அதிகாரிகளின் மெத்தனப் போக்கு நீங்குமா?

சிறு, குறுந் தொழில்களின் நிலை

careless officers

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து, மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுத்து வருவது, சிறு, குறுந் தொழில்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைக்கு சிறு, குறுந் தொழில்களின் வளர்ச்சி பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான சிறு, குறுந் தொழில் முனைவோர் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 2017-18-ம் ஆண்டிற்கான, சிறு, குறுந் தொழில் மானிய கோரிக்கையில், தமிழக சட்டப்பேரவையில்ல், தமிழ்நாட்டில் ஐம்பதாயிரம் சிறு, குறுந் தொழில்கள் மூடப்பட்டு உள்ளதாகவும், ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்து உள்ளதாகவும் அந்த துறை சார்ந்த அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் கூறியது பதிவு பெற்ற நிறுவனங்களின் கணக்கு மட்டும்தான். உண்மையில் பதிவு பெற்ற நிறுவனங்களை விட, பதிவு பெறாத நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்கிறார்களே, ஆனால் நிறைய இடங்களில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லையே என்ற கேள்வியும் நம் முன் இருக்கிறது.. இதில் எது உண்மை என்கின்ற குழப்பம் ஏற்படலாம். இதில் வியக்கத்தக்க செய்தி என்னவென்றால் இரண்டுமே உண்மைதான்.

தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. ஆனால் அந்த படித்தவர்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை விரும்புவது இல்லை. ஆனால் அதே நேரத்தில் படிப்பறிவு குறைவாக உள்ள, ஆனால் உடல் உழைப்புக்கு தயாராக இருப்பவர்கள் தெருவுக்கு ஒரு மதுக்கடை வந்த நாளில் இருந்து பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையாகி எப்பொழுதும் மயக்க நிலையிலேயே உள்ளனர். சிறிய வயதிலேயே ஆற்றல் இழந்து திரிகின்றனர். கடினமான உடல் உழைப்பு வேலைகள் செய்ய, அவர்கள் உடல் நிலை ஒத்துழைப்பது இல்லை. இதன் காரணமாகத்தான் உடல் உழைப்பு வேலைக்கு வெளி மாநில தொழிலாளர்களின் தேவை ஏற்படுகின்றது.

உழைப்புக்கு ஏற்ற உடல் நிலை உள்ளவர்கள், நாளுக்கு நாள் தமிழகத்தில் குறைந்து கொண்டே வருகின்றனர். இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை.
கடந்த பல ஆண்டுகளாகவே, தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறுந் தொழில்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை விட, வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை பார்க்கின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் ஒரு சிறு தொழிலை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்துவது என்பது சவாலான ஒன்று. போதிய நிதி வசதி இல்லாதது, பெரிய நிறுவனங்கள், சிறு நிறுவனங்களுக்குத் தர வேண்டிய தொகையை குறித்த காலத்தில் தராதது, வங்கிகளின் மிகையான வட்டி மற்றும் மறைமுக கட்டணங்கள், தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத தொழிலாளர்கள் பற்றாக்குறை, உயர்ந்து விட்ட தொழிலாளர் சம்பளம், மின்சார சிக்கல், ஜிஎஸ்டி சிக்கல், தொழில் நடத்த கட்டுப்படியாகக் கூடிய விலையில் போதிய இடம் இல்லாதது, என்று இன்னும் பல்வேறு சிக்கல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவைகளுக்கு எல்லாம் தலையாய சிக்கலாக அரசு எந்திரத்தின் மெத்தனப் போக்கும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இணக்கமற்ற போக்கும் அமைந்து உள்ளது..

ஒரு தொழிலை நடத்த வேண்டும் என்றால் பல்வேறு துறைகளை அணுகி, அனுமதி பெற வேண்டி உள்ளது. தமிழகத்தில் உள்ள பல தொழில் தொடர்பான அதிகாரிகள், தங்களை அரசு தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முனைவோருக்கு உதவவும் வேலைக்கு அமர்த்தி உள்ளது என்பதை மறந்து விட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

Also read:சிறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் பல்வேறு மானியங்கள்

அவர்களை அணுகும், தொழில் முனைவோருக்கு அவர்களால் ஏற்படும் சிக்கல்களை சொல்லி மாளாது. இது தொடர்பாக உரிய அமைச்சர்களை சந்தித்து விவரம் தெரிவித்தால் கூட எந்த பயனும் ஏற்படுவது இல்லை. பிளாஸ்டிக் தொழிலையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம். 01.01.2019 முதல் தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்க் தடை என்று அரசு அறிவித்து விட்டது. பல ஆண்டுகளாக இந்த தொழிலில் இருந்து வருகிறோம். சரியோ, தவறோ அரசு தடை விதித்த பிறகு அந்த பொருள்களை தயாரிக்கக் கூடாது. அதற்கு பதில் மீதம் உள்ள பொருட்களை தயாரிக்கலாம் என்று நினைத்து, உரிய அனுமதி பெற அரசு துறைகளை அணுகினால், சொல்லொணாத துன்பங்களை எதிர்கொள்கிறோம்.

சரி, இது தொடர்பாக முதல் அமைச்சருக்கு தகவல் தெரிவித்து, அவர் மூலம் நிவாரணம் பெறலாம் என்று நினைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பினால், அந்த கடிதத்தை முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து, உரிய துறைக்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால், அந்த துறையில் இருந்து, நாம் கேட்ட சிக்கலுக்கு உரிய தீர்வு கிடைப்பது இல்லை. தொடர்பு இல்லாமல் ஏதோ ஒரு பதிலை அனுப்பி, வைத்த அந்த செய்தியை அதோடு முடித்து விடுகின்றனர். சான்றுக்கு, தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நடைமுறைப் படுத்திய பிறகு, மேற்படி ஆணையை நடைமுறைப் படுத்தும், தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்திடம் பிளாஸ்டிக் தொழில் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை பெற வேண்டி உள்ளது.

இது தொடர்பாக வாரியத்துக்கு எந்த விளக்கம் கேட்டு அனுப்பினாலும், 25.06.2018 அன்று வெளியிட்ட தமிழக அரசு ஆணை எண். 84ல் உள்ள வாசகங்களையே, திருப்பித் திருப்பி அனுப்புவது;, அல்லது பதிலே போடாமல் இருந்து விடுவது என்று இருந்து விடுகின்றனர்.

இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பினால் கூட, அதே பதில்தான் வாரியத்திடம் இருந்து வருகின்றது. என்ன செய்வது என்றே புரியவில்லை. தமிழக முதல்வர் அவர்கள், தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களால் போராடிக் கொண்டு இருக்கும் மீதம் உள்ள சிறு, குறுந் தொழில்களாவது அரசு எந்திரத்தால் மேற்கொண்டு பாதிக்கப்படாமல், தொழில் நடத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.

– ஜி. சங்கரன், தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம், சென்னை -112
(9003023815)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here