Latest Posts

நூற்று ஐம்பது ரூபாயில் தொடங்கிய தொழில் பயணம்: 25 – ம் ஆண்டில், மணிபாரதி அச்சகம்!

- Advertisement -

”வருவாய் ஈட்டுவதே ஒருவர் தொழில் செய்வதற்கோ, வேலைக்கு செல்வதற்கோ அடிப்படை, எனினும் அது அத்தோடு முடிந்து விடுவது இல்லை. ஒரு மனிதருக்கு சமூகத்தில் மதிப்பு மிகு அடையாளத்தைத் தருவது அவர் செய்யும் தொழிலே. தவிர தான் நன்றாக வாழ்ந்தோம் என மனநிறைவைத் தருவதும் அவரது தொழிலே. ஆக வருமானம், அடையாளம், மனநிறைவு மூன்றையும் தரக் கூடியதாக ஒருவரது தொழில் அமைந்திருக்க வேண்டும்” என்கிறார், திரு. ச. மணிவண்ணன். சிதம்பரத்தில் உள்ள மணிபாரதி அச்சகத்தின் உரிமையாளரான இவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, தன்னுடைய அச்சக வளர்ச்சி தொடர்பாக சந்தித்த நிகழ்வுகளைக் கூறும்போது,

”நான் அச்சுத்தொழிலில் ஈடுபடத் தொடங்கியது, 1993, ஆகஸ்ட் மாதத்தில். அப்போது திண்டிவனம் வட்டம், மயிலம் கிராமத்தில் கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டடத்தில் நூற்றைம்பது ரூபாய் முதலீட்டில் ஸ்கிரீன் பிரின்டிங் செய்யத் தொடங்கினேன். காலண்டர்கள் அச்சிடும் பணியே முதன்மையாக இருந்தது. சிதம்பரத்தில் உள்ள சில நகைக் கடைகள், தங்கள் கடைகளுக்கான ஆண்டுக் காலண்டர்கள் அச்சிட்டுத் தரும் பணிகளை வழங்கினர். அச்சகத்துக்கு என்னுடைய பெயரையும், என்னுடைய வாழ்விணையர் திருமதி. பாரதி பெயரையும் இணைத்து மணிபாரதி அச்சகம் என்று பெயரிட்டோம்.

தொடர்ந்து பெருமளவுக்கு காலண்டர் அச்சிடும் பணிகள் வந்தன. புதிய வாடிக்கையாளர்களும் பெருகினார்கள். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக 1994, மே மாதத்தில் கட்டிங் மெஷினும், ஆகஸ்டில் முதில் டிரெடில் எந்திரமும் வாங்கினோம். பெரும்பகுதி வேலைகள் சிதம்பரத்தில் இருந்து வந்ததால் அச்சகத்தை சிதம்பரத்துக்கு மாற்றினோம், 1996 அக்டோபர் இரண்டாம் தேதி முதல் எங்கள் அச்சகம் சிதம்பரத்தில் இருந்து செயல்படத் தொடங்கியது. 1997, மார்ச்சில் சிதம்பரத்தின் பெரிய அச்சகங்களில் ஒன்றான மீனாட்சி அச்சகம் விலைக்கு வாங்கப்பட்டு மணிபாரதியுடன் இணைக்கப்பட்டது.

மீனாட்சி அச்சகத்தில் இருந்து பெறப்பட்ட ஆஃப்செட் எந்திரம் எங்கள் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாததோடு, அடிக்கடி பழுது ஏற்படுதல் – அதை நீக்க ஏராளமாக செலவு செய்தல் – வேறு ஊர்களில் இருந்து மெக்கானிக்கை வரவழைத்தல் – அதற்காக காத்திருத்தல் – இதற்கிடையே ஏற்படும் உற்பத்தி இழப்பு என செலவும், போராட்டமாகவும் ஓடியது. 2000, ஜூலையில், சிதம்பரம், தெற்கு வீதியில் உள்ள ஸ்டார் அங்காடிக்கு அச்சகத்தை இடமாற்றம் செயதது, ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கியின் உதவியுடன் ஆட்டோபிரின்ட் 15ஜ்10 ஆஃப்செட் எந்திரத்தை வாங்கி நிறுவியதும் இன்னொரு திருப்புமுனையாக அமைந்தது.

