Latest Posts

பனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா?

- Advertisement -

பனை மரம் பல பயன்களைக் கொடுக்கும் இயற்கை வளம். இந்தியா, மற்றும் இலங்கையில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆப்பிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைக்கிறார்கள்.

உலக அளவில் சுமாராக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டு உள்ளது.
இந்தியா: 60 மில்லியன்
மேற்கு ஆபிரிக்கா – 50 மில்லியன்
இலங்கை – 11.1 மில்லியன்
இந்தோனெசியா – 10 மில்லியன்
மடகஸ்கார் – 10 மில்லியன்
மியன்மார் – 2.3 மில்லியன்
கம்பூச்சியா – 2 மில்லியன்
தாய்லாந்து – 2 மில்லியன்


பனையின் பயன்கள்

பனை ஓலை
குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப் படுகின்றன. கைவினைப் பொருட்களான செயற்கைப் பூக்கள், பூச்சாடிகள், பெட்டி, சுளகு, பாய், இடியாப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.

நார்
பனம் ஓலை மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நார். பிரஷ்கள், துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மரம்
கட்டுமான பணிகளுக்கு, குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு பயன்படுத்தப் படுகிறது.

பதநீர்
அருந்தவும், கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு செய்ய பயன்படுத்தப் படுகிறது. பொதுவாக பதநீர் இறக்கும் குடுவைகளின் உள்ளே அளவோடு தடவப்படும் சுண்ணாம்பு, பதநீரை நொதிக்க விடாமல் செய்கிறது. சுண்ணாம்பு தடவாவிட்டால் கள் ஆக மாறி விடுகிறது.
பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, தாது உப்புக்கள் உள்ளன.

நுங்கு
முற்றாத பனங்காயில் உள்ள விதைகளையே நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான உண் பொருள். இரண்டு மில்லி யன் பனைமரங்களே இருக் கும் தாய்லாந்தில் இருந்து நுங்கு டின்களில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதி ஆகிறது.

பனம் பழம்
பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழக் கூழ் (Fruit pulp, பழப்பாகு (ஜாம்) தயாரிக்க பயன்படுத்தப் படுகிறது. பனங்காய் பணியாரம் ஈழத்தில் புகழ் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள சில இடங்களில் மட்டும் பனம் பழத்தை சுட்டு அல்லது செங்காயாக இருந்தால் சீவிப் போட்டு அவித்து உண்கிறார்கள். சில ஊர்களில் இது தெரு ஓரக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

பனங் கிழங்கு
பனங்கிழங்கை அவிக்காது ஒடித்து உலர வைத்து மாவு தயாரித்து, அந்த மாவில் இருந்து புட்டு, கூழ் சமைக்கப்படுகிறது. பனங்கிழங்கை அவித்து ஒடித்து உலர வைத்து தயாரிக்கப்படும் மாவை அப்படியே சிற்றுண்டியாக உண்கிறார்கள்.
ஆனாலும் இப்படி மாவு தயாரித்து பயன்படுத்தும் பழக்கம் தமிழ்நாட்டில் குறைவாகவே இருக்கிறது. காரணம் பனங்கிழங்காகவே பெரும்பாலும் உண்ணப்பட்டு விடுகிறது. வேக வைத்து விற்கப்படும் பனங்கிழங்கு உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகிறது.

இதையும் படிங்க: கூகுள் அனாலிடிக்சை பயன்படுத்துவது எப்படி? டிஜிட்டல் மார்க்கெட்டிங் – 3

பனை சார்ந்த பொருட்களைப் பொறுத்தவரை கருப்பட்டி, பனங்கற்கண்டு இரண்டும் அதிக அளவில் விற்பனை ஆகிறது. பனஞ் சீனியும் விற்பனை ஆகிறது.

பனம் பொருட்கள் தொடர்பான தொடர்பான ஆராய்ச்சிகள் மிக குறைவா கவே நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் பனை மற்றும் பனைப் பொருட்கள் வளர்ச்சி வாரியம் என்று ஒன்று செயல்பட்டு வந்தாலும் அதன் பணிகளால் விளைந்த பயன்கள் குறித்த செய்திகள் எதுவும் பெரிய அளவில் வெளி வரவில்லை.

பனை மரத்தில் ஏறுவதை எளிதாக்கும் கருவிகள் குறித்து அவ்வப்போது செய்திகள் படத்துடன் வெளிவந்தாலும், அந்த கருவியின் பயன்பாடு அதிகரிக்கவில்லை. பெரும்பாலும் எந்த ஊரிலும் அத்தகைய கருவிகளைப் பயன்படுத்தி மரம் ஏறுவதைப் பார்க்க முடியவில்லை.

ஒரு காலத்தில் விரும்பி வாங்கப்பட்ட பனைநார்க் கட்டில்கள் ஏறத்தாழ வழக் கொழியும் நிலையில் உள்ளன. அவற்றைப் பின்னுபவர்களும் ஏங்கோ ஒன்றிரண்டு பேர்கள்தான் இருக்கிறார்கள். யாராவது அந்த கட்டில்களை வாங்க விரும்பினாலும் கிடைப்பது இல்லை.

பெரும்பாலான ஆய்வுகள் அதிகம் பயன்படுத்தப்படாத பனம் பழக்கூழ் பற்றியே நடைபெற்று உள்ளன.
பனம் பழக் கூழ், கரோட்டினாயிட் (Carotenoids) எனும் மஞ்சள் நிறப் பொருளைக் கொண்டு இருக்கிறது. நூறு கிராம் பனம் பழத்தில் 2-253 மில்லிகிராம் கரோட்டினாயிட் இருப்பதாக அறியப் பட்டு உள்ளது. இது விட்டமின் ஏ – வுக்கான ஒரு மூலப் பொருள் ஆகும்

பனம் பழக் கூழில் உள்ள பெக்ரின், உணவு பொருள்களை உறுதியாக்க/கூழ் நிலையில் பேண உதவும் ஒரு பொருளாக இருக்கிறது.

ஃப்ளாபெல்லிஃபெரின் (Flabelliferin), பனம் பழத்தில் காணப்படும் சிறு கசப்பு, காறல் சுவைக்கு காரணமாக உள்ள பொருள் ஆகும். இதனை பழக் கூழில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் பழக் கூழை வேறு உணவு பொருட்களில், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த முடியும். இதற்கு நுண்ணுயிரிகளை அழிக்கும் இயல்பும் உள்ளது.

எலிகளில் செய்த ஆராய்ச்சியில், ஃப்ளா பெல்லிஃபெரின் இரத்த சர்க்கரை அளவை குறைப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கும் இரத்த சர்க்கரை அளவை பனம் பழத்தில் உள்ள இந்த பொருள் குறைக்குமா என்ற சோதனைகள் வேறு சில நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் இத்தகைய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

TAMILNADU PALM PRODUCTS DEVELOPMENT BOARD

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news