வணிகராக ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பதிவை பிரிவு 29-ன் படி உரிய அலுவலர் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் நீக்கம் செய்யலாம்.
அ) அதிகாரியே சில காரணங்களுக்காக நீக்கம் செய்யதல்
ஆ) பதிவு செய்த நபரின் இறப்பின் காரணமாக அவருடைய சட்டப்படியான உரிமை உடையவர்களால் அளிக்கப்படும். விண்ணப்பத்தின் அடிப்படையில் நீக்கம் செய்யலாம்.
இ) வணிகம் நிறுத்தப்பட்டாலோ அல்லது உரிமையாளரின் இறப்பைத் தொடர்ந்து வணிகம் முழுவதும் மாற்றப்பட்டலோ அல்லது வேறு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டாலோ அல்லது பிரிக்கப்பட்டாலோ நீக்கம் செய்யலாம்.
ஈ) வணிகக் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது பிரிவு 25(3) -இல் கூறிய நபர் தவிர மற்றவர்கள் பிரிவு22 மற்றும் 24-ன் கீழ் பதிவு செய்து கொள்ளும் வரம்பிற்குள் இருந்தால், வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய முறையிலும் மற்றும் அத்தகைய கால அளவிற்குள் பதிவை நீக்கம் செய்யலாம்.
எப்படி தெரிவிக்க வேண்டும்?
வணிகர் இறந்த தினத்தில் இருந்து முப்பது நாட்களுக்குள் அவருடைய சட்டப்படியான உரிமை உடையவர் வணிக நிறுத்தத்தை படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-16 இன் மூலம் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும். அந்த படிவத்தில் அந்த நாளில் இருந்த கையிருப்பு பொருளின் மதிப்பையும் (stock-in-trade) தெரிவிக்க வேண்டும்.
தானாக முன்வந்து பதிவு செய்து கொண்ட வணிகராக இருந்தால், அவர் நீக்கம் செய்வதற்காக விண்ணப்பித்து, ஒரு ஆண்டு முடிந்த பின்னரே வணிகத்தை நிறுத்த விண்ணப்பம் செய்ய முடியும். இந்த கால அளவிற்கு முன் வணிகத்தை நிறுத்த விண்ணப்பம் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
உரிய அலுவலர் பதிவு சான்றை எப்போது நீக்கம் செய்யலாம்?
அ) பதிவு பெற்ற வணிகர் சட்டம் அல்லது விதிகளை மீறி இருந்தால்,
ஆ) பிரிவு 10-ன் கீழ் இணக்க வரி (காம்போசிஷன்) செலுத்தும் வணிகர், தொடர்ச்சியாக ஒரு காலாண்டிற்கு (மூன்று மாதம்) வரிப்படிவம் தாக்கல் செய்யாமல் இருந்தால்,
இ) மற்ற வணிகர்கள் தொடர்ச்சியாக ஆறு மாத கால அளவிற்கு வரிப்படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால்,
ஈ) தானாக முன்வந்து பதிவு செய்து கொண்ட வணிகர், பதிவு செய்த நாளில் இருந்து ஆறு மாதகாலம் வரை வணிகத்தை ஆரம்பிக்கவில்லை என்றால்,
உ) மோசடி, தவறான தகவல்கள் அல்லது உண்மையை மறைத்து பதிவு பெற்று இருந்தால்,
ஊ) பதிவு செய்துள்ள இடத்தில் வணிகம் செய்யாமல் இருந்தால்,
எ) வெளி வழங்கல் செய்யாமல், வரிப்படிவம் மட்டும் வழங்கி இருந்தால்.
எப்படி நீக்க வேண்டும்?
Also read:பதிவு செய்ய கட்டாயமற்ற ஆவணங்கள்
ஒரு வணிகரின் பதிவை நீக்கம் செய்வதற்கு முன், உரிய அலுவலர் அந்த வணிகருக்கு நேரடியாக விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு அளிக்காமல் பதிவை நீக்கம் செய்யக் கூடாது. வணிகரின் பதிவை ஏன் நீக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை அளிக்குமாறு படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-17 இல் தொடர்பான வணிகருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இந்த அறிக்கைக்கான பதிலை வணிகர் ஏழு தினங்களுக்குள் படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-18 -ன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.
வணிகத்தை நிறுத்தம் செய்ய வணிகரே விண்ணப்பித்து இருந்தால், உரிய அலுவலர் அந்த விண்ணப்பம் கிடைத்த முப்பது நாட்களுக்குள் படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-19 இல் பதிவை நீக்கம் செய்து அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். உரிய அதிகாரி தானாகவே முன் வந்து பதிவை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து இருந்தால், வணிகர் அதிகாரியின் அறிக்கைக்கு பதில் கொடுத்த முப்பது நாட்களுக்குள் பதிவை நீக்கம் செய்து படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-19 இன் மூலம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
மையப் பொருள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் பதிவினை நீக்கம் செய்து இருந்தால், அது தமிழ்நாடு பொருள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழும் நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.
வரியை செலுத்துதல்
பதிவு நீக்கம் செய்யப்பட்ட வணிகர் அவ்வாறு நீக்கம் செய்யப்படும் முன் அல்லது அதற்குப் பின் ஏதேனும் வரி செலுத்த வேண்டியது இருந்தாலோ அல்லது சட்ட விதிகளின் படி அவர் ஆற்ற வேண்டிய கடமைகள் இருந்தாலோ அது அந்த வணிகரின் கட்டுப்பாட்டினை பாதிக்காது.
பதிவு நீக்கத்தை திரும்ப பெறுதல்: பிரிவு-30
உரிய அலுவலர் பதிவினை நீக்கம் செய்து இருந்தால், அந்த உத்தரவை நீக்கிவிட்டு அந்த பதிவு எண்ணை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. பதிவு நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு கிடைத்த முப்பது நாட்களுக்குள் வணிகர் படிவம் ஜிஎஸ்டி ஆர்இஜி-21 இல் பதிவை திரும்ப பெற வணிகர் விண்ணப்பம் செய்ய வேண்டும். வரிப் படிவம் தாக்கல் செய்யாததற்காகவோ, வரி, வட்டி, தாமத கட்டணம், தண்டத் தொகை ஆகியவை செலுத்தாதற்காகவோ பதிவு நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அதை நிவர்த்தி செய்த பின்னரே, பதிவை திரும்பப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
– சு.செந்தமிழ்ச்செல்வன்
(9841226856)