, விற்பனை, சேவை ஆகிய மூன்று பிரிவுகளிலும் சிறந்த சேவை கொடுக்கிறோம். இந்த வகையில், எங்களுடைய டார்வின் டெக்னாலஜீஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ் & டெக்னாலஜீஸ் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இசை உலகிற்கும் வாடிக்கையாளர்களுக்கும் தங்களுடைய பங்களிப்பை ஆற்றி வருகின்றன.
இந்தியாவின் முதல் ஹோம் தியேட்டரை நிறுவிக் கொடுத்தவர்கள் நாங்கள். எனவே, இந்தத் துறையில் எவ்வளவு அனுபவம் இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவை இல்லை. இன்றைக்கு அழகான பல அரங்குகளில் ஒலி பெருக்கி வசதி சீராக இருப்பது இல்லை. இதனால் பார்வையாளர்களுக்கு ஒலி தெளிவாகக் கேட்பது இல்லை. இது நுட்பமாக ஆய்ந்து செய்ய வேண்டிய பணி. நாங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்கள், இலக்கிய அரங்குகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு சிறப்பான ஆடியோ வசதியை செய்து கொடுத்து பாராட்டுகள் பெற்றிருக்கிறோம்.
எந்த நாட்டுத் தயாரிப்புகளாக இருந்தாலும் எங்களால் சர்வீஸ் செய்து தர முடியும். தரமான எங்களுடைய தயாரிப்புகளை வாங்கி விற்பனை செய்ய விரும்புவோருக்கும் வாய்ப்பு தருகிறோம்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் நான் பார்த்து, படித்து, பயின்ற நுட்பங்களை இளைய தலைமுறைக்கு பகிர விரும்புகிறேன், நான் கற்றுக் கொண்டவற்றை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதை வாழ்நாள் பயனாகக் கருதுகிறேன்.” என்கிறார் திரு. ஜான் தங்கச்சன்
– ம.வி. ராஜதுரை