Latest Posts

வாய்ப்புகளை, திறமைகளை சரியாகப் பயன்படுத்திய எஸ்.. எஸ்.. வாசன்

- Advertisement -

இதழ்கள் உலகிலும், திரை உலகிலும் மிகப் பெரிய சாதனைகளைச் செய்தவர் திரு. எஸ். எஸ். வாசன். வெற்றிக்கு அவர் பயன்படுத்திய நுட்பங்களைத் தெரிந்து கொள்வது, புதிய தொழில் முனைவோருக்கு பயன்படும். அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்தினார்?

இரட்டைக்குழல் ஊதும் சிறுவர்களின் ஜெமினி சின்னம், முகம் நிறையச் சிரித்தபடி உச்சிக் குடுமியுடன் காட்சியளிக்கும் விகடன் சின்னம் ஆகியவற்றை இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நடுவிலும் பிரபலமடையச் செய்த, புகழ்பெற்ற தொழில் மேதை எஸ். எஸ். வாசன். உழைப்பு, நுண்ணறிவு, எளிமை, விடாமுயற்சி நுணுக்கமாகத் திட்டமிடுதல் போன்ற அரிய குணங் களுடன், என்ன சாதிக்க முடியும் என்பதற்கு எஸ். எஸ். வாசனின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டாகும்.


சிறுவயதிலேயே துணிச்சலுடன் வாழ்க் கையைத் தேடி திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு வந்தவர் வாசன். இளம் வயதிலேயே எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட வராக அவர் இருந்தார். சென்னைக்கு வந்தவுடன் வாழ்க்கைக்கு வழிகாண அவர் நம்பிய செய்திகளில் எழுத்தும் ஒன்று. அந்தக் காலத்தில் விரைந்து விற்பனையாகக் கூடிய செய்தி எது என்று தேடிப்பிடித்து அவர் ஒரு புத்தகம் எழுதினார். அவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு ‘இல்வாழ்க் கையின் இரகசியங்கள்’ என்பதாகும். இந்தப் புத்தகம் பற்றி சுவையான சில செய்திகளை வ. ரா. சொல்லி இருக்கிறார்.


“இந்த நூலில் இரகசிய மர்மம் எதுவும் கிடையாது. புத்தகத்தின் பெயர்தான் ‘இரகசியங்கள்’. பொதுவாக மக்கள் உடல் நலத்தோடு இருக்க வேண்டியதற்கான முறைகளை வாசன் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். உலகத்தில் பல நாடுகளில் திருமணம் முடிக்கும் வகைகளும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. இந்தக் புத்தகத்தின் பெயரைக் கண்டு மயங் கினவர்கள் பலர். திகில் அடைந்தவர்கள் சிலர். ஆபாசக் களஞ்சியமாக இருக்குமோ என்று சந்தேகித்தவர்கள் அநேகர். இந்தப் புத்தகம் சுமார் 5000 பிரதிகளுக்கு அதிகமாக விற்றது….”


“வாசன், இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டும், என்று ஊழியன் பத்திரிகை அதிபர் இரா. சொக்கலிங்கம் அவர்களை ஒரு நேரம் கேட்டுக் கொண்டார். உங்கள் புத்தகம் மிகவும் ஆபாசம் என்று சொக்கலிங்கம் வெடுக்கென்று பதில் சொன்னார். இதையே விமர்சனமாக நீங்கள் எழுதினால் போதும் என்று வாசன், சொக்கலிங்கம் திடுக்கிடும் படியாகச் சொல்லிச் சிரித்தார்.


இதனால், வாசனின் பண்புகளைப் பற்றி நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. பிற்காலத்தில் அவர்பெற்ற வெற்றிகளுக்கும் அவையே காரணங்களாக இருந்து இருக் கின்றன. மக்களைக் கவரக்கூடிய செய்திகள் என்ன என்பதை அவர் நன்கு அறிந்து வைத்து இருந்தார். இரா. சொக்கலிங்கம் தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட இலக்கியப் பிரமுகர். அவர் என்ன சொன்னாலும் அது மக்களிடம் நன்கு செலாவணி ஆகும் என்பதை வாசன் தெரிந்து வைத்து இருந்தார். சொக்கலிங்கம் விமர்சனம் செய்த நூல் என்றாலே அதற்கு விற்பனை மவுசு உண்டு என்று வாசனுக்குத் தெரியும்” என்கிறார்.


