பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுடைய ஆற்றலை மேம்படுத்துவதற்கும், மேடையில் பேசுவதற்கும் பயிற்சி தருகிறது, சென்னை சென்டர் ஃபார் டிரெய்னிங் அண்ட் டெவலப்மென்ட் நிறுவனம். அதன் இயக்குநர் திரு. கோ. ஒளிவண்ணன், இத்தகைய பயிற்சிகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறார். பயிற்சிகளின் நோக்கம் குறித்தும், இந்த பயிற்சிகளை ஏராளமானவர்களிடம் கொண்டு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் அவரிடம் கேட்டபோது,.
”இன்றைய தலைமுறை மாணவர்கள் வேகமாக கற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். புதிய தொழில் நுட்பங்களை எளிதாக கையாளும் விதத்தில் துல்லியமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் ஒரு மேம்போக்கான தன்மையும் இருக்கிறது. இந்த மேம்போக்கான தன்மையை உறுதியான தன்மை யாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் அவர்கள் நல்ல உழைப்பாளிகளாகவும், திறமையை வெளிப்படுத்துபவர்களாகவும், தங்கள் துறையில் சிறந்து விளங்கு பவர்களாகவும் மாறுவார்கள்.
மாணவர்களுக்கு நாங்கள் இரண்டு விதமான பயிற்சிகளைத் தருகிறோம். ஒன்று, வாழ்வியல் சார்ந்த ஆற்றலை மேம்படுத்தும் பயிற்சி. இரண்டாவது, மென்திறன் வளர்ப்புப் பயிற்சி.
Also read: சிறிய அளவிலும் முன்பருவ பள்ளிகளை நடத்தலாம்
வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் சிறப்பாக எதிர்கொள்ள வாழ்வியல் பயிற்சியில் கற்றுத் தருகிறோம். குறிப்பாக எந்த சிக்கலுக்கும் தீர்வுகளை எப்படிக் கண்டறிவது, பெற்றோருடனான உறவுகளை சிறப்பாக நிர்வகிப்பது எப்படி, கல்வி நிறுவனங்களில் சிறப்பாக செயல்படுவது எப்படி, மதிப்பெண்களை அதிகம் பெற எப்படி முயற்சிக்க வேண்டும் என்பது போன்ற பயிற்சிகள் இடம் பெற்று இருக்கும். மேலும் படிப்புக்குப் பிறகு தாங்கள் பார்க்கும் வேலைகளை, தொழிலை எப்படி சிறப்பாக செய்வது என்பதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுப்போம்.
மென்திறன் பயிற்சியில் சமூகம் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது, மற்றவர்களுடன் பழகும் முறைகள், நேர்த்தியாக ஆடை அணியும் முறைகள், தோற்றப் பொலிவுடன் இருப்பதன் தேவை, உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல், அறிவு சார்ந்து செயல்படுவதால் ஏற்படும் நன்மைகள், அறிவியல் சிந்தனை என்று பல செய்திகள் இடம்பெறும்.
மேடையில் நின்று சரளமாகவும் தடையின்றியும் பேசவும் பயிற்சி கொடுக்கிறோம்.
மேடைப் பேச்சு சிறப்பாக அமைய பல்வேறு முயற்சிகளைச் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்று, நிறையப் படிப்பது. இன்றைய மாணவர்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுக்கிறோம்.
மாணவர்கள் தவிர, ஆசிரியர்கள் மற்றும் பல்துறை சார்ந்தவர்களுக்கும் திறன் வளப்புப் பயிற்சி அளிக்கிறோம்.
Also read: கணக்குப் பதிவில் இருக்கிறது வளர்ச்சி!
நான், இந்த துறையில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு ரோட்டரி கிளப் அமைப்பும் முதன்மையான காரணங்களில் ஒன்று.
பேச்சுப் பயிற்சிக்கு என தனி சந்தையே உள்ளது. என்னுடைய ‘மேடையில் பேசலாம் வாங்க’ என்ற புத்தகம் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளியிட்டு உள்ளேன். இதுவரை பதினைந்தாயிரம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.
இன்றைக்கு வளரும் மாணவர்களிடம் தொலைக்காட்சி பார்க்காதே, ஸ்மார்ட் போனை துழவாதே என சொல்லிக் கொண்டிருப்பதை விட, தொலைக் காட்சியில் இந்தந்த நிகழ்ச்சியைப் பாரு.. ஸ்மார்ட் போனை படிப்பு சார்ந்த தகவல்களுக்கு பயன்படுத்து என நேர்மறையாக பெற்றோர் கூறினால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்.
அதிக மதிப்பெண்கள் எடுக்க மாணவர்களைத் தூண்டுவதைப் போல, அவர்களை ஆற்றல் மிக்கவர்களாகவும் உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக எங்கள் பயிற்சிகள் அமைவது எங்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இது கொரோனா காலம் என்பதால் எங்கள் பயிற்சிகளை தற்போது ஆன்லைனில் வழங்கிக் கொண்டிருக்கிறோம்,” என்றார், திரு. ஒளிவண்ணன்.
– ஆ.வீ. முத்துப்பாண்டி