நல்ல லாபம் தரும் மறுசுழற்சிப் பொருட்கள் கடை

குன்றத்தூரை அடுத்த ஆண்டாள் குப்பத்தில் வசித்து வருகிறார் திருமதி. ஆர் சாந்தி. இவர் புதுப்பேடு என்னும் இடத்தில் ஆர்எஸ்ஆர் வேஸ்ட் ஸ்கிராப் மார்ட் கம்பனியை நடத்தி வருகிறார். அவரிடம் அவரின் தொழில் பற்றி கேட்டபோது,
எனக்கு முன் என் கணவர் இந்த தொழிலை செய்து வந்தார்.

அவர் அமரம்பேட்டில் சொந்தமாக கடை வைத்து இருந்தார். பத்து ஆண்டுகளாக இந்த தொழிலை செய்தார். தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் அதிகமாகி விட்டது. என் கணவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

அதனால் சொந்த இடத்தை விற்க வேண்டிய தாயிற்று. இப்போது வாடகை இடத்தில் தான் கம்பனி வைத்து இருக்கிறேன். எனக்கு வேறு எந்த தொழிலும் செய்ய தெரியாததால் என் கணவர் பார்த்து வந்த இந்த தொழிலையே நானும் தேர்ந்தெடுத்தேன்.

அவர் இருக்கும் போது அவருடன் இந்த வேலைக்கு செல்வேன். அதனால் இந்த தொழிலை எளிமையாக புரிந்துக் கொண்டேன் என்று கருதுகிறேன். இப்போது நான் இந்த தொழிலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் அதிகம் படிக்கவில்லை.

அதனால் கம்பனியின் கணக்கு வழக்குகளை என் கணவரின் தம்பி எம். இரத்தினகுமார் பார்த்துக் கொள்கிறார். இவர் இந்த தொழிலில் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். மெட்டல்களை வாங்கி வருவது, விற்பது போன்ற வேலைகளையும் இவரே பார்த்துக் கொள்வார்.

எங்கள் கம்பனி மிகச் சிறிய கம்பனி. மொத்தம் எட்டு நபர்கள் வேலை செய்கிறோம். அதில் நான்கு பேர் ஒரிசாக்காரர்கள். அதில் ஒருவருக்கு தான் தமிழில் பேச தெரியும்.
அவர்கள் வேலை நன்றாக செய்வார்கள். அதனால் என் கணவர் அவர்களை வேலைக்கு வைத்தார்.

அவர்கள் தங்குவதற்கு கம்பனி அருகிலேயே இடவசதி செய்து கொடுத்து இருக்கிறோம். இவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு செல்வார்கள். இரண்டு பேர் சென்றால் இரண்டு பேர் வேலை செய்வார்கள். மேலும் கம்பனியில் ஒரு தமிழ்க்காரரும் என் அம்மாவும் வேலை செய்கிறார்கள்.

வேலைய ஆட்களுக்கு வார சம்பளம் அளிக்கிறோம். இவர்கள் மெட்டல் கடைகளில் இருந்து வாங்கி வரும் கம்ப்ரசர், வாஷிங் மிஷின், பிரிட்ஜ் போன்றவைகளை உடைத்து இரும்பு தனியாக பிளாஸ்டிக் தனியாக பிரிப்பார்கள்.

செம்பை தனியாக பிரித்து எடுக்க நெருப்பில் காய்ச்ச வேண்டும். நான் அந்த வேலையை செய்வேன். பிறகு பிரித்து வைத்து உள்ளவற்றை ஏற்றிச் செல்ல வாகனம் சொந்தமாக வைத்து இருக்கிறோம். அவைகளை ஏற்றிச் சென்று அருகில் உள்ள காயலாங்கடைகளில் போடுவோம்.

இப்படி மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஏற்றிச் சென்று விற்று விடுவோம். இரும்பு ஒரு கிலோ ரூ. 24.50, ஒரு கிலோ செம்பு ரூ. 372. அரசு தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து உள்ளது. அதனால் பிளாஸ்டிக்களின் விலை குறைந்து உள்ளது.

இப்போது நிறைய பேர் இந்த தொழிலை செய்து வருகிறார்கள். இந்த வேலை தூசி நிரம்பியது. அதனால் உடல் உபாதைகள், அரிப்பு போன்றவைகள் ஏற்படுவதாக கூறுகிறார்கள். எந்த தொழிலாக இருந்தாலும் எடுத்த எப்பிலேயே இலாபம் காண்பது அரிது. நம்பிக்கையும் விடாமுயற்ச்சியும் இருக்க வேண்டும்.

இந்த தொழிலில் முன்னேறுவதற்கு அதிக முதல் போட வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும். சொந்த வாகனம், சொந்த இடத்தில் கம்பனி வைத்து அதிக வேலைய ஆட்களை அமர்த்தி தொடர்ந்து வேலை செய்தால் இந்த தொழிலில் அதிகம் இலாபம் ஈட்டலாம் என்கிறார் திருமதி. ஆர் சாந்தி.

– மு. யோகி
(மாணவ பத்திரிகையாளர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here