Latest Posts

கடன் வாங்கப் போகிறீர்களா? இவற்றை கவனியுங்கள்!

- Advertisement -

எல்லா மக்களும் தங்கள் தேவைக்கு ஏற்ப வருமானம் உள்ளவர்களாக இருந்த காலம் முன்பு இருந்ததாக நூல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் கொடுப்பாரும் இல்லை, கொள்வாரும் இல்லை என்று கூறுவர். இன்றைய நிலையோ முற்றிலும் தலைகீழானதாகும். எங்கும் கடன், எதிலும் கடன் என்பதே இன்றைய நடைமுறையாக உள்ளது.

வங்கிக்கு வங்கி, தனிநபருக்கு நபர், நிதி நிறுவனத்துக்கு நிறுவனம் என ஒவ்வொருவரும் தனித்தனியாக வட்டி விகிதங்களை வசூலிக்கின்றனர். இது தவிர பல்வேறுபட்ட விதிமுறைகளும் உள்ளன. தவணை தவறினால் அபராத வட்டி, கடனை முன்னதாகச் செலுத்தினால் அதற்குத் தனிவட்டி ஆகியனவும் வழக்கத்தில் உள்ளன. இது தவிர சிறுசிறு காய்கறி விற்பவர்கள், பெட்டிக்கடை நடத்துபவர்கள், கூலி வேலை செய்பவர்களுக்கெல்லாம் தினசரிக் கடன் வழங்கும் கந்து வட்டிக்காரர்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவிக் கிடக்கின்றனர். தொழிற்சாலைகளுக்கு மூலதனக்கடன் மற்றும் நடை முறைச் செலவுக்கான கடன் ஆகியவற்றிற்குத் தனித்தனி வட்டி விகிதம் உண்டு.

Also read: பர்சனல் லோன்: எச்சரிக்கை தேவை

தொழில்களுக்கான கடன்களை அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்குகின்றன.

எந்த நிறுவனம் குறைவான வட்டிக்குக் கடன் தருகிறதோ அதனைத் தேர்வு செய்வது நல்லது. கால் சதவீத வட்டிக் குறைப்பு கூடப் பெரிய அளவு வட்டி சேமிப்பிற்கு வழி வகுக்கும். குறைவான விண்ணப்ப பரிசீலனைக் கட்டணம், முன் கூட்டியே செலுத்த கூடுதல் கட்டணமில்லா வசதி ஆகியவற்றையும் கடன் வாங்கும் போது கவனத்தில் கொள்வது நல்லது.

வீட்டு பயன்பாட்டுப் பொருட்களுக்கான கடன்களிலும், பரிசீலனைக் கட்டணம், வேறுபட்ட வட்டி விகிதம் போன்றவையும் உண்டு. இந்தக் கடன்கள் குறுகிய காலத்திற்கு ஆனதாகும். ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடன் பெறலாம். ஜீரோ சதவித வட்டி என்று ஆவலைத் தூண்டுவார்கள். இது உண்மை அல்ல. இதற்கு மாறாக பொருட்களின் விலையை உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தி விடுகின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கான லாபத்தை உற்பத்தியாளர்கள் கொடுத்து விடுவர்.

Also read: சின்ன சின்ன சேமிப்பு திட்டங்கள்

கிரடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகளை ஒன்றுக்கு மேற்பட்டு வாங்கி மனம் போனபடி செலவு செய்து திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பது பலருக்கு வாடிக்கையாகி வருகிறது. அதே சமயம் கடன் அட்டைகளை மிக லாபகரமாகப் பயன்படுத்துவர்களும் இருக்கின்றனர்.

வட்டி இல்லாமலே ஒரு மாதம் கடன் கிடைக்கும். நீங்கள் பொருள் வாங்கி, எத்தனை லட்சம் ஆனாலும், அடுத்த தவணைத் தேதிக்குள் முழுத்தொகையும் செலுத்தி விட்டால் வட்டியே செலுத்த வேண்டியது இல்லை. மாதத்தவணை செலுத்துபவர்கள், தவணை தவறிவிட்டால் அபராத வட்டி செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் ரொக்கம் எடுக்கக் கூடாது. பணம் ரொக்கமாக எடுப்பதற்கு குறிப்பிட்ட சதவீதம் அதன் மாதத்தவணைக்கு வட்டி செலுத்த வேண்டும். கூட்டி கழித்துப் பார்த்தால் 50 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.

வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ கேட்டவுடன் கடன் கொடுப்பதில்லை. பல்வேறு தகுதிகளையும் விதிமுறைகளையும் வைத்திருப்பார்கள். கடன் வாங்குபவர்களுக்கு அதனைத் திருப்பிச் செலுத்தும் வசதி உள்ளதா என்பது முதல் தகுதி. பணியில் உள்ளவர்கள் அல்லது வாணிபம் செய்பவர்களின் வருவாய் அளவை மதிப்பீடு செய்வார்கள். இதற்கு முன் கடன் பெற்று இருந்தால் அதனை சரியாக திருப்பி செலுத்தி இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். இந்த தகவலைத் தர இப்போது சிபில் என்ற அமைப்பு காத்துக்கொண்டு இருக்கிறது.

கடன் வாங்குபவர் கவனிக்க வேண்டியவை

கண்ணுக்குத் தெரியாத எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ள விதிகளைக் கொண்ட பல பக்கங்களில் உங்களிடம் கையெழுத்து கேட்பார்கள். அவை முழுவதையும் நீங்கள் படிக்க இயலாது. ஆனாலும் அவற்றில் என்ன இருக்கறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கையெழுத்திடுங்கள். வட்டி விகிதம், தவணைத் தொகை, தவணை செலுத்தும் தேதி முதலியவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்நு கொள்ளுங்கள்.

உங்கள் தவணைத் தொகை மாத வருவாயில் 40 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தவணைத் தொகையை குறிப்பிட்ட தேதியில் தவறாமல் கட்டி வந்தால் நீங்கள் வளர்வீர்கள். கடன் குறையும். அண்மைக் காலமாக கொரோனா பாதிப்பை ஒட்டி புதிய கடன் திட்டங்களை அரசு அறிவுத்து உள்ளது. உங்களுக்கு கடன் தேவை இருந்தால் அவற்றைப் பற்றியும் அறிந்து முயற்சிக்கலாம்.

– கதி. சோலையப்பன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news