சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம்.
ஆனால் கல்லூரிகளிலும் இந்தத் தேவை இருக்கிறது, அங்கே என்ன செய்வது என்ற வாதம் வந்தது. நண்பர் ஒருவர், ஒரு அரசு கல்லூரியில் அறிவியல் சிறப்புரைக்காக சென்று அங்கே நிலவிய பேராசிரியர்களுக்கு இடையேயான உட்சண்டை அரசியலில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு திரும்ப வந்த அனுபவத்தை சொன்னார்.
அரசு கல்லூரியுடனான எனது அனுபவம் இன்னமும் கொடுமை.
சென்ற ஆண்டு நண்பர் ஒருவர் வேலை பார்த்த ஒரு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழாவில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தரும், பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தை அனைத்து மாணவிகளுக்கும் கொடுக்க, கவிஞர் தம்பியிடம் எழுநூறு பிரதிகள் வாங்கினேன்.
பல முயற்சிகளுக்கு பின்னரும் அந்த கல்லூரியில் இருந்த பேராசிரியர்களின் ஈகோ சண்டையினால் புத்தகம் வழங்கும் நிகழ்வு நடக்கவே இல்லை. ஆனால் ”நிகழ்ச்சியில் லட்டு பூந்தி கொடுக்க ஸ்பான்சர் செய்வீர்களா?” என கேட்டு கடுப்பு ஏற்றினார்கள். சலித்து போய் விட்டு விட்டேன்.
ஒரு ஆண்டாக நண்பர் வீட்டுப் பரணில் புத்தகங்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சரி நாம் படித்த கல்லூரியில் கேட்டுப் பார்ப்போம் என்று அங்கே பேராசிரியராக இருக்கும் என் வகுப்புத் தோழியிடம் (திருமதி. கோகிலா குமார்) கேட்டேன். அது ஒரு தனியார் கல்லூரிதான், ஆனால் ஏற்றுக் கொண்டனர்.
அண்மையில் நடந்த கல்லூரி ஆண்டு விழாவில் புத்தகத்தை மேடையில் வெளியிட்டு, அனைத்து மாணவர், மாணவியர், பேராசிரியர்களுக்கும் உலக மகளிர் நாள் பரிசாக வழங்க இருக்கிறார்கள். மகிழ்ச்சி.
அரசு கல்லூரிகளோடு தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுவதில் இருக்கும் பெரும் சிக்கல் அங்கே வேலை பார்க்கும் சில பேராசிரியர்களின் ஈகோ. நான் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை என்னால் எளிதாக அணுக முடியும். ஏனெனில் அவர்கள் ஈகோ ஏதுவும் இல்லாமல் என்னை சமமாக நடத்துவார்கள்.
அந்த மனநிலையை அரசு கல்வி நிலையங்களில் வேலை பார்ப்போர் வளர்த்துக் கொள்ளாமல் வீண் மமதையில் மிதந்தால் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை கெடுப்பதில் அவர்களே முன்னின்று செயல்படுகிறார்கள் என்றே பொருள் படும்.
– கபிலன் காமராஜ்