தூக்கி விட்ட வீட்டு மனை விற்பனை!

திரு. தி. நாராயணசாமி பன்முகத்திறன் கொண்டவர். வங்கியில் இருபது ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று வணிகத்தில் கால்பதித்தவர். பித்தளை, அலுமினியம் போன்ற உலோகப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் விற்பனை மையங்களை நடத்தியவர். தற்போது, ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த நாற்பது ஆண்டுகளில், தம் தொழில் வளர்ச்சிக்கு ஒதுக்கிய நேரத்திற்கு ஈடாக சமூக பணிகளிலும் ஈடுபட்டவர். தன் அனுபவம் இளைய தலைமுறைக்குப் பயன்பட வேண்டும் என்ற தாகம் கொண்டவர். அதே எண்ணத்துடன் நம்மிடமும் பேசினார். ‘வளர் தொழில்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து…
”சென்னை, பல்லாவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று இளங்கலை கல்லூரிப் படிப்பை ஏஎம் ஜெயின் கல்லூரியில் முடித்தேன். என் தந்தையார் திரு. தியாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார். அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் அளித்தார். எனவே, எனக்கு வேலைதேட வேண்டிய அவசியம் இல்லை. படிப்பை முடித்த கையோடு தந்தையாருடன் சேர்ந்து பணியாற்றினேன். என் சகோதரர்கள் சிவகுமார், பாலசுப்ரமணியன் ஆகியோரும் இத்தொழிலைக் கற்றுக் தேர்ந்தனர்.
என் தந்தையார் உழைப்பால் உயர்ந்தவர். சிறுவனாக இருந்தபோதே வீடுகளுக்கு தினசரி நாளிதழ்களை விநியோகிக்கும் ‘பேப்பர் பாய்’ பணி செய்தார். படிப்படியாக முன்னேறியவர். ஒரு கட்டத்தில் ஆங்காங் வங்கியில் (Hong Kong Bank) வேலை கிடைத்து பணியாற்றினார். சொந்தத் தொழில் மீது பேரார்வம். கொண்டு இருந்த அவர் வங்கிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று இந்தத் தொழிலை நடத்தினார்.
தந்தையாரிடம் தொழில் கற்று இரண்டு ஆண்டுகள் அவருடன் பணியாற்றி வந்த எனக்கும் ஆங்காங் வங்கியில் வேலை கிடைத்தது. சுமார் இருபது ஆண்டுகள் அங்கு பணியாற்றிய காலம் எனக்கு பல்வேறு படிப்பினைகளைத் தந்தது. தொழில் முனைவோருக்கான சேவைப்பிரிவு, ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த செயல்பாடுகள் உள்பட வாடிக்கையாளர்களுக்கான அனைத்து சேவைப் பிரிவுகளிலும் பணியாற்றினேன்.
நிலையான வருமானம், நிறைய சம்பளம் என்ற சமூக அந்தஸ்துடைய வேலையில் இருந்தாலும் என் தந்தையாரிடம் கற்ற சொந்தத் தொழில் ஆளுமை அடிமனதில் சுடர்விட்டுக் கொண்டு இருந்தது. அந்த எண்ணம் நன்று வளர்ந்த உடன் வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று சென்னை பம்மலில் தொழிற்சாலை ஒன்றை நிறுவினேன்.
“பிரிமியர் கேப்ஸ்” (Premier Capes) என்ற பெயரில் மருந்து பாட்டில்களுக்கு அலுமினிய மூடி தயாரிக்கும் தொழில். மிகச் சிறப்பாக உற்பத்தியும், விற்பனையும் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. காலப்போக்கில் எதிர்பார்த்த வளர்ச்சியை இத்தொழில் தராததால் இதை நிறுத்திவிட்டு, மயிலாப்பூரில் பெரிய முதலீட்டில் ‘பிரவுசிங் சென்டர்’ தொடங்கினேன். இந்த மையங்களை சென்னையில் முதலில் தொடங்கிய சிலரின் நானும் ஒருவன். மக்கள் நெருக்கம் மிகுந்த ‘லஸ் கார்னர்’ அருகே இருந்த எங்கள் கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது.