2001, மே மாதம் நடைபெற்றி சட்டமன்றத் தேர்தலில் கணிசமான அச்சுப் பணிகள் கிடைத்தன. இன்னொரு அச்சு எந்திரம் வாங்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இதே ஆண்டு ஜூலையில் இன்னொரு ஆஃப்செட் எந்திரம் வாங்கினோம். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கணிசமான அச்சுப் பணிகள் கிடைத்தன. சுமார் பதினைந்து நாட்கள் இருபத்து நான்கு மணி நேரமும் இரு எந்திரங்களும் இடைவிடாமல் இயங்கின. உள்ளாட்சித் தேர்தல் அச்சுப் பணிகள் நல்லதொரு வருவாயை ஈட்டித் தந்தன.

2001 இறுதியில் காலண்டர் பணிகள் தொய்வின்றி நடைபெற்றன. அப்போது பொதுவாக சந்தையில் பெருமளவு தொய்வு ஏற்பட்டு இருந்தாலும், புதிய வாடிக்கையாளர்களின் வருகை அந்தத் தொய்வை ஈடுகட்டியது. 2003 – ல் ஸ்டார் அங்காடியில் மேலும் இரண்டு கடைகளை வாடகைக்கு எடுத்தோம். அங்கு காட்சிக் கூடமாக அலுவலகமும், கணினிப் பிரிவும் நிறுவப்பட்டன. அதே நேரத்தில் 15ஜ்20 க்னைட் மல்டி கலர் அச்சு எந்திரம் வாங்கி நிறுவினோம்.

2004 – ம் ஆண்டில் மணிபாரதி பதிப்பகம் தொடங்கப்பட்டு, குறுகிய காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் நூல்களை விற்பனைக்கு வாங்கிய பெரும்பாலான விற்பனையாளர்கள், நூல்களுக்கு உரிய தொகையை முறையாகத் திருப்பி அளிக்காததால் பெரும் இழப்பையே சந்திக்க நேர்ந்தது. எனவே 2006 – க்குப் பிறகு பதிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

2005 – ல் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் புல வைர விழாப் பணிகள் எங்கள் உழைப்பிற்கும், திறமைக்கும் சவாலாய் அமைந்தன. எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக பக்கங்கள் அச்சிடக் கொடுக்கப்பட்டன. ஆனால் உறுதி அளித்து இருந்தபடி காகிதம் முழுமையாக வழங்கப்படவில்லை. சந்தையில் கூடுதல் விலைக்கு காகிதம் வாங்கி இரவு பகலாக பணியாற்றி விழாவன்று நூல்களை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் அச்சிட்டுக் கொடுத்தோம்.

பணி முடிவடைந்து விட்ட நிலையில் புல முதல்வர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. இதற்கென அமைக்கப்பட்ட பேராசிரியர் குழு தமது ஒப்புதலை அளித்த பிறகும், நாங்கள் கொடுத்த பில்களை புதிதாய் ஒரு அலுவலரிடம் மறு ஆய்வு செய்யக் கொடுத்தார். புதிதாய் சில காரணங்களைச் சொல்லி பில் தொகையில் பாதியைக் குறைத்தார். இது குறித்து மீண்டும் புகார் செய்தோம். மற்றுமொரு அலுவலரை வைத்து மறுமதிப்பீடு செய்யப்பட்டது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் முடித்துக் கொடுக்கப்பட்ட அந்த பணிக்கான பில் தொகையில் மூன்றில் ஒரு பாகம் பிடித்தம் செய்யப்பட்டு ஆறுமாத அலைக்கழிப்புக்குப் பின் வழங்கப்பட்டது.

