பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிறுவன ஊழியர்கள் கூட்டம் கூட்டுகிறது என்றால் கேலியாக பல விமர்சனங்கள் எழும், ‘வேஸ்ட்!’ உருப்படியா எதுவும் ஆகப்போறதில்ல! , ‘கூடுவது, உண்பது அவ்வளவுதான்’ என்பார்கள்.
இப்போது புதிய பொருளாதாரம், எகிறும் ஊதியங்கள், கணினியின் புதுத் தன்மை, வெளிநாட்டு கொள்கைகள் போன்ற பல காரணிகளால் எல்லா நிறுவனங்களும் நிறுவ னத்தின் தலைமை கூட்டும் பெரிய கூட்டங்களை ஒரளவுக்கேனும் பயனுள்ளதாக ஆக்க முயற்சி செய்து வருகிறார்கள். பொது முடக்கம் காரணமாக நிறுத்து வைக்கப்பட்டு இருக்கும் இத்தகைய கூட்டங்களை நிறுவனங்கள் விரைவிலேயே மாஸ்க் உடன் கூட்டத்தான் போகின்றன. அவ்வாறு கூட்டப்படும் கூட்டங்களை எவ்விதம் பயனுள்ளதாக நடத்தலாம்?
கூட்டம் கூட்டுவதின் நோக்கம் என்ன? எதற்காகக் கூட்டுகிறீர்கள்? விரிவாக்கத்திற்கா ? விற்பனையை அதிகரிக்கவா? ஆட் குறைப்பா? என எதைப் பற்றி பேசுவதாக இருந்தாலும் திட்டவட்டமான குறிப்புகளை தயாரித்து பேச வேண்டும்.
கூட்டத்தில் இருப்பவர்களில் சிலர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் ஏடாகூடமான கேள்விக் குரல்களை மட்டும் எழுப்பி விட்டு தான் சொல்லாதது போல அமைதியாக இருப்பார்கள். கிளை தொடங்க வேண்டுமென்றால் கூடுதல் ஊழியர் தேவை என்று ஒரு கூட்டத்தை கூட்டும் போது, ‘இருக்கிறவர்கள் ராஜினாமா செய்தால் புதிதாக போடுவதில்லையே’ என ஒரு முகவரி இல்லாத குரல் எழுந்தால் ‘எங்களுக்கு தெரியும் என்று பட்டென்று கூறாதீர்கள். ‘யோசனையில் உள்ளது என தெரிவிக்கலாம்.
‘நமது’ நிறுவனம், உங்கள் ஒத்துழைப்பு போன்ற சொற்களை இயன்ற வரையில் பயன் படுத்துங்கள்.
தொடங்கும் போதே ‘கேள்விகளை இறுதியில் கேளுங்கள் ‘எனச் சொல்லி விடுங்கள் சில உறுத்தல்கள் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான உங்களுக்கே இருக்கலாம். எக்குத் தப்பாக, சங்கடத்தில் ஆழ்த்தும்படி வினா வந்தால் கோபம் கொள்ளாதீர்கள் மறக்காமல் கேள்வியின் உள்நோக்கத்தை குறித்துக் கொண்டு கடைசியில் தெளிவு படுத்துங்கள்.
கூட்டத்தின் போது ஒரு சிலர் ஏதாவது ஒரு பொய்க் காரணம் சொல்லி எழுந்து போவார்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். நிறைய பேர் புறக்கணித்தால் மட்டும் கண்டிப்பு காட்டுங்கள்.
ஊழியர்களின் பெயர்கள் அவர்களின் குடும்ப சூழ்நிலை இவை தெரிந்து நினைவில் இருந்தால் அது நன்கு பயனளிக்கும். பதில் அளிக்கையில் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களிடம் பேசுங்கள்.
கூட்டத்தில் எவ்வளவு தீர்மானமாக சிலவற்றை விட்டுக் கொடுக்காமல் பேசியிருப்பினும் அலுவலக கூட்டம் முடிந்ததும் விருந்து அல்லது சிற்றுண்டியின் போது தொடர்புள்ளவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் ஆகியவற்றை விசாரித்து அக்கறை காட்டுங்கள்.
அரசு நிறுவனம் அரசு வங்கி என்றால் நிர்வாகம் சில முக்கிய முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க இயலாது . கட்டுப்பாடுகள் பல என்றாலும் இயன்ற வரை பொறுமை இழக்காமல் பேசி அவ்வப்போது பெயரை குறிப்பிட்டு பேசினால் உறுதியாகப் பயனளிக்கும்!
– வாதூலன்