கணினி சார்ந்த அத்தனை சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்தோம். நாளடைவில் புற்றீசல் போல பிரவுசிங் சென்டர்கள் தோன்றின. எங்களுக்கு நடைபெற்று வந்த வணிகமும் குறைந்தது. முதலீடு உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லாததால், ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன்.
என் தந்தையாரின் உழைப்பாற்றல் என் கண்முன் எப்போதும் நிற்பதுபோல, என் தாயார் திருமதி. சாவித்திரி அவர்களின் ஈகை குணம் என் மனத்தில் ஆழப்பதிந்து விட்டது. இதன் காரணமாக, வங்கிப் பணியில் இருந்த போதும் தொடர்ந்து தொழிலுல் ஈடுபட்டு வந்த போதும் சமூக நலப் பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன்.
குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்தேன். அதன் விளைவாக தொண்டு நிறுவன நண்பர்கள் பலரின் நெருங்கிய நட்பு கிடைத்தது.
என் சகோதரர் திரு. பாலசுப்ரமணியன் உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியதும் நண்பர்கள் மூலம் ஏராளமான தொடர்புகள் கிடைத்தன. தாம்பரம் அருகே நிலம் வாங்கி சிஎம்டிஏ அங்கீகாரம் பெற்று நாங்கள் முதன் முதலாக விற்பனை செய்த வீட்டு மனைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்தன.
நேர்மையாக இத்தொழிலைச் செய்து வருவதால், எங்களின் சேவை பெற்ற ஒவ்வொரு வாடிக்கையாளரும், நண்பரர்களும், புது வாடிக்கையாளரை அனுப்பி வைத்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தொழிலில் நல்ல வளர்ச்சியை எட்டி உள்ளோம். வீட்டுமனைகள் விற்பனை உடன் கட்டுமானப் பணிகளையும் செய்து தருகிறோம்.
“பணமும் பின்பலம் இல்லை” என்ற சொத்தை கருத்தைச் சொல்லியே பலர் பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர். நம் இளைஞர்கள் பலர் நேர்முகத் தேர்வு வரை சென்று அதன் பிறகு இயல்பாக பேச வராத நிலையில் தோல்வி அடைவது அதிகமாக உள்ளது. இத்தகைய இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு முனைவர் திருக்குறள் தாமோதரன் சென்னையில் ஒரு பூங்காவில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய திருவிக பேச்சுப்பயிலரங்கம் இன்று பல்வேறு பூங்காக்களில் நடைபெற்று வருகிறது.
மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெறும் இந்த அரங்கை கடந்த பதினோரு ஆண்டுகளாக நான் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறேன்.
என் மூத்தமகள் திருமதி. ராஜலட்சுமி அமெரிக்காவில் உள்ளார். கணினி வல்லுநரான அவரைப் பார்க்க அவ்வப்போது அங்கு சென்று வருவதுண்டு.
சிறப்பு இயல்புகளைக் கொண்ட இந்தியர்களின் ஆற்றலை அந்த நாடு பயன்படுத்திக் கொள்கிறது. நம் அரசு அவ்வாறு பயன்படுத்தத் தவறுகிறது. வணிகம் மற்றும் சமூகப் பணிகளில் நான் சிறப்பாக செயல்படுவதற்கு என் சகோதரர் பாலசுப்ரமணியன், நண்பர் ஸ்ரீதரன் மற்றும் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று உள்ள என் மனைவி திருமதி. ஆனந்தி, இளைய மகளும் பொறியியல் முதுநிலை பட்டதாரியுமான செல்வி. பாரதி ஆகியோரின் உறுதுணையும் முக்கியக் காரணம்..” என்கிறார். திரு. நாராயணசாமி.
– எம். வி. ராஜதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here