சென்னையில் உள்ள புனித இசபெல் மருத்துவமனையில் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர் திரு. ஜான்சன். இவருடைய மகன் திரு. பிரகாஷ் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் மயிலாப்பூரில் ஒரு தேநீர்க் கடை நடத்தி வருகிறார். ஒய்வு பெற்ற பிறகு தனி ஆளாக ஒரு கடை நடத்தும் அனுபவத்தை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
” நான் ஓய்வு பெற்ற பிறகு ஏதாவது செக்யூரிட்டி வேலைக்கு போகலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது காவேரி மருத்துவமனையில் பில்லிங் பிரிவில் வேலை பார்க்கும் என் மகன் திரு. பிரகாஷ்தான் இந்த தேநீர்க் கடை வைக்கும் எண்ணத்தை உருவாக்கி அவரே அதற்கான எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.
இப்போதும் நாள்தோறும் அவருக்கு நேரம் இருக்கும்போது கடைக்கு வந்து எனக்கு உதவுவார். தேவையான ஆலோசனைகளைச் சொல்வார். சில நேரங்களில் தேவைப்படும் பொருள்களையும் கொள்முதல் செய்து தருவார். என்னுடைய மனைவியும், மருமகளும் கூட எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
இதற்காக தேநீர் வகைகளை தயாரிக்க, பழச்சாறு தயாரிக்க கற்றுக் கொண்டேன். மற்றபடி பொதுவாக ஒரு தேநீர்க் கடையில் இருக்கும் பிஸ்கட் வகைகள், சாக்லேட் வகைகள், சமோசா, பானிபூரி, போன்ற தின்பண்டங்களையும் விற்பனை செய்கிறேன். இவை போக என் கடையின் சிறப்பம்சமாக ஆவாரம்பூ தேநீர் வழங்குகிறேன். உடல் நலனில் ஆர்வம் செலுத்துபவர்களும், சர்க்கரை குறைபாடு உள்ளவர்களும் ஆவாரம் தேநீரை விரும்பிக் குடிக்கிறார்கள்.
எனக்கு வியாபாரம் புதிது என்பதால் முதலில் கொஞ்சம் திணறல் இருந்தது. இப்பபோது நன்றாக பழகி விட்டது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் முதலில் இருந்ததை விட கணிசமாக அதிகரித்து உள்ளது.
அருகில் மேல்நிலைப் பள்ளி இருப்பதால் மாணவர்கள் நிறையப் பேர்கள் வருகிறார்கள். மருத்து மனை ஒன்றும் அருகில் இருக்கிறது. அங்கு மருத்துவம் பார்க்க வருபவர்களுக்கு பழச்சாறு வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பவர்களால் பழச்சாறு விற்பனையும் அதிகரித்து வருகிறது.
கடைக்குத் தேவையான காப்பி ஃபில்ட்டர், மிக்சிகள் போன்றவற்றையும், மற்ற ஃபர்னிச்சர்களையும் என் மகனேதான் விசாரித்து வாங்கிக் கொடுத்தார். மருமகளும் விற்பனை உயர்வுக்க தேவையான நல்ல ஐடியாக்களை தருவதோடு பானிபூரிக்கு தேவையான மசாலாவைத் தயாரித்துத் தருவார். இந்த கடை நடத்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. எனக்கு தற்போது அறுபத்தொன்று வயது ஆகிறது.
ஆனாலும் ஒரு இளைஞரைப் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய என் மகனுக்கு நன்றி” என்றார், திரு. ஜான்சன்.
– ஆர். நந்தினி (மாணவ பத்திரிகையாளர்)