அந்த ஆறுமாத காலத்தில் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியால் வேறு வழியின்றி அவர்கள் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொள்ளும்படி நேரிட்டது. அதே நேரத்தில் இன்சிஸ் நிறுவனத்தாரும் ஒரு பெருந்தொகையை பாக்கியாக வைத்து இருந்தார்கள். அதுவும் சேர்ந்து கடும் பொருளியல் நெருக்கடியை அளித்தது. காகிதம் வழங்குவோர், அச்சு மை வழங்குவோர் என பலரிடமும் கெட்ட பெயர் வாங்க நேரிட்டது. பதிப்பகத்தில் ஏற்பட்ட இழப்பு, பொறியியல் புலப் பணியில் ஏற்பட்ட இழப்பு இரண்டும் அச்சகத்தின் இருப்பையே தள்ளாட வைத்தது.

இந்த சூழலில் திருமதி. பாரதி நேரடியாக நிர்வாகக் களத்துக்கு வந்தார். நிர்வாகத்திலும், பல புதிய மாற்றங்களைச் செய்தார். ஒரு ஆஃப்செட் எந்திரம் விற்கப்பட்டு கடன்கள் ஓரளவு சரி செய்யப்பட்டன.

ஸ்டார் அங்காடியில் தனித்தனிக் கடைகளாக இருந்ததால் வேலைகளை ஒருங்கிணைப்பதும், பணியாளர் ஒழுங்கைப் பராமரிப்பதும் இயலாததாய் இருந்தது. வேறு இடம் தேடத் தொடங்கினோம். 2009 – ல் மேல வீதியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு வாடகைக்கு இடம் பெயர்ந்தோம். கட்டட முன்தொகை, காட்சிக் கூட அழகு படுத்தல் போன்ற செலவுகளுக்கு வீட்டில் இருந்த நகைகள் விற்கப்பட்டன. இந்தியன் வங்கியிலும், பாரத ஸ்டேட் வங்கியிலும் புதிதாக கடன்கள் வாங்கப்பட்டன.
ஒரே பார்வையில், ஒரே கூடத்தில் அலுவலகமும், பணிமனையும் அமைந்து இருந்ததால் நிர்வாகமும், உற்பத்தியும் எளிதாயிற்று. பழைய இடத்தில் இரவு ஒன்பது மணி பத்து மணி என்றெல்லாம் பணி செய்து கொண்டிருந்த நிலை மாறி எட்டு மணிக்கெல்லாம் பணி நிறைவு செய்யப்பட்டது. அந்த ஆண்டிலேயே வங்கி நிதி உதவியோடு டிஜிட்டல் கலர் பிரின்டர், கலர் செராக்ஸ் வாங்கினோம்.

2011 – ல் 17ஜ்11 எபிடெக் அச்சு எந்திரம் வாங்கினோம். அதே ஆண்டு ஜூன் மாதம் லேமினேஷன் எந்திரம் வாங்கினோம். ஜூலை மாதம் எதிர்பாராமல் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு, புதுவை ஏ. ஜி. பத்மாவதி மருத்துவ மனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது.

பாரதி மருத்துவமனையில் இருந்தபடியே வீட்டையும், அச்சகத்தையும் திறம்பட நிர்வாகம் செய்தார். அச்சகப் பணியாளர்களும் அதற்கேற்ப ஒத்துழைப்பு நல்கினார்கள். உள்ளாட்சித் தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட நான் இல்லாமலேயே நடந்தன. இந்த வருவாயைக் கொண்டே மருத்துவச் செலவுக்கு உதவிய நண்பர்கள் அளித்த தொகையை பகுதி பகுதியாக திருப்பி அளித்தோம்.

