திருமதி. வசந்தி, மகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில், அடேசிவ்ஸ் (ஓட்டுப்பசை) தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுபற்றி அவரிடம் பேட்டி கண்ட போது,
“எங்கள் நிறுவனம் துவங்கி 24 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சென்னை, பொழிச்சலூரில்தான் தொடங்கியது. எங்கள் நிறுவனத்தை தொடங்கியவர் எனது கணவர் திரு. ஆறுமுகம் ஆவார். இவர் அடேசிவ்ஸ் மற்றும் பேக்கிங் மெஷினரிஸ் ஆகியவற்றைத் தயாரித்து வந்தார். அவர் டிப்ளமா மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு நான்கு ஆண்டுகள் வரை ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காகப் பணிபுரிந்தார். பின்னர், அவராகவே சிறு சிறு இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கினார். இந்த இயந்திரங்கள் ஃபார்மாசிட்டிக்கல் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அவருடன் நானும் துணையாக, குவாலிட்டி செக்கிங் செய்து வந்தேன். பின்னர், நாங்களே சில அடேசிவ் பொருட்களையும் தயாரிக்கத் தொடங்கினோம்.
எங்கள் நிறுவனம் தொடங்கிய காலத்தில் எங்கள் தயாரிப்புகளை செய்யத் தேவையான எந்திரங்கள் அனைத்தையும், எனது கணவரே செய்து கொடுத்தார். இன்று வரை நாங்கள் அதே எந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம்.
எங்கள் நிறுவனத்தில், டிஸ்லரிஸ், ஃபில்லிங் மெஷின், பிரஷ், அடேசிவ் ஆகியவற்றைத் தயாரித்துக் கொண்டு இருந்தோம். அப்போது எங்களிடம் 40 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தன. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என் கணவர் எதிர்பாராமல் மரணம் அடைந்து விட்டார். அதனால், நிறுவனத்தை மேற்கொண்டு நடத்த வேண்டிய நெருக்கடியான நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். முதலில் மிகவும் சிரமத்துடன்தான் நிறுவனத்தை நடத்தி வந்தேன். சரியான பணி மேலாண்மை இல்லாத காரணத்தால், சில வாடிக்கையாளர்கள் எங்களை விட்டுச் சென்று விட்டனர். ஏனெனில் மெஷினரிஸ் தயாரிப்பு எனது கணவருக்கு மட்டும் தான் தெரியும்.
ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு எங்கள் வணிகம் தொடர்பான செய்திகளை ஒவ்வொன்றாக தெரிய வந்து விட்டது.
தற்போது நாங்கள், எங்கள் தயாரிப்புகளில் மெஷினரிஸ் தவிர அனைத்தையும் தயாரிக்கிறோம். இன்னும் சில பொருட்களை ஆர்டரின் பேரில் மட்டும் செய்து தருகிறோம். கைப்பைகள், சில பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் சிறு உலோக, பிளாஸ்டிக் சாமான்கள் ஆகியவற்றை அவர்கள் கூறும் அளவிலே செய்து கொடுக்கிறோம். இது தவிர எங்களிடம் தொழிற்சாலைகளில் பாட்டில்கள் கழுவப் பயன்படும் பிரஷ்கள் பல வகைகளில் கிடைக்கும்.
அதாவது மரத்தாலான கைப்பிடி மற்றும் இரும்பாலானா பிரசில்ஸ் உடைய பிரஷ்கள், தொழிற்சாலைகளில் பயன் படும் மூன்று விதமான ஒட்டுப் பசைகள் ஆகியவை கிடைக்கும்.
எனது கணவர் இறப்பிற்குப் பிறகு, இன்னும் மார்க்கெட்டிங் செய்வதில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. இனி வரும் காலங்களில் மார்கெட்டிங் பணிக்கு ஆட்கள் போட இருக்கிறோம். தற்போது வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், இன்னும் சில பெரிய எந்திரங்களை வாங்க இருக்கிறோம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. எங்கள் நிறுவனத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக எனது மகனை மெக்கட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படிக்க வைத்து இருக்கிறேன். அவனுக்கு அதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. சிறப்பாக நடத்துவான் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் திருமதி. வசந்தி (9381042346).
-உஷா. எஸ்