Latest Posts

வாய்ப்புகள் அதிகம் உள்ள சுற்றுலாத் தொழில்கள்

- Advertisement -

சென்னையில் உள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனம் பற்றியும், அதன் மேலாண் இயக்குநர் திரு. விகேடி. பாலன் பற்றியும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அவர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து சென்னைக்கு வந்து, தன்னுடைய உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறி வந்த கதையை அறிந்து ஊக்கம் பெற்ற தொழில் முனைவோர் எண்ணற்றவர்கள். இவர் பொதிகை தொலைக்காட்சியில் நெறியாளுகை செய்த ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ இவருடைய சமுதாய அக்கறையை வெளிக்காட்டிய நிகழ்ச்சியாக அமைந்ததோடு, அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.

இன்றைக்கு தமிழ்நாட்டுத் தொழில்துறையில் உள்ள சிக்கல்களில் ஒன்றாக அறியப்படுவது, தொழிலதிபர்களின், வணிகர்களின் பிள்ளைகள் படித்து விட்டு வேலைக்கு செல்லும் மனநிலை வளர்ந்து வருவது ஆகும். தொழில்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு அளிக்கும் பெரிய தளம் தங்களிடம் இருப்பதை உணராமல், இத்தகைய இளைஞர்கள் வேலை பார்க்கச் செல்லும் மனநிலையை மாற்ற வேண்டும் என்று தமிழர்கள் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய இளைஞர்களை தொழில் துறையில் சாதிப்பவர்களாக உருவாக்க வேண்டும் என்ற கருத்துப் பரப்பலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தன்னுடைய மகன் திரு. ஸ்ரீகரன் பாலனை, தன்னுடைய ‘மதுரா டிராவல்ஸ்’ நிறுவன நிர்வாகப் பணிகளில் வெற்றிகரமாக ஈடுபடுத்தி இருக்கிறார், திரு. விகேடி. பாலன்.

பொறியியல் பட்டதாரியான திரு. ஸ்ரீகரன்பாலனை சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வளர்தொழில் இதழுக்காக பேட்டி கண்டோம். மிகுந்த உற்சாகத்துடன் நம்முடன் பேசினார். அவருடைய பேட்டியில் இருந்து…
”சென்னை மந்தைவெளியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்து விட்டு சோழிங்க நல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பி.இ.,(மெக்கானிகல்) படித்தேன்.

எனக்கு பிடித்த பாடங்கள் கணக்கும், இயற்பியலும்.. படிப்பை முடித்தவுடன் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. நான் விரும்பிப் படித்த மெக்கானிக்கல் துறை சாரந்த வேலைக்கு முயற்சி செய்தேன். அதன் விளைவாக, ஒரு பிரபல நிறுவனத்தில் நான் விரும்பும்படியான வேலை கிடைத்தது. குறிப்பட்ட தேதியில் வேலையில் சேரும்படி அழைப்பு வந்தது. வேலையில் சேர்வதற்கு சில நாட்களுக்கு முன், நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினேன். என் முழங்கால் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். அதுவரை என்னுடைய படிப்பு, வேலை தொடர்பாக, அப்பா என்னுடைய விருப்பப்படியே செயல்பட அனுமதித்து இருந்தார். வேலை தேடும் முயற்சி தொடர்பாகக் கூட அவர் தடை சொன்னது இல்லை.

அன்று படுக்கையில் இருந்த என்னிடம் முதல் முறையாக எனக்கு வழிகாட்டும் வகையில், ”நம்மிடம் நல்ல தொழில் உள்ளது. உனக்கு விருப்பம் இருந்தால் நீ ஏன் இதில் கவனம் செலுத்தக் கூடாது?” என்று ஒரு ஆலோசனை போலச் சொன்னார். அவர் குரலில் வற்புறுத்தல் தொனி எதுவும் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் நீ எடுக்கலாம் என்பது போன்ற தொனிதான் இருந்தது.

முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த பாடங்கள் கணக்கும், இயற்பியலும். சுற்றுலா தொழில் புவியியல் சார்ந்தது. இருந்தாலும் அப்பா மீது நான் வைத்திருந்த அளவு கடந்த மதிப்பு காரணமாக மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். இதுவரை நம்மிடம் அப்பா எதுவுமே கேட்டது இல்லை; முதல் முறையாக கேட்கிறார், இதை மறுக்கக் கூடாது என்ற உணர்வும் இருந்தது.
தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு அதன் அடிப்படைகளையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள விரும்பினேன். எங்கள் நிறுவனப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் எனக்கு இல்லாததால் எனக்கு பயிற்சி வேண்டும் என்று கருதினேன்.

அப்பா, தன்னுடைய நண்பரும், எங்களைப் போன்ற டிராவல்ஸ் தொழில் நிறுவனத்தை நடத்துபவருமான திரு. சில்வஸ்டர் தாமஸ் நிறுவனத்தில் என்னை பயிற்சிக்காக சேர்த்து விட்டார். அரவுண்ட் த வேர்ல்ட் (Around The World) என்ற பெயர் கொண்ட அந்த நிறுவனம், சென்னை உள்பட இந்தியா முழுவதும் அலுவலகங்களைக் கொண்டது.

வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று பாஸ்போர்ட் வழங்குவது, படிவங்களை நிரப்பிக் கொடுப்பது போன்ற வேலைகளை முதல் மூன்று மாதங்களுக்கு செய்தேன். அதுவரை அந்த நிறுவனத்தின் தலைவர் திரு. சில்வஸ்டர் தாமஸ் அவர்கள் என்னிடம் பேசக்கூட இல்லை. என்ன ஏது என்று கூட விசாரிக்கவில்லை. இது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பயிற்சியில் தொடர்வதா, வேண்டாமா என்று நினைக்கத் தொடங்கினேன்.

அப்பாவிடம் சொல்லி விட்டு விலகிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் அவர் என்னை அழைத்து, தன் அருகில் அமர வைத்துப் பேசினார். அன்று முதல் அடுத்த மூன்று மாதங்களில் சுற்றுலா தொழில் தொடர்பான பல்வேறு நுட்பங்களை படிப்படியாக கற்றுக் கொடுத்தார். அவரைப் பற்றி நான் நினைத்தது தவறு என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர் மூலம் பல வாடிக்கையாளர்களைப் பெறுவது எப்படி, தொழிலில் ஏமாற்றுபவர்களை அடையாளம் காண்பது எப்படி, தொழிலை மேலும் வளர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன போன்ற ஏராளமான செய்தகளை அன்புடன் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அப்பா ஏன் அங்கே அனுப்பினார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் அங்கு பயிற்சியில் இருந்த போதே கனடா நாட்டு நிறுவனம் வழங்கிய சுற்றுலா தொடர்பான ஆறுமாத படிப்பையும் முடித்தேன். இந்த படிப்பில் தென் இந்தியாவிலேயே முதல் மாணவனாக வந்தேன். திரு சில்வெஸ்டர் தாமஸ் என்னை பாராட்டி வாழ்த்தி நினைவு பரிசு வழங்கி அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து, எங்களுடைய மதுரா டிராவல்சில் இணைந்து தந்தையுடன் பணியாற்றத் தொடங்கினேன்.

நான் சேர்ந்த தொடக்கத்தில், இங்கு சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுப்பது மற்றும் விசா வாங்கித் தருவதுதான் முக்கிய சேவையாக இருந்தது. அதோடு கூடுதலாக சுற்றுலா ஏற்பாடு செய்வதையும், சுற்றுலா செல்வதற்கு ஆலோசனை வழங்குவதையும் இணைத்தேன்.

சுற்றுலா ஏற்பாடு என்பது இன்று உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில். சுற்றுலா செல்வோர் சுற்றிப் பார்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மற்ற அனைத்து வேலைகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் அவர்களுக்கு தேவையான தங்கும் அறைகள் பதிவு செய்து கொடுத்தல், வாகன ஏற்பாடு செய்தல், தகுதி வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி உள்பட அனைத்துக்கும் நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்.

சுற்றுலாப் பயணிகள் புறப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், அவர்களுக்கு உதவக் கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குகிறோம். தற்போது எங்கள் நிறுவனத்தில் நடைபெறும் எண்பது சதவீத பணிகள் சுற்றுலா தொடர்பான சேவைகள்தான். இந்த சேவையை நான் தொடங்கிய போது கை கொடுத்தவர்கள் என் நெருங்கிய நண்பர்கள்தான். முதன் முதலில் நான் வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஐரோப்பா சுற்றுலாவுக்கு அவர்கள்தான் காரணம்.