இல்வாழ்க்கையின் இரகசியங்கள் என்கிற அவர் எழுதிய புத்தகத்தின் பிரதிகளை கேன்வாஸ் பையில் போட்டுக் கொண்டு வீடு வீடாக வந்து வாசன் விற்பாராம். புத்தகத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள மறுப்பவர் களிடம், நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டாம், கொடுத்து விட்டுப் போகிறேன், படித்துப் பாருங்கள். சில நாட்கள் கழித்து வருகிறேன், பிடித்து இருந்தால் வைத்துக் கொண்டு காசு கொடுங்கள், இல்லா விட்டால் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்பாராம்.


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கிற காலத்திலே கூட கல்லூரியில் அவர் செலவழித்த நேரத்தைவிட, வெளியில் செலவழித்த நேரம் அதிகம். விடுமுறை நாட்களில் சென்னை மூர் சந்தையில், பழைய புத்தகக் கடைகளை ஆராய்ந்து விரும்பிய புத்தகங்களை வாங்கிப் படித்தார்.


மேலை நாட்டினர் எழுதிய வாழ்க்கை முன்னேற்ற நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. விரைவில் பணம் சம்பாதிப்பது, மக்களைக் கவர்வது தொடர்பான நூல்களில் அதிகக் கவனம் செலுத்தினார். எளிய நிலையில் இருந்து பெரிய நிலைக்கு உயர்ந்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு களை ஆவலுடன் படித்தார்,


அந்தக் காலத்திலேயே கூட, சென்னையில் பரபரப்பான விற்பனைகள் நிறைந்த பகுதியாக விளங்கியது ஜார்ஜ் டவுன்தான். அங்கே எல்லா வகையான வணிகமும் நடக்கும். விற்பனைப் பொருள்களை விளம்பரப் படுத்துவதற்கு இப்போது போல் அப்போது பத்திரிகைகள் கிடையாது. விளம்பர நிறுவனங்களும் உருவாகாத காலம் அது. நம் நாட்டில் மக்கள் தேவைக்கான பொருள்களின் உற்பத்தி குறைவு.


ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்து மலிவான பொருட்கள் இறக்குமதி ஆகிக்கொண்டு இருந்த காலம் அது. இந்தப் பொருட்களும் ஒருசில பெரிய நகரங்களில் தாராளமாகக் கிடைத்தனவே தவிர, மற்ற ஊர்களில் கிடைப்பது அரிதாகவே இருந்தது.


சென்னை நகர வர்த்தகர்கள் இது போன்ற பொருட்களைப் பட்டியல் போட்டு விளம்பரம் செய்து விற்பனை செய்து வந்தார்கள். இந்த முறையைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென வாசன் எண்ணினார். ஒரு ரூபாய்க்கு நூற்றுக்கணக்கான பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகளை விற்பனை செய்தார், அவருடைய இந்த வணிகம் சூடுபிடிக்க தொடங்கியது.


அதோடு புத்தகங்களின் விற்பனையையும் அதேமுறையில் மேற்கெள்ளத் தொடங் கினார். அதிலும் எது மாதிரியான புத்தகங்கள் விரைவாக விற்பனையாகும் எனத் தேர்வு செய்தார். துப்பறியும் கதைகள், மர்மக் கதைகள் ஆகியவற்றின் தலைப்பு களைக் கவர்ச்சியாகப் பட்டியல் போட்டு அதன் மூலம் விற்பனையைப் பெருக்கிக் கொண்டார்.


அந்தக் காலத்தில் குறைவான பத்திரிகை களே வெளிவந்தாலும், அவற்றுக்கு விளம் பரம் சேகரித்துக் கொடுக்கிற தொழிலிலும் அவர் ஈடுப்பட்டார். அந்தச் வேளையில் தான் குடியரசு பத்திரிகையுடனும், இதை நடத்திவந்த தந்தை பெரியார் உடனும் வாசனுக்குத் தொடர்பு ஏற்பட்டது.


பொருட்களைப் பட்டியல் போட்டு விற்பதை ‘கேட்லாக் வியாபாரம்’ என்று சொல்வார்கள். அதைத்தான் அப்போது வாசன் செய்து கொண்டு இருந்தார். அது தொடர்பாக பெரியாரைச் சந்தித்து, குடியரசு பத்திரிகையில் தன் விளம்பரங்களை வெளி யிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது குடியரசு பத்திரிகையில் ஒரு அங்குலத்திற்கு இரண்டணா விளம்பரக் கட்டணம்.


இது மிகவும் குறைவென்று வாசனுக்குப் பட்டது. எவ்வளவு விளம்பரங்கள் கொடுத் தாலும் போடுவீர்களா என்று பெரியாரைக் கேட்டார். பெரியாருக்கு இந்தக் கேள்வி வியப்பாக இருந்தது. ‘அதிக விளம்பரங்கள் என்றால் அதிக வருமானம் தானே’ என்று பெரியார் ஒப்புக் கொண்டார். இது தொடர் பாக பெரியார் சொல்வதைக் கேட்போம்.


