Latest Posts

டாய்லெட் தேவையைத் தொழிலாக்கினார்: ‘சுலப்’ பிந்தேஷ்வர் பாதக் காட்டிய அசராத துணிச்சல்!

- Advertisement -

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பாகெல் சிற்றூரில் பிறந்தவர் திரு பிந்தேஷ்வர் பாதக். பிந்தேஷ்வர் தங்கத் தொட்டிலில் பிறந்த குழந்தை என்று சொல்லலாம். மாபெரும் நிலப்பரப்பில், பெரிய வீட்டில் வளர்ந்தார். மாவு அரைக்க ஓர் அறை, தண்ணீர் எடுக்க ஒரு கிணறு – என்று ஒன்பது அறைகள் இருந்தன.
ஆனால் கழிப்பறை கிடையாது. விடியற்காலை 4.00 மணிக்கு வீட்டில் ஒரே ரகளை. பெண்மணிகள் எல்லோரும் சூரியன் தோன்றும் நேரத்திற்கு முன்பே தங்களுடைய காலைக் கடன்களை முடித்தாக வேண்டும்.

குழந்தையான நான் தூங்கிக் கொண்டு இருந்தாலும், சுற்றிலும் வாளி தூக்குவது, தண்ணீர் நிரப்புவது போன்ற செயல்கள் நடப்பதை உணர முடிந்தது என நினைவு கூர்கிறார் பிந்தேஷ்வர்.

வீட்டுப் பெண்களில் யாருக்காவது உடல் நலம் இல்லாதிருந்தால், ஒரு வைக்கோல் கூடை அல்லது சாம்பல் பூசிய மண்கலத்தில் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

சிறுவன் பிந்தேஷ்வர் பாதக் இவற்றைக் கவனித்துவிட்டு, ‘ஏதோ சரியில்லை’ என்று உணர்ந்து கொண்டார். பல பெண்மணிகள் நாள் முழுவதும் விடுவித்துக் கொள்ள முடியாத கட்டாயத்தால், தலைவலியால் பாதிக்கப் பட்டார்கள். மேலும் அவர்களுக்கு எப்போதுமே புல்வெளியில் நச்சுப் பூச்சிகள் மற்றும் பாம்புகளால் இன்னல்கள் இருந்தன.

பிந்தேஷ்வர் வேறுபட்ட பல பள்ளிகளில் படித்தார். எதிலும் கழிப்பறை இல்லை. பெண் மாணவிகளும் கிடையாது. அந்த நாட்களில் பெரும்பாலான இடங்களில் இந்த நிலமைதான்.

கழிப்பறைகள் இல்லாமை, அளவு கடந்த நோய்கள். எதிர்பாராத விதமாக, பிந்தேஷ்வரின் குடும்பம் தங்களது சொத்தை விற்க நேர்ந்தது. தன் குடும்பம் மறுபடியும் தலைநிமிர்ந்து நடக்க, ஏதாவது செய்து, அவரது பொருளாதார நிலையைத் திடமாக்க வேண்டும் என்று இந்த இளம் மனதில் தோன்றியது.

பிந்தேஷ்வர் ஆண்டு முழுவதும் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தார். பிந்தேஷ்வர் முதலில் பள்ளி ஆசிரியர் ஆனார். பிறகு பல சில்லறை வேலைகள் செய்து விட்டு, குடும்ப வணிகத்தில் சேர்ந்தார். ஆயுர்வேத மருந்துகள் விற்கும் தொழில்.

மேலும் பல்வேறு வேலைகளை, சம்பளம் இல்லாமலோ, அல்லது மிகக் குறைந்த சம்பளத்திற்கோ செய்துவிட்டு, பல்வேறு போராட்டங்களையும் சந்தித்த பிந்தேஷ்வர், காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காந்தியைப் போலவே தானும் பொதுச் சேவைகள் செய்ய வேண்டுமென ஆர்வம் கொண்டார்.

