பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.
சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும்.
நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள(Self Realisation) வேண்டும். ஒவ்வொரு வரிடமும் எண்ணற்ற ஆற்றல்கள் திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டுவர அவற்றைப் பற்றிய அறிவு வேண்டும். நாம் வளர, வளர உள்ளமும் வளர்கின்றது. உடல் வளர்ச்சியை விட உள்ளத்தின் வளர்ச்சி விரைவானது. உள்ளத்தின் வேட்கை, ஆற்றல் அளவிடற்கரியது. அது மிகவும் நுட்பமானது.
உள்ளம் மூன்று நிலைகளில் செயல்படும். ஒன்று மேல் மனம். வெளிப்படையாக, அந்தந்த நேரத்திற்கேற்ப நம்மை இயக்கும். இரண்டாவது, நடுமனம். எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளும் பெட்டகம். கணிப்பொறியின் சேமிப்புக் கிடங்கு போன்றது. தேவைக்கு அதனை வெளியில் கொண்டு வந்து பயன்படுத்துவோம். சான்றாக, தேர்விற்கு படிப்பதைக் கூறலாம். எல்லாவற்றையும் வாங்கி வைத்திருந்து, தேர்வின் பொழுது கேட்கப் பெற்ற கேள்விக்கு விடையை மட்டும் தருவது நடுமனம். மூன்றாவது, ஆழ்மனம். இது உள்ளார்ந்தது. எப்பொழுதாவது வெளிப்படும்.
நமது குடும்பம், பள்ளி, கல்லூரி, நண் பர் குழாம் எல்லாம் நமது உள்ளத்தைப் பண்படுத்த, வளர்க்க உதவுகின்றன. உள்ள முதிர்ச்சிதான் உள்ளத் திண்மையாக, உறுதிப்பாடாக வெளிப்படுகின்றது.
”வெள்ளத்தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு”, என்றும்,
”எண்ணிய எண்ணியாங்கு எய்துவ எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்”,
என்ற இரண்டு குறட்பாக்களும் உள்ளத்தின் சிறப்பையும் ஆற்றலையும் கூறுகின்றன.
கல்வியின் மூலமும், பல்வேறு நூல்களைப் படிப்பது, பலரோடு பழகுவது, பல இடங்களுக்குச் செல்வது என பல வழிகளில் அறிவைப் பெருக்குகின்றோம். மூளையை வளப்படுத்துவதும், கூர்மைப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
read also:உன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..!
தன்னை, தனக்குள் இருக்கும் மூலதனத்தை அறிந்து கொண்டவர்கள் செயல்பாடு தனி வகையாக இருக்கும். அவர்கள் மற்றவர்களை அப்படியே பின்பற்ற மாட்டார்கள். மற்றவர்கள் செய்கின்ற தொழிலைச் செய்தாலும், தனிவழியில் அவர்கள் செயல்பாடு இருக்கும்.
ஒரு சாதனையின் தொடக்கம் ஒரு கருத்தாக (Idea) இருக்கும். மற்றவர்களுக்கு, அது கற்பனையாகத் தோன்றும் செயல்பட முடியாததாக இருக்கும். பெரும்பாலும் சாதனையாளர்களின் செயல்பாட்டில் கீழ்க்கண்ட இயல்புகள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்:
1. தன்னைப் பற்றிய அறிவு-விழிப்புணர்வு.
2. தன்னூக்கம் (Personal Motivation)- தன்னைத் தானே செயல்படத் தூண்டும் எண்ணத் திண்மை. இடர்ப்பாடுகளைத் துச்சமாக எண்ணி முன்னேறும் மன முதிர்ச்சி.
3. முயற்சி- விடாமுயற்சி. தோல்வி கண்டு துவளாமை. நோக்கத்தை நோக்கி முன்னேறுதல்.
4. சுய கட்டுப்பாடு- ஒழுக்கம், கவனம் சிதறாமை, தற்காலிக சுக போகங்களில் நாட்ட மின்மை.
5.உழைப்பு- அறிவார்ந்த, ஈடுபாட்டோடு கூடிய உழைப்பு. உழைப்பில் இன்பம்.
– டாக்டர் மா.பா.குருசாமி