சேவைத் தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு பல வாய்ப்புகள் இன்று உண்டு. குறிப்பாக காப்பீட்டு முகவர்களுக்கு இன்று மேலும் பல வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றி ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு குழு மேலாளராக இருக்கும் திரு. எல்லையா இது பற்றிக் கூறும்போது,
”ஒரு வாடிக்கையாளருக்கு ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்பான பணிகளுக்கு அதற்கான முகவர்களை தனித்தனியே நாடி செல்வார்கள். ஆனால் ஆயுள் காப்பீட்டு முகவர் ஒருவரே, இவை அனைத்தையும் விற்பனை செய்து வருமானம் பெறலாம். அதற்கான வாய்ப்புகள் இன்று உண்டு.
அண்மையில் மருத்துவ காப்பீடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இதற்கான முகவர் தனியாக இருக்கிறார் என்றாலும், ஆயுள் காப்பீட்டு முகவரும் இதனை விற்பனை செய்யலாம்.
முகவர்கள் முழு நேரமும் செயல்படலாம், அல்லது பகுதி நேரமும் பணி புரியலாம், எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை நோக்கி செல்கிறோமோ, அந்த அளவுக்கு பயன் தரும். இவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அவர்கள் சேரும் நிறுவனங்களே வழங்கும். தேவைப்படும் பொழுது நிறுவன மேலாளர், முகவர்களுடன் வந்து வாடிக்கையாளர்களை சந்திப்பார்.
இன்று ஆயுள் காப்பீட்டு முகவர்கள் ஐஆர்டிஏ (IRDA) தேர்வு எழுதி ஆயுள் காப்பீடு விற்பனை செய்கிறார்கள். அதே போல் இவர்கள் ஏஎம்எஃப்ஐ (AMFI) தேர்வு எழுதி மியூச்சுவல் நிதி (Mutual Fund) முகவராகவும் செயல்படலாம்.
இவை தவிர நிறுவன பத்திரங்கள் (Company Bonds), கடன் பத்திரங்கள் (Debentures) போன்றவற்றைக் கூட விற்பனை செய்ய முடியும்.
காப்பீடு விற்பனை செய்த அடுத்த ஆண்டு நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தும் நாளை நினைவுபடுத்தினால், வாடிக்கையார் உங்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைப்பார். தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் காப்பீடுகளுக்கு உங்களையே தேர்வு செய்வார்.
காப்பீடு விற்பது ஒரு குடும்பத்தை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு நிகராகும்.” என்றார், திரு. எல்லையா.
– ஜா. செழியன்
.
Join our list
Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.