பணியாளர்களாக எந்த நிறுவனத்திலும் சேராத, மாதச் சம்பளம் என்று வாங்காமல், செய்யும் பணிகளுக்கு உரிய ஊதியம் அல்லது நாட்கூலி வாங்கும் பணியாளர்கள் உண்டு. கட்டுமானத் தொழிலாளர்கள், வெல்டர்கள், பெயின்டர்கள் போன்ற இத்தகைய பலவகையினர் பெயர், அமைப்பு சாரா பணியாளர்கள்.
உலகிலேயே அதிக மின் பணியாளர்களைக் கொண்டு உள்ள இனம் நம் தமிழ் இனம்தான். குறிப்பாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பதில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள்தான். பல்லாண்டு கால சிந்தனையின் விளைவாக கடந்த 2011-ஆம் ஆண்டில் சென்னை திரு.வி.க. பூங்காவில் இருந்து தொடங்கப்பட்டதுதான், ‘தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நலச்சங்கம்’.
மின் பணியாளர்களுக்கு எப்போதும் ஒரு சவால் உண்டு. அது, புதிய தொழில்நுட்பம், புதிய கருவிகள் எண்ணற்றவை விற்பனைக்கு நாளும் வந்து கொண்டே இருப்பதுதான். இவற்றைக் கையாளும் திறன், தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் அடிப்படை பொருளாதார உறுதி இவற்றை எல்லாம் யாரை அணுகிப் பெறுவது என்பது புரியாத ஒன்று. இந்த ஐயங்களைத் தீர்த்து வைக்கிறது, இந்த சங்கம். இச்சங்கம் பற்றி இதன் பொது செயளாலர் திரு. எம். ஜெ. நாகலிங்கம் கூறுகின்றார்,
“மின் பணியாளர், மின் உரிமம்(லைசன்ஸ்) பெற ஆலோசனையும், தொழில்நுட்பப் பயிற்சியும் எங்கள் சங்கத்தால் தரப்படுகிறது. அவ்வப்போது தெரியவரும் புதிய தொழில்நுட்பங்களையும் கையாளும் திறனையும், கருத்துக்களையும் வழங்கி வருகின்றோம். சான்றாக, நேர்விசை மின்விசிறிகள் அறிமுகமாகி உள்ளன. அவற்றை அறிமுகம் செய்கின்றோம்.
மேலும், “எல்இடி விளக்குகளை புதிய தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கின்றோம். ரூ.20,000 என்ற குறைந்த மூதலீட்டில் குறுந்தொழில் என்ற அளவில் விளக்குகளை உற்பத்தி செய்து முன்னேறலாம். இதற்கான மூலப்பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து பெற்றுத் தருகின்றோம்.
4,7,9,11 வாட்ஸ் அளவில் குண்டு பல்புகளை உற்பத்தி செய்யலாம். இதுபோல் குழல் விளக்குகளையும் விரைவில் உற்பத்தி செய்ய கற்பிக்க இருக்கிறோம். மேலும், சோலார் தகடுகளை அமைக்கும் பயிற்சிகளையும் தருகின்றோம். அறிமுகத் தொழில்நுட்பப் பயிற்சியும், அடிப்படைப் பயிற்சியும் கூட தரப்படுகின்றது”, என்றார் திரு. நாகலிங்கம் (9841382200, 9340006000).
-செ.வ. இராமாநுசன்