Latest Posts

வெற்றிக் கதவைத் திறக்கும் பணம்

- Advertisement -

எனது கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கும் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் அறிவாற்றலும், முயற்சியும் இருப்பது பேச்சில் வெளிப்பட்டது. ஒரு சந்தேகத்தைத் தெளிவு படுத்த வந்திருந்தார்.

”தொழிலைத் தொடங்கி நடத்த நான் தயார். ஆனால் எனது திட்டங்கள் எல்லாம் கற்பனையில் விண்ணில் கோட்டை கட்டுவதைப் போல இருக்கின்றன. வேண்டிய நிதியை எப்படி பெறுவதென்று புரியவில்லை; தெரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போல எனது தொழில் விருப்பங்கள் இருப்பதாக எனது நண்பர்கள் கூறுகிறார்கள்” என்றார். அவரது குரலில் வேதனை மண்டிக் கிடந்தது.

அவரது தொழில் திட்டத்தைப் பற்றிக் கேட்டேன். ஒரு குண்டூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்குவது அவரது நோக்கம்; அதனைப் பற்றி எல்லா விவரங்களையும் திரட்டி வைத்திருந்தார்.

நிதி உதவிக்கு வங்கிகளை அணுகியிருக்கின்றார். அவர்கள் அவரிடம் நன்றாகப் பேசினாலும் கடன் வழங்க தயங்குவது வெளிப்படையாகத் தெரிந்திருக்கின்றது. அந்த மனநிலையில்தான் என்னைப் பார்க்க வந்தார்.

நான் அவரிடம் நிதி கிடைக்கக் கூடிய வழிமுறைகளைப் பற்றி எல்லாம் பேசினேன். எப்படி நிதியை நிர்வகிக்க வேண்டும் என்பதையும் விளக்கினேன். புதிய நம்பிக்கையோடு எழுந்து விடை பெற்றுச் சென்றார்.

ஒரு விளக்கு எரிவதற்கு மின்சாரம் எப்படி ஆதாரமாக இருக்கின்றதோ, அது போல், தொழில், வணிக நிறுவன வளர்ச்சிக்கு நிதி ஆதாரமாக இருக்கின்றது.

ஒரு தொழிலுக்கு வேண்டிய மூலதனத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று நிலையான மூலதனம் (Fixed Capital) மற்றொன்று செயல்பாட்டு மூலதனம் (Working Capital).

நிலையான மூலதனம் என்பது நிலம், கட்டடம், எந்திரங்கள் என்று நிலைத்திருக்கும் வகையில் முதலீடு செய்வதாகும். இதன் அளவு தொழிலின் இயல்பை ஒட்டி அமையும்.

செயல்பாட்டு மூலதனம் என்பது மூலப் பொருள்கள் வாங்க, கூலி கொடுக்க, மின்சாரக் கட்டணம் செலுத்த என அன்றாட செலவுகளுக்குத் தேவையான பணமாகும். இதன் அளவு உற்பத்தியினை ஒட்டி இருக்கும்.

முதலில் சொந்தமாக நம்மால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமென்று பார்க்க வேண்டும்.

இன்று பலபேர் சொந்த முதலே இல்லாமல் தொழிலைத் தொடங்க முயல்கின்றனர். இது தரையில் ஊன்றாமல் கரணம் போட முயல்வதைப் போன்றது. எல்லோருக்கும் இது வாய்ப்பதில்லை.

சொந்த முதலென்றால் நமது கையிலேயே இருக்க வேண்டுமென்பதில்லை. தொழிலைத் தொடங்குவதற்கு முன்னால் நம்மால் சேர்க்கக் கூடியதைச் சொந்த முதலாக கருதலாம். இதற்கு பல வழிகள் உள்ளன.

நமது பெற்றோரை, உடன் பிறந்தவர்களை, நம்மீது நம்பிக்கை கொண்ட உறவினர்களை முதலீடு செய்யும்படி கூறலாம். அவர்களுக்கு வட்டியோ, ஆதாயத்தில் பங்கோ தருவதாக ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்திற்கு நிதி கிடைக்க சில வழிமுறைகள் உள்ளன.
சொந்தமாகத் தொழில் செய்கின்றவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது முன்பை விட எளிதாகி இருக்கின்றது. வங்கிகளிடன் நிதி பெறுவதில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால், அது இயலாத ஒன்று என்று கூறி விட முடியாது.

வங்கிகளிடன் கடனையும், அரசு தரும் மானியங்கள் போன்ற சலுகைகளையும் பெற்று தொழிலை வளர்த்திருக்கும் பலரை நான் அறிவேன்.

இப்பொழுது பல தனியார் நிதி நிறுவனங்களும் தொழில் கடன் தருகின்றன. இவற்றிடமிருந்து நிதி பெறுகின்ற பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவற்றின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

நிதி நிர்வாகம்

ஒரு தொழிலை நடத்துவதில் நிதி நிர்வாகம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கிடைக்கின்ற நிதியைச் சரியாகப் பேணிக்காத்து, தக்க முறையில் முதலீடு செய்ய வேண்டும்.

