Latest Posts

லலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை?

- Advertisement -

தமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில் லலிதா ஜுவல்லரியை திரு. கந்தசாமி எப்படி வளர்த்தார்?

1931 – ம் ஆண்டு மதுரையில் பிறந்த கந்தசாமி, தொழில் செய்வதற்காக இலங்கை சென்றிருந்த தனது தந்தையைப் பின்பற்றி தனது பத்தாம் வயதிலேயே இலங்கை சென்றார். செட்டியார்களிடம் வேலை பார்த்த அனுபவத்தில், கொழும்பில் 1951-ம் ஆண்டு தனது நகை வியாபாரத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு இருபது வயதுதான்.

அந்தக் காலத்தில் எல்லாம் இப்போது உள்ளது போல் நகைகள் வெளியே தெரியும்படி அடுக்கி வைக்கும் ஷோ கேஸ்கள் எல்லாம் கிடையாது. பெரிய இரும்புப் பெட்டிகளில்தான் வைத்து இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் வரும்போது எடுத்துக் காட்டி விற்பனை செய்வார்கள். ஒரு வியாபாரம் முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும். கந்தசாமி இந்த முறையை மாற்றி கண்ணாடி ஷோ கேஸ்களை செய்து அவற்றுக்குள் நகைகளை பார்வையாக அடுக்கி வைத்தார். கடையை நன்கு அலங்கரித்தார். இதைப் பார்த்த மற்ற வணிகர்கள், ‘சின்னப் பையன், நிதானம் இல்லாமல் செலவு செய்கிறான்’ என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் இவருடைய முயற்சிக்கு நல்ல பயன் இருந்தது.

அதன் பிறகு கடையைப் பிரபலப்படுத்த விளம்பரங்களைச் செய்தார். பத்திரிகைகள், வானொலி வாயிலாக இலங்கை மட்டும் இல்லாமல் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் நடுவில் லலிதா ஜுவல்லரி பெயரைப் பதிய வைத்தார். வளையல், நெக்லஸ் போன்ற நகைகளை, அப்போது வந்த புதிய தமிழ் சினிமாக்களில் நடிகைகள் அணிந்து வரும் மாடல்களில் செய்து விற்பனைக்கு விட்டார். அப்போதைய பெண்கள் தங்கள் அலங்காரத்துக்கு நடிகைகளை அதிக அளவில் பின்பற்றிய காலம் அது. அவர்கள் கட்டியதைப் பொன்ற சேலைகளை வாங்குவது, அவர்களைப் போலவே பிளவுஸ் தைத்துக் கொள்வது, அவர்களைப் போல் முடி அலங்காரம் செய்து கொள்வது என்பது சாதாரணமாக இருந்தது. கல்யாணப் பரிசு படம் வந்த போது இவருடைய கடையில் கல்யாணப் பரிசு வளையல் பரபரப்பாக விற்பனை ஆனது.

தமிழ்ப் படங்கள் இலங்கையில் வெளியிடப்படும் போது, முதல் நாள், சிறப்புக் காட்சிகள் நடத்துவதற்கு திரை அரங்குகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வார். அந்த காட்சிகளுக்கான டிக்கெட் இவரது கடையிலேயே விற்கப்படும். இதை பத்திரிகைகளிலும், வானொலியிலும் விளம்பரப்படுத்தி விடுவார். இந்த விளம்பரங்களப் பார்த்து டிக்கெட் வாங்க கடையில் கூட்டம் அலை மோதும். அனைவர் நடுவிலும் லலிதா ஜுவல்லரி பெயர் ஆழமாகப் பதியும். காட்சி முடிந்த பிறகு குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும் ரசிகர்களுக்கு நகைகளைப் பரிசாக அளிக்கும் திட்டத்தையும் நடைமுறைப் படுத்தினார்.

வானொலியில் சிந்தனைப் போட்டிகளை நடத்தி பரிசு அளித்தார். இலங்கை தொலைக் காட்சி தொடங்கப்பட்ட போது இவரது நிறுவனம்தான் தமிழ்ப் படங்களை ஸ்பான்சர் செய்தது. ”தரமான பொருட்கள்தானே என்று நினைத்துக் கொண்டு முறையான விளம்பரங்களைச் செய்யாவிட்டால், எந்த வியாபாரமுமே நம்பிக்கை தருவதாக அமையாது” என்பதில் உறுதியாக இருந்தவர் திரு. கந்தசாமி.

கொழும்புவுக்கு அடுத்தபடியாக 1983-ல் சென்னையில் லலிதா ஜுவல்லரியைத் தொடங்கி இங்கும் தனது கடையை முதன்மையான நகைக் கடைகளில் ஒன்றாக வளர்த்து எடுத்தார். இவரது மறைவுக்குப் பிறகு, இவருடைய மகன் சென்னை லலிதா ஜுவல்லரியை திரு. கிரன்குமாருக்கு விற்பனை செய்து விட்டார். ஆனாலும் இலங்கையில் உள்ள லலிதா ஜுவல்லரியை அதே பெயரில் திரு. செல்லகுமார் கந்தசாமி அங்கே நடத்தி வருகிறார்.

சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கிய கிரன்குமார், தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் பதினைந்து கிளைகளுக்கு மேல் தொடங்கி விட்டார். கந்தசாமியைப் போலவே கிரன்குமாரும் தனது இருபது வயதில் நகைத் தொழிலைத் தொடங்கியவர். இரண்டு தலைமுறைக்கு முன்னர் இவரது குடும்பம் இராஜஸ்தானில் இருந்து ஆந்திர மாநிலம், நெல்லூரில் குடியேறியது. இவருடைய அப்பா அங்கே ஒரு அடகுக்கடையை நடத்திக் கொண்டு இருந்தார். பள்ளிப் படிப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்ட கிரன்குமார், தன்னுடைய அம்மாவின் நகைகளை ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து நெல்லூரில் உள்ள பொற்கொல்லர்களிடம் தங்கம் கொடுத்து நகைகளைச் செய்து வாங்கி சென்னை மற்றும் பல ஊர்களிலும் உள்ள நகைக் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். அப்படித்தான் சென்னை லலிதா ஜுவல்லரிக்கும் நகைகளை சப்ளை செய்து வந்தார்.

மற்ற நகை மொத்த வியாபாரிகளை விட சிறிது குறைந்த விலைக்கு கொடுத்து தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தினார். 1999- ம் ஆண்டு சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கி மொத்த வணிகத்தில் இருந்து சில்லரை வணிகத்துக்கு மாறினார். பலவற்றில் இவருக்கும் கந்தசாமிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. இவரும் விளம்பரங்கள் செய்வதில் புதுமைகளைப் புகுத்துவதிலும், விளம்பரங்களுக்காக செலவழிப்பதிலும் தயக்கம் காட்டாதவர். மக்களின் மனநிலை உணர்ந்த அவர்களுக்கு ஏற்ப புதிய திட்டங்களை அறிமுகப் படுத்துவதில் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார், இவர்.

இவருக்கு இரண்டு மகள்கள். ”இருவரும் படித்து விட்டு அவர்கள் விரும்பினால் லலிதா ஜுவல்லரியை இன்னும் வளர்ப்பதில் எனக்கு உதவியாக இருப்பார்கள்.” என்கிறார், திரு. கிரன்குமார்.

– எவ்வி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news