“இந்தப் பிள்ளை என்ன பண்ணிச்சு, எங்கெங்கேயோ போய் விளம்பரம் சேகரிச் சிட்டு வந்து, குடியரசுக்குக் கொடுக்க தொடங்கியது. எனக்கு அங்குலத்துக்கு இரண்டணாதான் கொடுக்கும். ஆனால் மற்றவர்கள் கிட்டேயிருந்து நிறைய வாங்கிப்பாரு. இப்படி, சாமர்த்தியமா பணம் சம்பாதிச்சு, கொஞ்ச காலம் எங்கிட்டே விளம்பர ஏஜன்டா இருந்தார். இப்படித்தான் வாசன் எனக்கு முதல்லே பழக்கமானார்” என்கிறார் பெரியார்.


இதுபோல, பணம் சம்பாதிக்க வாசன் பல்வேறு தொழில்களைச் செய்தாலும் எழுத் தார்வம் அவருக்கு இருந்து கொண்டே ­இருந்தது. சில ஆங்கிலப் புத்தகங்களைத் தழுவி தமிழில் எழுதி வெளியிட்டார். அப் புத்தகங்களுக்கு விளம்பரம் கொடுப்பதற்கு, அப்போது வெளிவந்து கொண்டு இருந்த ஆனந்த விகடன் பத்திரிகையைத் தேர்ந் தெடுத்தார். இந்த முயற்சி அவர் வாழ்க் கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.


ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு விளம் பரம் கொடுத்து அதற்கு உரிய பணத்தையும் கட்டிவிட்டார்.


அந்தக் காலத்தில் முனுசாமி முதலியார் என்பவரின், ‘ஆனந்த போதினி’ என்கிற பத்திரிகை சிறப்பாக விற்பனையாகிக் கொண்டு இருந்தது. இதைப் பின்பற்றி விகடகவி பூதூர் வைத்தியநாந அய்யர், ஒரு நகைச்சுவை இதழைத் தொடங்க விரும்பி னார். ஆனந்த போதினிக்குப் போட்டியாக, ‘ஆனந்த விகடன்’ என்ற பெயரை வைத்தார். ஆனால், ஆனந்த விகடன் பத்திரிகை தொடர்ந்து நடைபெற முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தது.


இவர் நிலை இவ்வாறு இருக்க எஸ். சீனிவாசன், என்கிற தன் பெயரை எஸ். எஸ். வாசன் என்று சுருக்கிக் கொண்ட இளமைத் துடிப்புள்ள அந்த மனிதர் விபிபி மூலம் மக்களுக்குத் தேவையான பொருள்களை விற்று அதில் பெருமளவில் இலாபம் சம்பாதித்துக் கொண்டு இருந்தார். தன் வணிகத்திற்கு அவர் ஆனந்த விகடனில் விளம்பரம் கொடுக்கச் சென்ற போதுதான், அவர் கொடுத்த விளம்பரம் இடம் பெற முடியாமல் ஆனந்த விகடன் இதழும் நின்று போயிருந்தது. பூதூர் வைத்தியநாத அய்யர் சொன்ன படியே, அடுத்த மாதம் நின்றுபோன இரண்டு இதழ்களும் சேர்ந்து ஒரே இதழாக வந்தன. ஆனாலும் அவரால் அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார்.


அந்த நேரத்தில் அவருடன் தொடர்பு கொண்டு இருந்த இளைஞர் வாசன் பத்திரிகை விற்காமல் போனதற்குக் காரணங்களை அவரிடம் விளக்கிச் சொன்ன தோடு, விற்பனை ஆவதற்கு என்னென்ன நுட்பங்களைக் கையாளலாம் என்றும் ஆலோசனை சொன்னார். வைத்தியநாத அய்யர், “இந்த நுட்பங்களைச் சொல்கிற நீங்களே அதை ஏற்று ஏன் நடத்தக் கூடாது என்று கேட்டார். வாசன், “பத்திரிகை உரிமையை விட்டுத் தருவதற்கு என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்” என்று கேட்டார்.
200 ரூபாய் கொடுத்தால் போதும் என்றார் வைத்தியநாத அய்யர். ஆனந்த விகடன் உரிமையை வாசன் பெற்றுக் கொண்டார். வெளி அச்சகத்தில் கொடுத்து பத்திரிகை அடித்தால் கால இழப்பு ஏற்படும் என எண்ணிய அவர் உடனே அச்சு எந்திரம் வாங்குவதற்கும் ஏற்பாடு செய்தார்.


