Latest Posts

வேலை பார்த்து தொழிலைக் கற்றுக் கொண்டேன்!

- Advertisement -

ஒளி-ஒலி அமைப்புகள் சிறப்பாக அமைந்துவிட்டால், எந்த ஒரு நிகழ்ச்சியும் அழகுற அமைந்து விடும்.


“ஒளியையும், ஒலியையும் சிறப்பாக கையாளுவது ஒரு கலை” என்கிறார் திரு. விஜய். இவர் டால்பிவிஷன் நிறுவனத்தின் உரிமையாளர்.


இவர் ஒளி-ஒலி அமைப்பு சேவையை கடந்த பதிமூன்று ஆண்டுகளாக செய்து வருகிறார். இவரின் தொழில் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றிலிருந்து,


“சென்னை, இராயபுரத்தில் பிறந்து வளர்ந்தேன். எங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக, பனிரெண்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. எனது தந்தை ஒரு மெக்கானிக். மோட்டார் சைக்கிள்களை பழுது பார்ப்பவர்.


பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் சென்று விட்டேன். அம்பத்தூரில் உள்ள டி. ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் மூன்று ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளராக வேலை செய்தேன். பின்னர், மயிலாப்பூரில் உள்ள ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த இடத்தில்தான் பல்வேறு அனுபவங்களை பெற்றேன். எனது முதலாளி எனக்கு கொடுத்த முதல் வேலை எதுவென்றால் பெரிய பெரிய ஸ்பீக்கர்களை நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு தூக்கிச் சென்று வைக்க வேண்டும் என்பதுதான்.


விழாக்களுக்கு ஒலி, ஒளி அமைப்பதுதான் பணி என்பதால் இரவு, பகல் பார்க்க முடியாது. பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவுகளில் தான் நடைபெறும். கூட்டம் முடியும் வரை அங்கே இருந்து கூட்டம் முடிந்த உடன் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்து பொருட்களையும் பொறுப்பு டன் மீண்டும் நம் இடத்துக்கு கொண்டு வர வேண்டும்.


அங்கு இரவு, பகல் பாராமல் கடுமையாக வேலை பார்த்தேன். நாளடைவில் இந்த தொழில் தொடர் பான நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டேன். திருமணம், இசை நிகழ்ச்சி, கோயில் திருவிழா, பொதுக்கூட்டம் – இப்படி எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு என்னென்ன சாதனங்கள் வேண்டும் என்பதையும், எங்கெங்கே பொருத்த வேண்டும் என்பதையும் அனுபவம் சார்ந்து தெரிந்து கொண்டேன்.


சில ஆண்டுகளில் எனது முதலாளி, தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக அந்த சிறிய கடையை மூடி விட்டார். ஒலி, ஒளி அமைப்புத் தொழிலில் நல்ல அனுபவம் பெற்று இருந்ததால், அந்த தொழிலை நானே சொந்தமாக தொடங்கினேன். 2004ஆம் ஆண்டு டால்பிவிஷன் என்ற பெயரில் நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கினேன். பிறந்தநாள் விழா, மஞ்சள்நீராட்டு விழா போன்ற சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கு ஒளி, ஒலி அமைத்துக் கொடுத்தேன்.


சிறுவயது முதலே எனக்கு ஒளிப்படக் கலையிலும் ஆர்வம் இருந்தது. பொழுது போக்காக படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். இதனால் பல்வேறு விதமான கேமராக்கள் பற்றியும் தெரிந்து கொண்டதோடு, அவற்றை இயக்கவும் பழகிக் கொண்டேன்.


எனக்கு கிடைக்கும் ஒலி, ஒளி அமைப்பு நிகழ்ச்சிகளுக்கு, நானே ஃபோட்டோ, வீடியோ எடுக்கும் வாய்ப்பையும் கேட்டுப் பெற்றுக் கொள்வேன்.


படம் எடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமான துறை. நான் எந்த இடத்துக்குச் சென்றாலும் கேமராவை கையோடு எடுத்துச் செல்வேன். இதனால்தான் என்னை எனது வாடிக்கையாளர்கள் ஃபோட்டோ என்ற அடைமொழியைச் சேர்த்து, ஃபோட்டோ விஜய் என்று அழைக்கிறார்கள்.


