புகை பிடிப்பதை விட்டொழியுங்கள். உயிராற்றல் என்பது காற்றை நுரையீரலால் உள் இழுத்து உயிர் வளியைப் பிரித்து எடுக்கும் ஆற்றல்தான். புகையிழுப்பு அதற்கு நிகழ்த்தப்படும் தொடர் கேடு.
மது குடிப்பதை விட்டு ஒழியுங்கள். மூளைத்திறன், நீளாயுள், நரம்பியற்கை, தன்னம்பிக்கை, செல்வம் போன்றவற்றைச் சிறிது சிறிதாய் அழிக்கும் கொடிய பழக்கம் அது.
கெட்ட வார்த்தைகள் பேசுவதைத் தவிருங்கள். ஒரு சொல் என்பது உள்ளத்தின் படிவுகளில் இருந்து எழும் மொழி வடிவம். கசடும் கழிவுகளுமான அடிமனச் சேர்க்கை அத்தகைய சொற்களாக வெளிப்படுகிறது. தீச்சொற்களால் தீமைகள் குறித்து நமக்கு இருக்க வேண்டிய நுண்ணுணர்வுகள் கெடும்.
Also read: வணிகக் கதை: புலி தொடங்கிய தொழிற்சாலை!
நெஞ்சாரப் பொய் சொல்லிப் பழகி விட்டால் உங்கள் மனம் உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு காணும் தன்மையை இழந்து விடும். இவ்வாழ்க்கையின் தலைமைச் செயலி மனம்தான். அது நம்புவதும் நிகழ்த்துவதும் துலக்கமாக இருக்க வேண்டும். அதனை உண்மை ஒளியால் தகதகக்கச் செய்யுங்கள்.
யாரால் நம் நேரம் கெடுகிறதோ, யாரால் நமது தன்னம்பிக்கை குலைக்கப்படுகிறதோ அவர்களுடைய நட்பினைத் தவிருங்கள்.
காலையில் வேலை இருக்கிறதோ இல்லையோ, ஆறு மணிக்குள் எழப் பழகுக. ஆழ்ந்த நிலையில் ஆறேழு மணி நேரத் தூக்கம் போதும். இரவில் பத்து முதல் ஐந்து மணிவரை / பதினொன்று முதல் ஆறுவரை – என் பரிந்துரை.
எதனையும் தள்ளிப் போடாதீர்கள். இன்றைக்கு இதனைச் செய்ய வேண்டும் என்றால் அதனைச் செய்து முடித்துப் பழகுங்கள். எதனைத் தள்ளிப் போடுகிறீர்களோ அதனை விலக்குகிறீர்கள் என்றே பொருள். ஒன்றைச் செய்து முடித்து விட்டால்தான் அடுத்த ஒன்றுக்கு முன்னேறுவீர்கள். ஒன்றிலேயே உழல்வதற்குப் பெயர்தான் தேக்கம். இதனால் பயனில்லையே என்று கழிக்காதீர். எதுவும் வீண்போகாது.
ஓரிடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது என்றால் அதனைத் தவிர்க்காதீர்கள். இருக்கும் இடத்தில் இருந்து அவ்வப்போது வேறு இடங்களுக்கு செல்வது பரந்த பட்டறிவைத் தரும். புதிய இடம், புதிய மக்கள் என்றால் வாய்ப்பைத் தவற விடவே கூடாது. இருக்கும் இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றவர்கள் அடைந்த உயரத்தைப் பாருங்கள்.
Also read: சொல்லத் தயங்காதீர்கள் !
உங்கள் தோற்றத்தின் மீது கொண்டிருக்கும் பற்றின்மையை மாற்றிக் கொள்ளுங்கள். நடை உடை மெய்ப்பாடுகளில் ஏதேனும் குறை என்றால் அதனைச் செப்பமாக்குங்கள். நன்கு உடற்பேணுக. நன்கு உடுத்துக.
இவற்றை மறவாமல் கடைப்பிடியுங்கள். ஆண்டின் இறுதியில் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் உருவாகியிருப்பதை உணர்வீர்கள். உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாத வரையில் உங்களுக்குரிய எதுவும் மாறாது என்பதை நினைவில் கொகொள்ளுங்கள்.
– கவிஞர் மகுடேசுவரன்