காந்தி சந்தேஷ் பிரச்சார் என்ற துணைக் குழுவுடன் பிந்தேஷ்வர் வேலை செய்யத் தொடங்கினார். தொடர்ந்து அந்த குழுவினர் செய்த முடிவின்படி, துப்புரவுப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். பிந்தேஷ்வரின் உண்மையான பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. காந்தியின் கனவை நிறைவேற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாளி கழிப்பறைகளை தூய்மைப் படுத்தும் திட்டத்தைப் புறக்கணிக்க முடியாது. மாற்றுவழி ஒன்றை அமைக்க வேண்டும். அவர் ஒரு பொறியாளர் இல்லை என்பதால், கழிப்பறைச் சிக்கலை எப்படித் தீர்க்க முடியும் என்று சிந்தித்தார். அப்போதுதான் சரயு பிரசாத் என்பவர், பிந்தேஷ்வரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.

ஊரகப் பகுதிகளில் மற்றும் சிறிய சமூகங்களில் மனிதக் கழிவுகளை அகற்றுதல் என்ற தலைப்பு கொண்ட அந்த புத்தகம் அப்போது உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் கையேட்டில் ஒரு பகுதி, பிந்தேஷ்வர் மனதில் ஆழப்பதிந்தது. உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட பலவகைப்பட்ட கழிப்பறை வடிவமைப்புகளில், பிட் ப்ரைவி (bit privy) தான் உலகளவில் நடைமுறைக்குரிய, பயன்படுத்தக் கூடிய சிறந்த ஒன்று என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுலப் உருவாக்கிய தொழில் நுட்பத்தின் அடிப்படை எளிது. குறைந்த செலவு, சிறிதளவு தண்ணீர், கழிவு மூலதனமாக மாறுகிறது. உள்ளூரிலேயே விரைவாகக் கட்டலாம்.

ஒரு குவளை நீரால் மட்டுமே திறனுடன் நீக்கப்படும் ஆழ்ந்த சாய்வான கொள்கலம் உருவாக்கப் பட்டது. இந்தக் கலம் ஒரு ஒய் வடிவ கால்வாய் மூலம் இரு குழிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

ஒரு குழி நிரம்புவதற்கு, பயன்பாட்டைப் பொறுத்து, மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். கழிவுப் பொருட்கள் இரண்டாவது குழிக்கு அனுப்பப்படும்.
சாக்கடை அமைப்பு, செப்டிக் டாங்க் ஆகியவற்றுக்குத் தேவையில்லை. மேலும் முதல் குழியின் கழிவுப் பொருட்கள், காலம் கடந்த பிறகு, மதிப்பு மிக்க உரமாகி விடுகிறது. துர்நாற்றம், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இல்லாது, மனிதர்களால் துப்புரவு செய்ய வேண்டிய தேவையும் இல்லை.

பிந்தேஷவர், தன் கையாலேயே அந்த வேலையைச் செய்தார். என் கையாலேயே கொள்கலங்கள் செய்து மெருகு ஏற்றி இருக்கிறேன். தொடக்கத்தில் இந்த வேலை செய்வதற்கு சில மாதங்கள் வேண்டி இருந்தன. கச்சிதமாக வடிவமைக்க மூன்று ஆண்டுகள் ஆகின என்கிறார்.

சுலபின் பெரிய பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே அதன் எளிமைதான். பிந்தேஷ்வர் அரசை முதலில் அணுகிய போது, இது வேலை செய்யாது, பயனற்றது, என்ற மதிப்புரைதான் கிடைத்தது.

தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் முயற்சி செய்தார் பிந்தேஷ்வர். நான் பொறியியல் படித்து இருக்கிறேன். இதுவரை இம்மாதிரி எதையும் பார்த்தது இல்லை. இது சரிபட்டு வராது என புறக்கணித்தார் பொறியாளர் ரமேஷ் சந்திர அரோரா.

பிறகு நீ ஒரு பொறியாளரா? என்று பிந்தேஷ்வரைக் கேட்டார். நீங்கள் இதை ஆராய்ந்து பார்க்கலாமே? என்று ரமேஷைக் கேட்டார் பிந்தேஷ்வர். நான் பாட்னா நகரின் தலைமையில் இருக்கும் வரை, இந்த மாதிரி கழிப்பறையில் பணத்தை வீண் செய்ய சம்மதிக்க மாட்டேன் என்று மறுத்தார் ரமேஷ்.