ஒளிப்படக்கலை தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு கலையாகும். புதுப்புது தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றைக் கற்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். சென்னை, நந்த்ம்பாக்கம், வர்த்தக மையத்தில் அவ்வப்போது நடைபெறும் ஃபோட்டோ, வீடியோ தொடர்பான பொருட்காட்சிகளுக்குச் செல்வதன் மூலம், புதிய வருகைகளை அறிந்து கொள்கிறேன்.


இத்தொழிலுக்கு நாளுக்குநாள், படித்த இளைஞர்கள் வந்துகொண்டே இருக்கிறர்கள். இதனால் போட்டியும் அதிகரித்து வருகிறது. இந்த போட்டியை நான் எதிர்மறையாக எண்ணுவது இல்லை. நேர்மறையாகவே எடுத்துக் கொண்டு அதிக வாய்ப்புகளைப் பெறு வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறேன். அதில் வெற்றியும் பெறுகிறேன்.


சென்னையில் நடைபெறும் பன்னாட்டு திரைப்பட விழாக்களின் போது செவென்த் சேனல் நிறுவனத் துடன் இணைந்து திரைப்படங்களை திரையிட்டு வருகிறோம்.


மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் மருத்துவ கருத்தரங்கத்திற்குத் தேவையான சிறப்பு வசதிகளை செய்து தருகிறோம். மியூசிக் அகாடமி, பாரதிய வித்யாபவன், நாரதகான சபா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற அமைப்புகள் எங்களின் வாடிக்கையாளர்கள் ஆக உள்ளனர். இவர்களின் அனைத்து தேவைகளுக்கும் எங்களை அணுகுவார்கள்.


இப்போதெல்லாம் பரத நாட்டியம் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுகின்றன. சலங்கை பூஜை, அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒளி-ஒலி அமைப்பு மிகவும் முக்கியம். நடனமாடுவோரின் முகபாவங்களை உணர்ந்து அதற்கேற்ப ஒளியை முறையாக கையாள வேண்டும். அப்போதுதான் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையும். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் நாங்கள் கூடுதலாக கவனம் செலுத்துவோம். பார்வையாளர்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சிகளில் எங்களின் முதன்மாயான நோக்கம் ஆக இருக்கும்.


எங்களின் ஒலி, ஒளி மற்றும் ஒளிப்படத் தொழிலுக்குத் தேவையான கருவிகளை பணம் சேரச்சேர சொந்தமாக வாங்கிச் சேர்த்துக் கொண்டோம். எங்களுடைய நிறுவனத்தில் எட்டு பேர் முழுநேரமாகப் பணி புரிகிறார்கள்.


பொஸ் ஸ்பீக்கர், லைனர் ஸ்பீக்கர், கார்ட்லெஸ் மைக், ஹெட் ஃபோன்கள், திரையிடும் புரொஜெக்டர்கள் மற்றும் வண்ண வண்ண ஒளி விளக்குகள் எங்களிடம் உள்ளன. நிகழ்ச்சியின் அளவுக்கும், தரத்திற்கும் ஏற்ப அதிகமாக தேவைப்பட்டால் வெளியில் இருந்து வாடகைக்கும் எடுத்துக் கொள்வோம். இப்படி வாடகைக்குத் தரும் நிறுவனங்கள் சென்னையில் பல உள்ளன.


ண்பர்களை அழைத்துக் கொண்டு அவ்வப்போது சுற்றுலா செல்வது எனக்கு பிடித்தமான ஒன்றாகும். இந்த ஆர்வத்தையும் தொழிலாக மாற்ற முயற்சித்தேன். 2012 ஆம் ஆண்டு, எனது மகளின் பெயரில் “பெகோனியா ட்ராவல்ஸ்” தொடங்கினேன்.


இதுவரை, ஊட்டி, கொடைக்கானல், கோவாவுக்கு இருபது முறையும், தாய்லாந்துக்கு இரண்டு முறையும், ஜெருசலேம் நகரத்திற்கு மூன்று முறையும் அழைத்துச் சென்று இருக்கிறேன்.


இதற்காக, சுலபத் தவணை முறையையும் பயன்படுத்துகிறேன். எங்கள் வாடிக்கையார்கள் பலருக்கு நானே பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று இருக்கிறேன். இந்தச் சுற்றுலா சேவை மூலம் எனக்கும் எனது வாடிக்கையாளர் களுக்கும் இடையே ஆன தொழில் உறவு நன்றாகப் பராமரிக்கப் படுகிறது.” என்கிறார், திரு. விஜய். (95510 47142 )

– எஸ். எஸ். ஜெயமோகன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news