ஏராளமாக நிதி இருந்தால் சிறப்பாகத் தொழிலை நடத்தி விடலாமென்று பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவன்று. இருக்கின்ற நிதியை நாம் எப்படி நிர்வகிக்கின்றோம் என்பதை ஒட்டித்தான் வெற்றிப் பாதையின் கதவு நமக்குத் திறக்கும்.

நமது தொழிலின் வளர்ச்சி நிலையில் எப்பொழுதெல்லாம் எவ்வளவு பணம் தேவை என்பதைத் திட்டமிட வேண்டும். அதற்கான நிதியை எத்தெந்த வகையில் பெற முடியும் என்பதை முடிவு செய்து, அதற்கு வேண்டியவற்றைச் செய்து கொள்ள வேண்டும்.
தொழில் நடத்துகின்ற பொழுது கிடைக்கின்ற ஆதாயத்தை வெளியில் எடுக்கக்கூடாது.

அதனைச் சேமிப்பாக மாற்றி, தொழிலில் மறு முதலீட்டிற்குக் கொண்டு வர வேண்டும். வைப்பு நிதிகளாக சேமிப்பை மாற்றுகின்ற பொழுது, எதிர்காலத்தில் அவை நிதி மூலங்களாகி தொழில் வளர்ச்சிக்குக் கை கொடுக்கும்.

நாம் கொடுக்க வேண்டிய, செலுத்த வேண்டிய பணத்தை உரிய காலத்தில் கொடுக்க வேண்டும். கையில் பணம் தேங்கக்கூடாது. சேர்கின்ற பணத்தை ஏற்ற முறையில் பயன்படுத்த வேண்டும். கையில் மூலப் பொருள்களாக செய்து முடித்து விற்பனைக்குச் செல்லும் பொருள்களாக இருப்பு வைக்கலாம். பணமாக இருப்பு வைத்தால் வட்டி நட்டமாகும்.

நமக்கு வரவேண்டிய பணத்தை வசூலிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ரொக்க விற்பனை சிறந்தது. ஆனால் பெரும்பாலான தொழில்களில் கடனுக்குக் கொடுத்து வாங்காமல் தொழில் செய்ய முடியாது. ஆதலால் கடன் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது ஆனால் கடன் கொடுக்கின்ற பொழுது அவர்களின் நம்பகத் தன்மை அறிந்து கொடுக்க வேண்டும். நமது நிதி சுழற்சி முறையைப் பாதிக்காத வகையில் கடன் கொடுத்து வாங்க வேண்டும்.

ஒரு நிருவனத்திற்கோ, ஓராளுக்கோ நிறைய கடன் கொடுக்க கூடாது. கடன் நிற்வாகம் நிதி நிர்வாகத்தில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.
நமது நிதி நடவடிக்கைகளை இணைத்துச் செயல்படுத்த வேண்டும். நமது முதலீடு, முதலீட்டுக்கு வாங்கும் கடன், கட்டடங்களைக் கட்டுதல், எந்திரங்கள் வாங்குதல், மூலப் பொருள்களைப் பெறுதல், கூலி, சம்பளம் தருதல், விற்பனை செய்தல், விளம்பரம் போன்ற வளர்ச்சிச் செலவுகளை மேற்கொள்ளுதல், கொடுத்த கடனை வசூலித்தல், பெற்ற கடனைத் திருப்பிக் கொடுத்தல், வரி செலுத்துதல் என்று பல்வேறு நிதி நடவடிக்கைகள் இருக்கும்.

நிதி நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ‘முக்கியம்’ ‘முக்கியமில்லை’ என்று வகைப்படுத்த முடியாது; கூடாது. எல்லாம் முக்கியம்தான். எல்லா நிதி நடவடிக்கைகளும் உரிய காலத்தில் நடைபெற வேண்டும். பணம் வாங்குவதிலும் செலுத்துதலிலும் காலதாமதம் கூடாது.

எல்லா நிதி நடவடிக்கைகளும் தனித்தனியாக நடைபெற்றாலும், அவற்றிற்கிடையில் ஓர் இணைப்பும் தொடர்பும் இருக்கும். இவற்றைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வசூலாகின்ற பணம் தடங்கலின்றிக் கிடைத்தால்தான், செலுத்துகின்ற பணத்தை முறையாகச் செலுத்த முடியும்.

நிதியைப் பொறுத்தவரை நாம் எப்பொழுதும் விழிப்போடு செயல்பட வேண்டும். நிறுவனத்திற்கு வருகின்ற எல்லாப் பணத்தைப் பற்றியும், செலுத்துகின்ற, செலவிடுகின்ற எல்லாப் பணத்தைப் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். முறையாகக் கணக்கு வைப்பதும், அவ்வப்போது கணக்கைச் சரிபார்ப்பதும் தேவையாகும்.

– டாக்டர் மா.பா. குருசாமி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news