காலநிலைக்கு ஏற்ப விவசாய முறைகளை மாற்றினால் லாபம் பெறலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்றும்போது அதற்காக ஆகும் செலவு என்பது வரவை விட அதிகம் தான். பதிலாக அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் வளரக் கூடிய பயிராக இருந்தால் உழைப்பிற்கான நேரம் என்பது குறையும். சான்றாக, கரும்பு முழுமையாக வளர பத்து மாதங்கள் ஆகும். பிறகு ஒரு மாதம் கழித்துதான் சர்க்கரை ஆலைக்கு செல்லும். பின்பு, அடுத்த நடவு செய்ய மூன்று மாதங்கள் வரை தேவைப் படுகின்றது. அதுமட்டும் இல்லாமல், கரும்பு விளைச்சலின்போது, களை எடுப்பு, தோகை உரிப்பு, வெட்டுக்கூலி ஆகியவற்றிற்கு செலவுகள் ஏற்படும். லாபம் குறைவு தான்.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது, மரவள்ளிக்கிழங்கு சாகுபடி என்பது சிறந்த ஒன்றாக விளக்குகின்றது. அதிலும் முள்ளுவாடி என்ற ரகம் நல்ல விளைச்சலையும், எடை அதிகமாகவும், குறைந்த காலத்தில் வளரக் கூடியதாகவும் இருக்கின்றது.
Also read: மரவள்ளி சாகுபடியில் நல்ல லாபம்
இதை ஒன்பதில் இருந்து பத்து மாதத்திற்குள் அறுவடை செய்யலாம். கரும்பை இரண்டு முறை போடும் காலத்தில், இதை மூன்று முறை போட்டு விடலாம். நல்ல விளைச்சலைத் தரும். நடவு செய்ய முதல்முறை விதைக்குச்சிகள் வாங்கினால் போதும். நடவு செய்ததில் இருந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் தொடந்து தண்ணீர் விடவேண்டும். அதன்பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விட்டால் போதும். ஒரு மாதத்தில் முளைவிடத் தொடங்கும். அதன்பிறகு, பத்து நாட்களுக்கு ஒருமுறை நான்கு மணி நேரம் தண்ணீர் விட்டால் போதும். இரண்டு மாதத்தில் நிழல் விழும் அளவிற்கு வளர்ந்து நிற்கும். எட்டு மாதங்கள் வரை தண்ணீர் விட வேண்டும். ஒன்பதாவது மாதத்தில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். இந்த ரகத்தின் சிறப்பு என்ன வென்றால் ஒரு செடியின் வேரில் 10 கிலோ வரை கிழங்குகள் இருக்கும். ஒரு ஏக்கரில் 18 டன்னிற்கு மேலாக விளைச்சல் எடுக்கலாம். ஒரு டன்னிற்கு ரூ. 8000 என்ற கணக்கில் வாங்கப்படுகின்றது. இதற்கு அடி உரமாக யூரியா, மேல் உரமாக பொட்டாஷ், மற்றும் ஒருமுறை மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால் போதும். இரண்டு முறை மட்டுமே களை எடுத்தால் போதும். செடியின் நிழல் விழுந்தால் களைச்செடிகள் முளைக்காது. உழைப்பு, நேரம், செலவு ஆகியவை குறைந்து வருமானம் அதிகரிக்கும் சிறந்த வாய்ப்பை மரவள்ளிக்கிழங்கின் முள்ளுவாடி ரகம் அளிக்கின்றது.
– மலர்