வீடு என்பது மனிதனுக்கு அடிப்படைத் தேவை; பொருளாதார வளர்ச்சியின் அளவீடு அது! தனி மனிதரின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வீட்டுவசதி வெளிப் படுத்துகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு கிடைப்பதை அரசு உறுதிப்படுத்துகிறது.
இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர வீடு கட்டும் கட்டுமான தொழில் பயன்பட்டது. 1949ஆம் ஆண்டு இதற்காகச் சட்டம் இயற்றப்பட்டு குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு அரசே வீடு கட்டும் தொழிலில் ஈடுபட்டது.
நிலம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் விவசாயத்துக்கும், குடியிருப்புகள் கட்டவும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் நிலத்தை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிலத்தை குடியிருப்புப் பகுதி, வணிகப் பகுதி, தொழிற்சாலைப் பகுதி, காடுகள் என வரையறை செய்து உள்ளார்கள். இவற்றை மாற்றுவதற்கு அனுமதிப்பது இல்லை.
குடியிருப்புகளின் குறைந்த பட்ச அளவை, அடுக்குமாடி மற்றும் தனிவீடுகளுக்கு அரசே நிர்ணயிக்கிறது. தனி வீடுகளையும் அரசு அல்லது குழுமங்கள் கட்டுவதால் நாடு முழுவதும் அவை ஒன்று போலவே தோற்றம் அளிக்கின்றன. அடுக்குமாடி வீடுகளின் குறைந்த பட்ச அளவு 700 சதுர அடி என உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் சிறிய வேறுபாடு இருக்கலாம். வசதி படைத்தவர் வீடு, மற்றவர் வீடு என்பதை வீட்டின் உள்புறம் உள்ள வண்ணப் பூச்சுகள், அறைகலன்கள் போன்றவை காட்டும்.
Also read: தூக்கி விட்ட வீட்டு மனை விற்பனை!
நியூ ஜெர்சி மாநிலத்தில் வீடுகளின் தேவை அதிகப்பட்டதால் அண்மையில் இந்த குறைந்தபட்ச அளவை 590 சதுர அடி என குறைத்து உள்ளார்கள். 2016 செய்தி மூலம் ஐந்து ஆண்டுகளில் வீடுகளின் பற்றாக்குறை தீர்த்து விடும் என கணிக்கப்படுகிறது. வீட்டுத்தேவை என்பதை ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து திட்டமிடுகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் ஆனாலும், தனி வீடுகளானாலும் சட்டம் ஒட்டிய நிறுவனங்களே அவற்றைப் பராமரிக்க வேண்டும்.
இதனால் வீடு கட்டும் குழுமங்கள் நிரந்தரமாக, தேவையான பணியாளர் களுடன் இயங்குகின்றன. கட்டி முடித்ததும் பராமரிப்பது வாங்கியவர் களின் வேலை என விட்டு ஓட முடியாது. இதனால் கட்டிடங்கள் நல்ல முறையில் கட்டப்படுகின்றன. வாங்கியவர்கள் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியது இல்லை.
நியுஜெர்சி மாநிலத்தில் மால்டன் எனும் நகரில் கட்டப்படும் குடியிருப்புகள் தனி வீடுகளானாலும், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆனாலும் அடித்தளத் துக்கு மட்டுமே காங்க்ரீட் பயன்படுத்தப் படுகிறது. அதற்கு மேல் இரும்பு பாளங்களால் ஆன தூண்கள் தேவைப்படும் இடங்களில் நிறுவப் படுகின்றன. சுவர்கள் மரச் சட்டங் களாலும், ஒட்டுப் பலகையாலும் (Plywood) எழுப்பப்படுகின்றன. மேல் தளமும் மரத்தால் போடப்படுகிறது.
1949 முதல் நம் நாட்டின் வீட்டு வசதி வாரியம் போலத் துறைகளை அமைத்து அடுக்குமாடி குடியிருப்புகளை அரசு கட்டியது. நடுத்தர வருவாய் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் இவற்றால் பயன்பெற்றனர். 1965க்குப் பின்னர் வீடு கட்டும் குழுமங்களுக்கு (Real Estate Companies) வங்கிகள் மூலம் கடன் கொடுத்து தொழில் ஊக்கப்படுத்தப் பட்டது; குறைந்த வட்டிக் கடன் (Subsidised Debit Services) முறை பயன்பட்டது.
1990 இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி அரசுத் துறைகள் கட்டிய வீடுகள் 43 இலட்சம் இருந்ததாகத் தெரிகிறது. 1990 -க்குப் பின்னர் தனியார் குழுமங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. ஆயினும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு அரசு மானியம் கொடுக்கிறது. வீடுகளை இந்தக் குழுமங்கள் விலைக்கும் கொடுக்கின்றன, வாடகைக்கும் விடுகின் றன. எனவே, பலரும் வாடகைக் குடியிருப்புகளில் மனநிறைவு அடைகின் றனர்.
அங்கு பழக்கத்தில் உள்ள காப்புரிமை எண் (Social Security Number) மூலம் குடிமக்களது வீட்டு வசதி கண்டறியப் படுகிறது.
நிலம், வீட்டின் தேவை, அளவு, வகை எல்லாவற்றையும் அரசு கட்டுப் படுத்துவதால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மரம், சிமென்ட், மணல், செங்கல் போன்றவற்றைப் பதுக்குவது மற்றும் மணல் கொள்ளை போன்றவை தவிர்க்கப்படுகின்றன. நிலத்தை காலி மனைகளாகப் பிரிக்க முடியாது என்பதால் விளை நிலங்களும், காடுகளும் பாதுகாக்கப் படுகின்றன. இவற்றில் அரசியல் ஒரு தொழிலாக மாறவில்லை.
பணக்கார நாடான அமெரிக்காவில் குடிசை வாசிகளும், நடைபாதை வாசிகளும் உள்ளனர். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களும் உள்ளனர். பிச்சைக்காரர்களையும் பார்க்க முடியும். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 2017 ஆம் ஆண்டின் புள்ளி விவரக் கணக்கின் படி 2% மக்கள், சுமார் மூன்று முதல் நான்கு இலட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர்.
Also read: தனி வீடு வாங்க ஆர்வம் காட்டுவது ஏன்?
ஒருவர் மாதம் இரண்டாயிரம் டாலருக்குக் கீழ் வருவாய் உடையவராய் இருந்தால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர் என கொள்ளப்படுகின்றார்.
வீடுகட்டும் தொழிலில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ‘கட்டு மானக் குழுமங்களை’ நிறுவி தொழில் செய்யலாம்.. சீனர்கள் இங்கு வீடு கட்டும் தொழில் செய்கிறார்கள். சுற்றுலாத் தலங்களில் தங்கும் சிறிய வீடுகளைக் கட்டுகிறார்கள். 100 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள வீடுகளை சீனர்கள் வடிவமைத்து நல்ல வருமானம் ஈட்டுகிறார்கள். சக்கரங்கள் பொருத்தி காருடன் இழுத்துச் செல்லும் வீடுகளைக் கூட தயாரிக்கிறார்கள்.
சீனாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து தொழில் செய்ய சீன அரசு அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
– நாஞ்சில் நடராசன்