இன்றைக்கு நேரடி ஆன்லைன் பதிவு அனைத்து மட்டங்களிலும் காணப்படுகிறது. பணத்தை சிக்கனப்படுத்தும் நோக்குடன் இதில் ஈடுபடுகிறார்கள். இதை நான் குறை சொல்ல மாட்டேன். ஆனால், இணைய வழியில் பதிவு செய்து பணம் செலுத்தியவர்கள் சுற்றுலா செல்லும் போது சில நேரங்களில் சிக்கல் உருவாவதைப் பார்க்க முடிகிறது.

என் நண்பருக்கு வேண்டியவர் குடும்பத்துடன் ஊட்டி சென்றார். ஆன்லைனில் அறையை பதிவு செய்து விட்டு சென்று சேர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கொஞ்சம் தாமதமாக சென்ற காரணத்தால் அந்த அறையை வேறு ஒருவருக்கு ஒதுக்கி விட்டனர். குளிரில் கைக் குழந்தையுடன் காரில் இருந்தபடி எங்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். உடனே வேறு விடுதியில் தங்க நாங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
இன்னொரு நிகழ்வையும் இங்கு கூறியாக வேண்டும். எங்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு தனியாக பயணம் செய்த ஒருவருக்கு கொச்சி விமான நிலையத்தில் வைத்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. விரைந்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையை தெரிவித்து உடனடி உதவிகள் அவருக்கு கிடைக்க உதவினோம்.

ஒரு சான்றுக்காக இந்த நிகழ்வுகளைச் சொன்னேன். அந்த பொறுப்பு எங்களிடம் வரும் போது நாங்கள் ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்கிறோம். நம்பகத் தன்மை கொண்ட ஓட்டல், விடுதிகள் எங்களுக்குத் தெரியும். அறை முன்பதிவு, வாகன ஓட்டுநரை தயாராக இருக்கச் செய்வது அத்தனையையும் எங்கள் பணியாளர்கள் கவனித்தபடி இருப்பார்கள். இடையில் ஏதேனும் குறைபாடு நேர்ந்தால் உடனே செயல்பட்டு அந்த குறையை களைந்து, பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். இணைய வழி பதிவு செய்து செல்வோருக்கு இந்த தனிப்பட்ட அக்கறையுடன் கூடிய சேவை கிடைக்குமா என்பது ஐயத்துக்கு உரியது.
எனவே வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் ஒரு நல்ல சுற்றுலா நிறுவனம் மூலம் செல்வதுதான் பாதுகாப்பானது.

வாடிக்கையாளர்களுக்கு விசா வாங்கிக் கொடுப்பது கவனமாக செய்ய வேண்டிய பணி. இதில் புதுப்புது விதிகளை அயல்நாடுகள் புகுத்திக் கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் பாஸ்போர்ட் மட்டும் போதும். இப்போது வங்கிப் புத்தகத்தின் ஆறுமாத கணக்கு விவரம் மற்றும் வருமானவரித் தாக்கல் விவரம் போன்றவற்றை கேட்கிறார்கள். நாட்டுக்கு நாடு அணுகு முறையில் வேறுபாடு உள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் விசா கிடைக்காது.

எங்களைப் பொருத்தவரை இதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். புதிய விதிமுறைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குகிறோம்.

நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு விசா வாங்கித் தருவதில் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தினேன். அதன்படி, எங்கள் நிறுவனத்திற்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கினோம். வீட்டில் இருந்தபடியே ஒரு வாடிக்கையாளர் இதன் மூலம் விசா பெற முடியும்.

இன்றைக்கு பலர் பெற்றோரை இங்கு விட்டுவிட்டு வெளிநாடுகளில் பணி புரிகிறார்கள். அங்கு இருந்தபடியே எங்களை அழைத்து பெற்றோருக்கு விசா வாங்கிக் கொடுத்து, அனுப்பும்படி கேட்டுக் கொள்வார்கள். எங்கள் ஊழியர்களை தொடர்புள்ள வீடுகளுக்கு அனுப்பி இப்பணியை செய்து கொடுக்கிறோம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவரை 32 வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அங்கு உள்ள சுற்றுலா வாய்ப்புகளை ஆராய்ந்து அறிந்து கொண்டேன். இவற்றில் 28 நாடுகளுக்கு போய் வந்த செலவை, அரசு தொடர்பான சுற்றுலாத் துறைகளே ஏற்றுக் கொண்டன. ஏன் என்றால் என் பயணம் அவர்கள் மேம்பாட்டையும் உள்ளடக்கியது.