அவர் அதுவரை செய்து வந்த விபிபி வணிகத்தை அண்ணாபிள்ளை தெருவில் இருந்து மாற்றி, தங்கசாலைத் தெருவில் இல்லமும், அலுவலகமும் ஒரே இடத்தில் அமையுமாறு கட்டிடம் ஒன்றை வாட கைக்குப் பிடித்தார். 1928 ஃபிப்ரவரி மாதத்தில் வாசன் பொறுப்பில் முதல் ஆனந்த விகடன் இதழ் வெளிவந்தது. அதில் பல மாற்றங்களைச் செய்து இருந்தார்.


பூதூர் வைத்தியநாத அய்யர் நடத்திய ஆனந்த விகடனில் முகப்பில் ஆனந்த விநாயகரின் படமும், வைத்தியநாத அய்யரே எழுதிய காப்புச் செய்யுளும் இடம்பெற்று இருந்தன. அதற்கு பதிலாக விநாயகரின் இடத்தில் அன்னை பாரத தேவியின் உரு வத்தை இடம்பெறச் செய்தார் வாசன். இதற்குக் கீழே,


வல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!


என்கிற தாயுமானவரின் வரிகளை இடம் பெறச் செய்தார். ஒரு சிறந்த வர்த்தகர், நல்ல முறையில் இலாபம் ஈட்டாமல் எந்தத் தொழிலையும் தொடர்ந்து நடத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும். அதற்காகப் பல்வேறு வழிகளை அவர் கையாண்டார். ஒவ்வோர் இதழிலும் அட்டையில் தொடர் எண் ஒன்று பொறிக்கப்பட்டு இருக்கும்.


ஒவ்வொரு வாரமும் அந்த எண்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டு பரிசுகள் வழங்கப்படும். அதற்காக பலரும் ஆனந்த விகடன் வாங்கினார்கள் என்பதோடு, பரிசுகளுக்காக ஆவலோடு காத் திருந்ததையும் நான் பார்த்து இருக்கிறேன்.
பத்திரிக்கை விற்பனையை அதிகப்படுத்த வாசன் கையாண்ட முக்கிய வழி, ஆனந்த விகடனில் அவர் நடத்திய பகுத்தறிவுப் போட்டியாகும். குறுக்கெழுத்துப் போட்டி யைத்தான் அவர் பகுத்தறிவு போட்டி என்று அழைத்தார்.


சிந்திக்கத் தூண்டும் வாசகங்களைக் கொடுத்து, அதற்கு பொருத்தமான சொற்களைக் கட்டங்களில் நிரப்பச் சொல்லும் போட்டி அது.


இந்தப் போட்டியின் விளைவாக ஆனந்த விகடன் விற்பனை பல மடங்கு உயர்ந்தது பல ஆண்டுகள் பகுத்தறிவுப் போட்டி நடத்தி பரிசுத் தொகையை உயர்த்திக் கொண்டே போனார். இதுபோன்ற போட்டி களைத் தடைசெய்கிற சட்டம் வருகின்ற வரை வாசன் போட்டியை நிறுத்தவில்லை. பிறகு சட்டத்தை மீற முடியாமல் பகுத்தறிவுப் போட்டி நடத்துவதை நிறுத்திக் கொண்டார்.


பத்திரிகையில் வெளிவருகிற செய்தி களிலும் அதிகக் கவனம் செலுத்தினார். தொடக்கத்தில் பிரபலமான மனிதர்களை வைத்து கட்டுரைகளை எழுதச் செய்தார். மேலை நாட்டுப் பத்திரிகைகள் சில நகைச் சுவையை மையமாகக் கொண்டு, பெருமள வுக்கு வெற்றி பெற்று இருப்பதையும் அவர் கவனத்தில் கொண்டார்.


நகைச்சுவையுடன் எழுதக் கூடியவர்கள் யாராவது கிடைக்க மாட்டார்களா என்று வாசன் ஏங்கிக் கொண்டு இருந்த காலத்தில் தான், கல்கி என்கிற புனைபெயருடன் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய ரா. கிருஷ்ணமூர்த்தி வாசனுக்கு அறிமுகமானர். நகைச்சுவையுடன் ஒரு கட்டுரையை எழுதித் தரும்படி கல்கியை வாசன் கேட்டுக் கொண்டார். ஏட்டிக்குப் போட்டி என்கிற தலைப்பில் கல்கி கட்டுரை எழுதிக் கொடுத்தார். வாசன் எதிர்பார்த்த நகைச் சுவை ததும்பி வழிந்தது.