என் மனைவியைத் தவிர, ஒவ்வொருவரும் நான் ஏற்றுக் கொண்ட வேலைக்கு எதிர்ப்பு காட்டினார்கள். இருந்தும் பின்னர் நான் வெற்றி அடைந்த போது, எல்லோரும் திரும்பி திரண்டு வந்தார்கள். நேரத்திற்கேற்ப, உலகின் மனநிலைப் பாங்கும் மாறி விடுகிறது.
இப்படி பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு, 1973 இல் சுலப் கழிப்பறையின் தொடக்கம் அமைந்தது. ஆனால் இன்னும் இரு குழி திட்டத்திற்கு ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாக இருந்தது. வீடு வீடாகப் போய் நன்மைகளை எடுத்துச் சொன்னாலும், பெரும்பாலோர் எங்களுக்கு ஒரு செப்டிக் டேங்க் இருந்தால் போதும் என்பார்கள்.

அப்போது சுரேஷ் பிரசாத் சிங் என்ற பெயருள்ள ஒரு தொகுதி கவுன்சிலர் உதவிக்கு வந்தார். அவரது இரு கழிப்பறைகளை சுலப் கழிப்பறையாக மாற்றச் சொன்னார். வட்டாரத்தில் செய்தி பரவிய பிறகு, இன்னும் பலர் பிந்தேஷ்வரை அணுகினர். சுலப் கழிவறை, இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது. 1978 இல், பீகாரில் இருந்து வங்காளம், ஒரிசா, உத்தரப் பிரதேசம் என தொடங்கி, இந்தியா முழுவதும் பரவியது.

இன்று ஆஃப்கானிஸ்தானிலும் சுலப் இருக்கிறது. மற்றும் 14 ஆஃப்ரிக்க நாடுகளின் அறிஞர்களின் அந்த மாதிரியைப் பின்பற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கட்டிக் கொடுக்கும் கழிப்பறைகளுக்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டியும் சுலப் தந்தது. எதையும் பழுதுபார்க்க வேண்டி இருந்தாலோ மாற்ற வேண்டி இருந்தாலோ இலவசமாக செய்யப்பட்டது.

கழிவை அகற்றும் முறைக்கு நல்ல மாற்று வழியைக் கண்டறிந்த மகத்தான சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது, இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டது.

பீகாரில் 2018 இல் லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் கொடுக்கும் திட்டம், சுலப் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பின்பு விரிவுபடுத்தப்பட்டது. மேற்கு வங்காள மாநிலத்தில், ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுலப் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் ஏடிஎம் அறிமுகப்படுத்தப் பட்டு, அதன் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் இனி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என சுலப் இன்டர்நேஷனல் நம்பிக்கை தெரிவிக்கிறது.

மேலும் சுலப் பன்னாட்டு துப்புரவுப் பல்கலைக் கழகமும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பல்கலைக்கழகம், பன்னாடுகள் அளவில் இளைஞர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு சுத்திகரிப்பு, துப்புரவு, திறமை மேம்படுத்துதல், சுகாதாரம் தொடர்பான பயிற்சிகளை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய தொழில் முனைவோருக்கு பிந்தேஷ்வர் பாதக் என்ன சொல்ல வருகிறார்? ‘’நாடு முழுவதும் கழிப்பறைகளின் பற்றாமை ஒரு பெரிய சிக்கல் என்பதால், இது நாடளாவிய சிக்கலாக பரப்புரை செய்யப்பட வேண்டும்.

இளைஞர்கள், எது செய்தாலும், தன் அடையாளத்தை, முத்திரையை உருவாக்க வேண்டும். யார் தன் இயல்பால் அறியப்படுகிறாரோ, அவரே முதல்வன் ஆகிறார். தம் துறையில் முதல்வனாக இருப்பது, மிகச் சிறந்த உணர்வைத் தரும்’’ என்கிறார்.

– ஹெலன் ஜஸ்டின்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news