இங்கிலாந்து நாட்டில் பயணம் செய்த போது ஒரு இடத்தில் பயணிகளோடு பயணியாக ஒருவர் நின்று பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்றார். பின்னர்தான் தெரிந்தது அவர் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்று. அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையை எவ்வளவு ஆர்வத்துடன், எளிமையாக செய்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

அண்மையில் குடும்ப உறவினர்கள் ஒன்று சேர்ந்து 220 பேர் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். 119 பேருக்கு விசா கிடைத்து விட்டது .ஒருவருக்கு மறுத்து விட்டனர் .அந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி. நாங்கள் தொடர்புடைய அரசிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறிப்பிட்ட நபர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிய அங்கு சென்றவர் என்பதும் குறிப்பிட்ட நாட்களை விட அனுமதி இன்றி கூடுதலாக அங்கு தங்கியதால் திருப்பி அனுப்பப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவருக்காக நாங்கள் உத்தரவாதம் அளித்து அனுப்பி வைத்தோம்.

இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியாத புதிய உலகில் வலம் வந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்குப் பயணம் செய்யும் போதும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. வளர்தொழில் இதழ் வாயிலாக தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது “உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப சுற்றுலா செல்வதை வாழ்வில் ஓர் அங்கமாக்கிக் கொள்ளுங்கள். அது உற்சாகத்தை புதிய சிந்தனைகளை உங்களுக்குள் விதைக்கும்”.

பதினைந்து நாள் பயணமாக சீனா சென்று இருந்தேன். அங்கு ஜின் ஜூ என்ற மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். கிராமத்தைச் சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர் அமைத்து உள்ளார்கள். கிராம மக்கள் அனைவருமே நாள்தோறும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கிராமத்தை ஒட்டி உள்ள மிகப்பெரிய உடற்பயிற்சி மையத்தில் காலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை உடற்பயிற்சி செய்கிறார்கள். பின்னர் வேலைக்கு செல்கிறார்கள்.

பணி முடித்து அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒருவரோடு ஒருவர் உரையாடிய படி, இரவு உணவை சாப்பிடுகிறார்கள் சரியாக எட்டு மணிக்கு உறங்கச் சென்று விடுகிறார்கள். மனதிற்கு பரவசமூட்டிய அந்தக் கிராம சூழலில், ஒரு 92 வயதுப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தார். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து அங்கு வருகை தருவதால் சுற்றுலா வரைபடங்களை குவித்து வைத்து முகமலர்ச்சியுடன் விற்பனை செய்து கொண்டு இருந்தார். சீன நாட்டில் நட்பும், உறவுமாக ஒற்றுமையுடன் கூடி வாழ்கிறார்கள்.

மேலை நாடுகளில் திட்டமிட்டு அனைத்து பணிகளையும் செய்கிறார்கள்.
இதுபோல எண்ணற்ற அனுபவங்கள் வெளிநாடுகளில் எனக்கு கிடைத்தன. நம் நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் நிறைந்த மாநிலம் நம்முடையது.

திறமை மிக்க மருத்துவர்களுடன் ஏராளமான மருத்துவ மனைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து குறைந்த செலவில் தரமான சிகிச்சைகளை பெற்றுச் செல்கிறார்கள். ‘பல்’ தொடர்புடைய சிகிச்சைகள் பல மேலைநாடுகளில் காப்பீட்டு வரம்புக்குள் வருவதில்லை. அந்த வகையில் அங்கு ரூ 3 லட்சத்துக்கு கிடைக்கும் தரமான சிகிச்சை இங்கு முப்பதாயிரத்திற்கு கிடைக்கிறது. இதனால் மருத்துவ சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் வருகிறார்கள்.