திறமை எங்கு இருந்தாலும் அதை உடனே அங்கீகரித்து, அதற்கு உரிய இடத்தைக் கொடுத்து பெருமைப் படுத்துபவர் வாசன்.
மக்களின் உளப்பாங்கை அறிந்து பத்திரிகைப் பாணியை மாற்றிக் கொள்வ தற்கு அவர் தயங்கியதே இல்லை. ஒரு கால கட்டத்தில் ஆனந்த விகடனில் பிராமணத் தமிழ் அதிகமாக இருப்பதாக எண்ணினார்.


பலரும் படிக்கிற பத்திரிகையில் ஒரு குறிப் பிட்ட வகுப்பாரின் பேச்சு வழக்கு மட்டும் இடம்பெறுவதை அவர் விரும்பவில்லை. துணை ஆசிரியரை அழைத்து பிராமணத் தமிழ் அதிகமாக இடம் பெறாதவாறு பார்த்துக் கொள்ளும் படிக் கேட்டுக் கொண்டார்.


கம்யூனிஸ்டு கட்சித் தோழர் விஜய பாஸ்கரன் நடத்திய சரஸ்வதி என்கிற இதழில் வெளியாகி இருந்த ஜெய காந்தனின் சிறுகதையால் ஈர்க்கப்பட்ட வாசன், அவரை அழைத்து ஆனந்த விகடனிலும் சிறுகதைகள் எழுத வைத்தார்.


மாணவர்களிடம் உள்ள எழுத்துத் திறமையைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வருவதற்காக, விகடன் மாணவர் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை வெளியிட்டார். அதன் மூலமும் கண்டு பிடித்த சிலரைப் பின்னர் ஆசிரியர் குழுவிலும் சேர்த்துக் கொண்டார்.


ஆனந்த விகடனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருந்த காலத்திலேயே வாசன் திரை உலகப் பிரவேசம் செய்தார். முதலில் ஜெமினி பிக்சர்ஸ் என்கிற பெயரில் திரைப்பட வெளியீட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.


அவர் எடுத்த முதல் படம் மதன காமராஜன். தலைமுறை தலைமுறையாக மக்களிடையே செல்வாக்குப் பெற்று வழக்கில் இருந்த நாடோடிப் பாடல் கதை அது. மக்களுக்கு எது பிடிக்கும் எனக் கண்டு பிடிப்பதில் வல்லவரான வாசன் அந்தக் கதையைத் தேர்வு செய்து வெற்றிகரமான படமும் ஆக்கினார்.


ஜெமினி ஸ்டூடியோவை வாசன் வேறு தயாரிப்பாளர்களுக்கும் வாடகைக்கு விடத் தொடங்கினார். ஜெமினி கலர் லேபரட்டரி ஒன்றையும் உருவாக்கினார்.


துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் வாசனுக்கு நிகர் அவர்தான். எந்தப் சிக்கலுக்கும் தன்னால் தீர்வு காண முடியும் என நம்பி னார். தீர்வும் கண்டார். கூட்டு முயற்சியில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவராக அனைவரையும் அணைத்துச் செல்கிற தன்னிகரற்ற திறமை அவரிடம் இருந்தது.


திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்குதான். அதற்கான தன்மை படத்தில் இருந்தால் போதும் என்பதுதான் அவர் கையாண்ட ஃபார்முலா.


எந்தப் பொழுதுபோக்கு மக்களைக் கவரும் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர் மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்தவராக இருக்க வேண்டும். தன்னை ஒரு சராசரி மனிதனாக்கிக் கொண்டு, அவருடைய கோணத்தில் இருந்து பொழுது போக்குக்குத் தேவை யான அம்சங்களைச் சிந்திக்க வேண்டும்.


அது வாசனிடம் நிறையவே இருந்தது. அவர் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் அதுவே காரணம். அவர் நடத்திய ஆனந்த விகடன் பத்திரிகை ஆனாலும் சரி, அவர் தயாரித்த திரைப்படங்கள் ஆனாலும் சரி இவற்றில் அவர் வல்லுநராகவும் முன் னோடியாகவும் திகழ்ந்தார்.


புத்தி சாலித்தனம், கடின உழைப்பு, அதில் கொஞ்சம் ரிஸ்க் ஆகிய கலவைதான் வாசன்.

-பி. சி. கணேசன், எழுதி கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட ‘மக்களை மகிழ்வித்த மாமேதை எஸ். எஸ். வாசன்’ என்ற நூலில் இருந்து.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news