விதை முளைக்கவில்லை; பதவி கிடைத்தது

வெற்றிகரமாக செயல்படும் ஒரு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், செயல் திறன் உடைய ஒருவரை தன் நிறுவனத்தில் பணி புரியும் இளைஞர்களிடம் இருந்து தலைமை மேலாளர் ஆக பணி புரிய தேர்வு செய்ய விரும்பினார். அதற்கு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.

அதாவது தனக்குக் கீழ் பணிபுரியும் இளைஞர்கள் அனைவரையும் ஒரு கூட்டரங்கில் ஒன்று சேர்த்து அவர்களிடம் “இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மரத்திற்கான விதையும் அதனை முளைக்க வைத்து வளரச் செய்வதற்கான மண் தொட்டியும் வழங்கப்படும். நீங்கள் உங்கள் வீடுகளில் மண்தொட்டியை வைத்து அதில் விதையை ஊன்றி தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். ஒரு ஆண்டுக்குப் பின்னர் அனைவரும் மண்தொட்டியை அதில் வளர்ந்து உள்ள செடியுடன் எடுத்துக் கொண்டு வர வேண்டும். அப்போது நான் அவற்றைப் பார்வையிட்டு உங்களுள் ஒருவரை தலைமை மேலாளர் ஆக தேர்வு செய்வேன்” எனக் கூறி அனுப்பி வைத்தார்.

அவர்களுள் ஒருவரான அன்பு எனும் இளைஞரும், ஆர்வமாக வீட்டிற்கு சென்று தன் துணைவியிடம் விவரங்களைக் கூறி, அலுவலகத்தில் கொடுத்த விதையை, தொட்டியில் ஊன்றி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர்.

அந்த இளைஞனுடன் பணி புரிந்த மற்ற நண்பர்கள், தாங்கள் நட்ட விதை முளைத்து செடியாக வளர்வது பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், அன்பு தொட்டியில் மட்டும் எதுவும் முளைக்கவே இல்லை. ஆயினும் நாள்தொறும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தார். ஒரு ஆண்டு ஆனது. அப்போதும் முளை விடவில்லை. அனைவரும் குறிப்பிட்ட நாளில் அதே கூட்டரங்கிற்கு தாம் வளர்த்து வந்த செடிகளுடனான தொட்டிகளுடன் வந்து சேர்ந்தனர்.
ஆனால் செடி ஏதும் முளைக்காத தொட்டியை கூட்டரங்கிற்கு எடுத்து வந்த போது மற்ற அனைவரும் அதை வியப்புடன் பார்த்தனர். இந்நிலையில் நிறுவனத் தலைவர் கூட்டரங்கிற்கு வந்து சேர்ந்தார்.

“நண்பர்களே! இன்று உங்களுள் ஒருவரை தலைமை மேலாளர் ஆக நியமனம் செய்ய இருக்கிறேன். என்று கூறி விட்டு, அருகில் இருந்த தன் நேர்முக உதவியாளரை அழைத்து, அன்பு என்பவரை அழைத்து வரச் சொன்னார். அன்பு, குழப்பத்துடன் செடி எதுவும் முளைக்காத அவருடைய தொட்டியுடன் மேடைக்கு வந்தார்.
உடன் தலைவர், “வாருங்கள் அன்பு அவர்களே ! இந்த நிறுவனத்தின் தலைமை மேலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்கள். அந்த பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என கைகுலுக்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து, மற்றவர்களைப் பார்த்து, “நண்பர்களே! நான் கடந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் இதே நாளில் முளைக்காத விதைகளைத்தான் கொடுத்தேன். நீங்கள் சில நாட்களாகியும் விதை முளைக்கவில்லையே என்று கவலைப்பட்டு அந்த முளைக்காத விதைக்கு பதிலாக, வேறு விதையை ஊன்றி செடியாக வளர்த்துக் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.
ஆனால் அன்பு மட்டும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அந்த தொட்டியை வெறுமனே கொண்டு வந்து இருக்கிறார். இந்த உண்மைத் தன்மைக்காகவே அவரை தலைமை மேலாளர் ஆக தேர்வு செய்தேன். ஒரு நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை உள்ள மேலாளர்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள்.” என்றார்.

– ச. குப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here