நான் இந்த தொழிலுக்கு வந்த புதிதில் ஒரு அதிர்ச்சியான தகவலை கேட்டேன். கல்லூரிகளில் சுற்றுலாவை முதன்மைப் பாடமாக கொண்ட பட்டப் படிப்புகளில் அதிக மாணவ மாணவியர் சேருவது இல்லை. இந்தத் துறையில் குவிந்து உள்ள தொழில் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் அவர்களிடம் கொண்டு செல்வதற்காக சென்னையில் 12 கல்லூரிகளை தேர்வு செய்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இந்த நிகழ்வுகளில் வெளிநாட்டு சுற்றுலாத் துறையினர் நம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கின்றனர். நம் மாணவ, மாணவகள் வெளிநாட்டு மொழிகளை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். அண்மையில் விசா வழங்கும் இங்கிலாந்து நாட்டின் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு நம்முடைய அரசு கல்லூரியில் படித்த ஒரு மாணவி பணியாற்றிக் கொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் நீங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றது இந்த வேலைக்கு வர காரணமாக அமைந்தது என்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தன்னம்பிக்கை மிகுந்த என் அப்பாவிடம் நேர்மை, நாணயம் நம்பிக்கையை கற்றுக் கொண்டேன் என்றால், என் அம்மா திருமதி. சுசீலாவிடம் நான் கற்றது விடா முயற்சியை, கடின உழைப்பை. என் அப்பாவுக்கு இன்றைக்கும் அவர் பக்கபலமாக உள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது எனக்கு பெரும் வியப்பாக இருக்கும். வாழ்க்கையிலும், தொழிலிலும் அவர்கள்தான் எனக்கு ‘ரோல் மாடல்’. அலுவலகத்தில் கணக்காளர் விடுமுறை எடுத்தால் அந்த இடத்தை அம்மா நிறைவு செய்து இருக்கிறார். என் அப்பா நடத்திய இணைய வானொலியின் செய்தி வாசிப்பாளர் வராத நாட்களில் அம்மாதான் செய்தி வாசிப்பாளர்.

என் வாழ்விணையர் திருமதி. திவ்யாவும் அதே போலத்தான். வணிக சூழலைப் புரிந்து கொண்டு எனக்கு எல்லா வகையிலும் பெரும் துணையாக இருந்து வருகிறார். .திவ்யா ஒத்துழைப்பு தருவதால்தான் வணிக வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களை என்னால் எட்ட முடிகிறது.

எங்களுக்கான செயலியை (மொபைல் ஆப்) உருவாக்ககிய போது, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி, இளைஞர் ஜெகதீஷ் இடம் அந்தப் பணியை ஒப்படைத்தோம். கணினி நுட்பத்தில் வல்லவரான அவருக்கு கைவிரல்கள் மட்டுமே வேலை செய்யும். வீல்சேரில் அமர்ந்து கொண்டுதான் எந்த செயலையும் அவரால் செய்ய முடியும். கணினி தொடர்புடைய முதல் கட்ட பணிகளை எங்களுக்கு செய்து தருவது அவர்தான்.

சுற்றுலா ஏற்பாடு ஒரு கூட்டுப் பணி. எங்களைப் போன்ற நம்பகமானவர்களுடன் பணிகளை பகிர்ந்து கொள்கிறோம். இது நவீன தொழில்நுட்ப உலகம். இன்னும் பதினேட்டு ஆண்டுகளுக்குள் சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டு விடும். அந்த நாள் வரும்போது, எங்கள் வாடிக்கையாளர்களையும் நிலாவுக்கு அழைத்துச் சென்று வரும் சுற்றுலா ஏற்பாட்டாளராக நாங்கள் உயர்ந்து நிற்போம்” என்றார், திரு ஸ்ரீகரன் பாலன். (9841691234)

மதுரா டிராவல்ஸ் கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. திரு. ஸ்ரீகரன், மதுரா டிராவல்ஸ் பணிகளை மேலாண்மை செய்யத் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகின்றன தாய் ((TAAI) Travel Agent Association Of India) அமைப்பின், டூரிசம் சப் கமிட்டி தலைவராகவும். தமிழ்நாடு டிராவல் மார்ட் சொசைட்டியை (ஜிக்ஷீணீஸ்மீறீ விணீக்ஷீt ஷிஷீநீவீமீtஹ்) உருவாக்கிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

 – ம. வி. ராசதுரை

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news