பலவிதமான கைவினைப் பொருட் களை செய்வதற்கென்றே தமிழில் முதல் முறையாக, “செய்து பாருங்கள்” என்ற இதழை திருமதி மு. வி. நந்தினி நடத்தி வருகிறார். தனது செயல்பாடுகளைப் பற்றி அவர் கூறிய போது,
“தர்மபுரியில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னையில் மீடியா துறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக விசுவல் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் சேர்ந்தேன். முதன் முதலில் குமுதம் சிநேகிதி இதழில் வேலை செய்தேன். பின் குங்குமம், ஆனந்த விகடன், சன் தொலைக்காட்சி போன்றவற்றில் பணி யாற்றினேன்.
பின்னர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்ததால், வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருந்த பொழுது, “செய்து பாருங்கள்” என்ற பெயரில் ஒரு இதழை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கைவினைப் பொருட்கள் செய்வதில், சிறு வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் இருந்தது. மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி? என்பதை கற்றுக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு வேறு எந்த இதழும் வரவில்லை என்பதும் எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதனால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழாக “செய்து பாருங்கள்” என்ற இதழை வெளியிடத் தொடங்கினேன்.
ஒவ்வொரு இதழிலும் பலவிதமான செய்முறைப் பயிற்சிகள் உள்ளன. பெயின்டிங் என்பதில், சுவரை அலங்கரிக்க சார்கோல் பெயின்டிங், குழந்தைகளின் தலையணையை அலங் கரிக்க மிக்கி மவுஸ் பேப்ரிக் பெயின்டிங், கிளாஸ் பெயின்டிங் மற்றும் புடவையில் லிக்விட் எம்பிராய்டரி, ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி, துப்பட்டாவை அலங்கரிக்கும் குரோஷா பூக்கள், பேப்பர் பூக்கள், கிறிஸ்துமஸ் ட்ரீ, பேப்பர் பாக்ஸ், காகித ரோஜா, ஜிமிக்கி, வளையல், நெக்லஸ், கம்மல், ஊதுவத்தி ஸ்டாண்ட், வீட்டிற்குத் தேவையான காலண்டர், ரங்கோலி விளக்கு இவை மட்டும் இல்லாமல் ரெசிபி பக்கங்கள் என்று பல விதமான சமையல் செய்முறை, கைவினை கலைஞர்களின் பேட்டிகள் என்று முழு பயிற்சி இதழாக ‘செய்து பாருங்கள்’ வெளி வருகிறது.
ஒருவர் கைவினைப் பொருட்களை விற்று வருமானம் ஈட்ட முடியுமா என்றால்? கண்டிப்பாக முடியும். காரணம் நாடு முழுவதும், ஆன்லைன் தளங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் பரவிக் கிடக்கின்றன. பலர் கைவினைப் பொருட்கள் செய்முறை களைக் கற்றுக் கொண்டு பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள்; மற்றும் அங்கேயே அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் விற்கிறார்கள். அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். நிறைய கைவினைப் பொருட்களுக்கான கண் காட்சிகள் நடைபெறுகின்றன. அவற்றில் கலந்து கொண்டு வைவினைப் பொருட்களை விற்கிறார்கள். ஏற்றுமதி செய்பவர்களும் உண்டு.
இன்று கைவினைப் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகின்றது. முறையாக கற்றுக் கொண்டு கைவினைப் பொருட்களை குறைந்த முதலீட்டில் செய்து விற்பனை செய்ய முயற்சிக்கலாம்.
பயிற்சி என்றவுடன் ஒரே நாளில் கற்றுக் கொண்டு நாளையே தொழிலாக தொடங்கி விட முடியுமா? என்று சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால், அப்படி முடியாது. பொறுமை மிக அவசியம்.
இன்று கைவினைப் பொருட்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் நிறைய இடங்களில் கிடைக்கின்றன. சென் னையில் பிராட்வே – நாராயண முதலி தெரு முழுக்க கைவினைப் பொருட் களுக்கான மூலப்பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. மொத்த விலையில் கிடைக்கின்றன. பத்தாயிரம் ரூபாய் என்ற அளவுக்கு தொடக்க முதலீடு இந்த தொழிலைத் தொடங்குவதற்குப் போது மானது ஆகும்.
இதழில் விளக்கப்பட்டு இருக்கும் கைவினைப் பொருட்கள் செய்முறைகள் பற்றி மேலும் விளக்கங்கள் தேவை என்றால் குறிப்பிட்ட அந்த கைவினைப் பொருள் பயிற்சி வல்லுநர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறோம்.
மேலும், குழந்தைகள் விளையாட்டாக செய்து பார்ப்பதற்கான செய்முறை களையும் தொடர்ந்து வழங்குகிறாம்.
நாங்களும் நேரடியாக கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி நடத்தி, அதன் மூலம் இதை எப்படி வியாபாரமாக மாற்றுவது? என்பது போன்றவற்றை கற்றுக் கொடுக்கும் எதிர்கால திட்டங்கள் உள்ளன” என்றார், திருமதி. மு.வி. நந்தினி.
– செழியன். ஜா