அதிகரித்து வரும் இளநீர் விற்பனை

0
69

சென்னை போன்ற நகரங்களில் இளநீர்க் கடைகள் இல்லாத சாலைகளே இல்லை என்று எளிதில் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு இளநீர்க் கடைகள் சாலை ஓரக் கடைகளாக இயங்கி வருகின்றன. அதே போல இளநீர் விற்பனை செய்யும் மூன்று சக்கர சைக்கிள்களும் ஆங்காங்கே சுற்றி வருகின்றன. ஆண்கள் மட்டுமே இளநீர் சீவிக்கொண்டிருந்த நிலையில் இப்போது ஏராளமான பெண்களும் இளநீர் சீவிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை, இராமாபுரம், மவுன்ட் – பூந்தமல்லி சாலை ஓரமாக இளநீர்க் கடை வைத்து இருக்கிறார், திருமதி. தேவி. அவரிடம் இளநீர் வியாபாரம் பற்றிக் கேட்டபோது,

”நான் இருபத்தைந்து ஆண்டுகளாக இளநீர் விற்பனை செய்து வருகிறேன். முதலில் இதே இடத்தில் பழைய இரும்புக் கடை வைத்திருந்தோம். அரசு நகருக்குள் உள்ள பழைய இரும்புக் கடைகளை தடை செய்த போது, இளநீர்க் கடைக்கு மாறினோம்.
நாங்கள் பழைய இரும்பு மறுசுழற்சிக் கடை நடத்திக் கொண்டிருந்த போது, அருகில் ஒருவர் இளநீர்க் கடை வைத்து இருந்தார்.

அவ்வப்போது அந்த கடையை எங்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, அவர் தனது வேறு பணிகளை முடித்து விட்டு வருவார். அப்போது இளநீர் வெட்டி பழகிக் கொண்டேன். பழைய இரும்புக் கடையை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது, இளநீர்க் கடையை எங்களிடமே ஒப்படைத்து விட்டு அவர் வேறு பணிக்கு சென்று விட்டார்.

என்னுடைய கணவரின் மறைவுக்குப் பிறகு முழுநேரமாக நான்தான் கடையைப் பார்த்துக் கொள்கிறேன். இது எனக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாக இருந்தாலும், மக்களின் தாகம் தணிக்கும் சேவை செய்கிறோம் என்ற மனநிறைவும் எனக்கு இருக்கிறது. இளநீரைப் பார்த்தாலே அது வழுக்கை உள்ள இளநீரா, வெறும் தண்ணர் மட்டும் உள்ள இளநீரா, முற்றிய இளநீர் என்பதை என்னால் கண்டு பிடித்து விட முடியும். வாடிக்கையாளர் கேட்பதற்கு ஏற்ப தேர்வு செய்து சீவிக் கொடுப்பேன்.

புதுச்சேரி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில இருந்து சென்னைக்கு நிறைய இளநீர் கொண்டு வரப்படுகிறது. இளநீர் மொத்த வணிகர்களிடம் இருந்து நாங்கள் எங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்கிறோம். வாங்கும் விலைக்கேற்ப ஒரு காய்க்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை லாபம் வைத்து விற்பனை செய்வோம்.

வெயில் காலத்தில் இளநீர் விற்பனை நன்றாக இருக்கும். பனிக் காலம், மழைக் காலங்களில் அவ்வளவாக விற்பனை இருக்காது. விற்பனைக்கேற்ப கொள்முதல் செய்து கொள்வேன். அதிக அளவாக ஒரு நாளில் ஐநூறு இளநீர்க் காய்கள் வரை விற்பனை செய்து இருக்கிறேன். சில நாட்களில் இருபது இளநீர் அளவுக்கு கூட விற்பனை ஆகி இருக்கிறது.

தற்போது அருகே பெரிய கட்டடங்கள் வந்து விட்டதால், அங்கு வருபவர்கள் எங்கள் கடையை மறைத்தபடி தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், விற்பனை குறைந்து விட்டது. எனவே வேறு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பொதுவாக மக்களிடம் இளநீர் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. அதில் உள்ள சத்துகள், அது உடலுக்கு தரும் நன்மைகள் பற்றி எல்லோருக்கும் தெரிகிறது. இதனால் செயற்கை கோலா பானங்களை குடிப்பதற்கு பதில் இளநீர் குடிப்பதை விரும்புகிறார்கள். எனவே இளநீர் விற்பனைக்கு சரிவு எற்பட வாய்ப்பே இல்லை. இதற்கான வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்தபடியேதான் இருப்பார்கள்.” என்றார்.

– ரா. காயத்ரி