2013 – ம் ஆண்டில் அண்ணாமலைப் பலகலைக் கழகத்தை அரசு தன்வயப்படுத்திக் கொண்ட பின்பு, சிதம்பரம் சந்தையில் பெருத்த தொய்வு ஏற்பட்டது. பல்கலைக் கழக அச்சுப் பணிகளை வெளியே கொடுக்கக் கூடாது என நிர்வாகியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மட்டுமே நம்பி இருந்த பல அச்சகங்கள் சிதம்பரத்தில் மூடப்பட்டன. நாங்கள் காலண்டர்கள், திருமண அழைப்பிதழ்கள், புத்தகங்கக் அச்சு, அலுவலகங்களுக்குத் தேவையான அச்சுப் பணிகள் என்று வேறு பல பணிகளையும் மேற்கொண்டு இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கணிசமான பாதிப்பு இருக்கவே செய்தது.

க்னைட் ஆஃப்செட் எந்திரம் வாங்கி பத்தாண்டுகள் ஆன நிலையில் அடிக்கடி பழுது ஆவதும், அதற்கு செலவு செய்வதும் கூடிக் கொண்டே இருந்தது. 2016 தொடக்கத்தில் சிதம்பரத்திலேயே முதன் முறையாக ரையோபி டெம்மி அளவு ஆஃப்செட் எந்திரத்தை, பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் வாங்கி நிறுவினோம். டெம்மி அளவிலான பலவண்ண அச்சுப் பணிகள் சிதம்பரத்திலேயே அச்சிடப்பட்டன. புத்தக அச்சு வேலைகளும் விரைவாகவும், எளிமையாகவும், அழகாகவும் முடிந்தன. தொடர்ச்சியாக தானியங்கி பர்ஃபெக்ட் பைண்டிங் எந்திரம் வாங்கினோம்.
அச்சகப் பணியாளர்கள் அனைவரிடமும் அன்போடு நடந்து கொள்வோம். வேலைகளை பொறுமையுடன் கற்றுக் கொடுப்போம். பணிகளில் தவறு செய்தால் மீண்டும் பொறுமையுடன் கற்றுத் தருவோர். வாரம் ஒருமுறை பயிற்சி வகுப்புகள் நடத்துவோம். சில நேரங்களில் பயிற்சி அளிக்க வெளியில் இருந்தும் வல்லுநர்களை வரவழைப்போம். பணிபுரிவோரின் குடும்பச் சிக்கல்களையும் தீர்த்து வைத்திருக்கிறோம். அவர்களில் யாராவது தனியே தொழில் செய்ய விரும்பினால் அதற்கும் உதவுகிறோம்.

எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் தங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன் முடித்துச் செல்ல வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம். அந்த வகையில் அவர்களுக்கு எங்களுடனான தொடர்பு இனிமையான அனுபவத்தைத் தர வேண்டும் என்று நினைக்கிறோம். கட்டணம் தொடர்பானவற்றில் எந்த முரண்பாடும் வரக்கூடாது என்பதால், அவர்கள் பணியைத் தரும்போதே அதற்கான கட்டணத்தை சரியாக கணக்கிட்டுக் கொடுத்து, அவர்கள் ஒப்புதலுக்குப் பிறகே பணிகளை மேற்கொள்கிறோம்.

க்னைட் எந்திரத்தைக் கொடுத்து விட்டு, 16ஜ்21 கிராம்பஸ் ஆஃப்செட் வாங்கினோம். தற்போது ரையோபி டெம்மி ஆஃப்செட், கிராம்பஸ் கிரவுன் ஆஃப்செட், எபிடெக் மினி ஆஃப்செட், தானியங்கி பர்ஃபெக்ட் பைண்டிங் எந்திரம், லேமினேஷன் எந்திரம், டிஜிட்டல் கலர் பிரின்டர், ஸ்க்ரீன் பிரின்டிங் வசதிகளோடு எங்கள் மணிபாரதி அச்சகம், தனது இருபத்தைந்தாம் ஆண்டைக் கொண்டாடுகிறது. இது தொடர்பாக 25-ம் ஆண்டு மலர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறோம்” என்றார் திரு. மணிவண்ணன்.

– எவ்வி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news