தொழிலுக்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு தொடங்கினால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். தொடங்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட அடிப்படை காரணிகள் அனைத்து வியாபாரத்திற்கும் பொருந்தும்.
அடிப்படைக் காரணிகள்:
1.தொடக்க காலக் கட்டங்களில் வேலைக்கு நிறைய ஆட்களை, நிறைய சம்பளத்துக்கு நியமிப்பதை குறைத்துக் கொண்டு மிகத் தேவையான பணியாளர்களை மட்டும் சேர்த்து வியாபாரத்தை பெருக்க வேண்டும். வணிக வளர்ச்சிக்கு ஏற்ப பின்னர் ஆட்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
2.செய்யும் தொழிலின் மீது அளவு கடந்த ஆர்வமும் அக்கறையும் இருப்பது நல்லது.
3.உற்பத்தி செய்யக் கூடிய பொருளோ அல்லது சேவையோ மக்களின் உண்மை தேவையை நிறைவு செய்வதாக இருந்தால் மிகவும் நல்லது.
4.தெளிவான குறிக்கோள், பொறுமை, நேர்முகச் சிந்தனை மூன்றும் தொழிலை வளம் பெறச் செய்யும் காரணிகள்.
5.தோல்விகள் நம்மை தோற்கடிக்க முடியாது என்ற எண்ணமும் அதே நேரத்தில் தோல்விகளின் மூலம் கற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் இருந்தாலே 50 விழுக்காடு வெற்றி கிடைத்து விட்டதாக கொள்ளலாம்.
6.கூட்டுத் தொழில் தொடங்க இருப்போர் தங்கள் தொழிற்கூட்டாளியைத் தெரிவு செய்வதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்துவது மிகவும் முக்கியம். கூட்டாளிகளாக சேர்ந்து தொடங்கிய நிறைய நிறுவனங்கள் உடைந்து சிதறும் கதைகள் நாம் அறிந்ததே.
மேலாண்மை குறைபாடுகள்:
வியாபார உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை தொழில் வளர்ச்சியின் முக்கிய தூண்களான பணம், கொள்முதல், விற்பனை, உற்பத்தி மற்றும் திறமையான ஊழியர் களை தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றில் செலுத்துவது மிகவும் சிறந்தது.
read also: வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்
போதிய பணமின்மை:
வியாபாரம் செய்ய நினைக்கும் சிலர் செய்யும் முக்கிய தவறு, தான் செய்யப் போகும் வியாபாரத்திற்கான முதலீட்டுத் தொகையை குறைத்து மதிப்பிடுவது. வியாபாரத்தைத் தொடங்குவதற்கு மட்டும் இல்லாமல் அதில் நிலைத்து நிற்பதற்கான பணத்துடனும் தொழில் தொடங்குவது முக்கியத் தேவையாகும். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை நிலவரங்கள் கை கொடுக்குமா? விற்பனை மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை முன்னரே சரியாக கணக்கிட முடியாது. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மக்களை சென்றடைய சிறிது காலம் பிடிக்கலாம். அதுவரை தாக்குப் பிடிக்கும் அளவுக்கு நம்மிடம் முதலீடு இருக்க வேண்டும்.
இடத்தெரிவு:
எங்கு வியாபாரத்தைத் தொடங்க போகிறோம்? என்ன வியாபாரம் செய்ய போகிறோம்? நாம் தெரிவு செய்திருக்கும் இடம் நம்முடைய வியாபாரத்திற்குப் பொருத்தமான இடம்தானா? என்பது போன்ற சில ஆராய்ச்சி வேலைகளை வியாபாரப் பணிகளைத் தொடங்கும் முன் கருத்தில் கொள்வது நல்லது.
அகலக்கால்:
வியாபாரத்தைத் தொடங்கும் பலரும் சிறு வெற்றிகளுக்குப் பின் தொழிலை பெரிய அளவில் விரிவு படுத்துவதும் அதில் அனைத்தையும் இழந்து விடுவதும் காலங்காலமாக நடைபெறுகிறது. இருக்கும் வியாபாரத்தை விரிவு படுத்துவதை தீவிர யோசனைக்குப்பின் சிறிது சிறிதாக செய்ய வேண்டுமே தவிர ஒரேஅடியாக அகலக் கால் வைத்தல் கூடாது.
-வேணி