இன்றைக்கு நிறைய கல்லூரிகளில் பிபிஏ, எம்பிஏ போன்ற தொழில், வணிகம் சார்ந்த படிப்புகள் உள்ளன. ஏராளமான மாணவர்கள் இவற்றில் சேர்ந்து படிக்கின்றனர். இத்தகைய படிப்புகளைப் படிக்கும் மாணவ, மாணவியரிடம் அந்த படிப்புகள் தொழில் முனைப்பு ஆர்வத்தைத் தூண்டுகின்றனவா, அவ்வாறு தூண்ட கல்லூரிகள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கின்றன என்ற கேள்வியோடு, சென்னை போரூருக்கு அருகே உள்ள கோவூரில் உள்ள செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லுரியின் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். கிறிஸ்டினா அவர்களை அணுகியபோது,
”பிபிஏ போன்ற படிப்புகள் வணிக நிர்வாகம் சார்ந்த படிப்பு ஆகும். இதன் வழியே மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம், உற்பத்தி போன்ற தொழில் துறையின் அடிப்படைகளைப் பற்றிய பாடங்களை மாணவர்கள் பயில்கிறார்கள். இந்த பாடங்கள் அனைத்தும் தொழில் முனைவுக்கு உதவக் கூடிய பாடங்கள் ஆகும். பிபிஏ-வின் இறுதி ஆண்டில் தொழில் முனைவோர் ஆவதற்கான பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
எங்கள் கல்லூரியில் பிபிஏ படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளது. மற்றவர்கள் படித்து விட்டு ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள்.
பெரும்பாலான தொழிலதிபர்கள், வணிகர்களின் பிள்ளைகள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கிறார்கள். தங்கள் தந்தையின் தொழிலில் அவர்களுக்கு உதவவும் அந்த தொழிலை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் விரும்பி அவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கிறார்கள்.
நாங்கள் எங்கள் மாணவர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று காட்டுகிறோம். அண்மையில் ஃபாக்லி (fogli) என்ற நிறுவனத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம். அங்கு என்னென்ன பிரிவுகள் உள்ளன, என்னென்ன செயல்பாடுகள் நடக்கின்றன என்பதை எல்லாம் நேரடியாகப் பார்த்து அறிந்து கொண்டார்கள்.
எங்களிடம் படிக்கும் மாணவர்களில் சிலர் படிக்கும் பொழுதே சிறிய தொழில்கள், வணிகங்களைத் தொடங்கி நடத்துகிறார்கள். சில மாணவர்கள் படித்துக் கொண்டே பகுதி நேரப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். எங்கள் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை விட வேலை கொடுப்பவர்களாக உயர வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்கேற்ப அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். தனிப்பட்ட முறையில் நானும் வணிக இதழ்களில், வணிக ஆங்கில நாளேடுகளில் படித்த செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வணிக இதழ்களைப் படிக்குமாறு ஆலோசனை கூறுகிறேன்.” என்றார், திருமதி. கிறிஸ்டினா.
– ஆர். நந்தினி