எம்எஸ்எம்இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் என்ற தொழில் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மத்திய அரசின், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செய்வதற்கு என உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு புதிய தொழில் முனைவோருக்கான, ஏற்றுமதியாளர் களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
தொழில் தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்குகளையும் நடத்துகிறது. மேலும் தொழில்கள் செய்முறை தொடர்பான எண்ணற்ற பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. குறு, சிறு, நடுத்தர தொழில்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான பதிவுச் சான்றிதழ்களையும் வழங்குகிறது. உத்யோக் ஆதார் மெமொரண்டம் பதிவுச் சான்றிதழ்களையும் வழங்குகிறது.
தமிழ்நாட்டுக்கான இதன் தலைமை அலுவலகம் சென்னை, கிண்டியில் உள்ளது. இங்கே தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்வதற்கான நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இதன் கூடுதல் தொழில் ஆலோசகராக உயர் பொறுப்பு வகிப்பவர், திரு. எஸ். சிவஞானம். இவர் ஏற்கெனவே இங்கு பத்தாண்டுகளுக்கும் மேல் இயக்குநர் ஆக செயல்பட்டவர். பின்னர் டெல்லியில் உள்ள எம்எஸ்எம்இ தலைமை அலுவலகத்தில் பணியாற்றினார். அண்மையில் சென்னைக்கு மாறுதல் பெற்று வந்து கூடுதல் தொழில் ஆலோசகராக செயல்படுகிறார்.
நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையானவை குறித்து அவரிடம் பேசியபோது, அவர் கூறிய கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.
”இந்தியா அடிப்படையில் ஒரு வேளாண்மை நாடு. வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். அரபு நாடுகளில் பெட்ரோல் நிறையக் கிடைத்ததைப் பயன்படுத்தி அவை முன்னேறி உள்ளன.
பாலைவன நாடு என்று கூறப்பட்ட இஸ்ரேல் இப்போது வேளாண்மைத் தொழில்களில் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்குக் காரணம் புதிய, பொருத்தமான தொழில் நுட்பங்களை அவர்கள் முழுமையாக பயன்படுத்துவதுதான்.
நம் நாட்டிலும் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில் வாய்ப்புகளை அதிகம் உருவாக்கலாம்.
படித்த இளைஞர்கள் வேளாண்மைத் தொழிலில் இறங்குவதற்கான சாதகமான சூழல் தற்போது நிலவுகிறது. இதையொட்டி சில படித்த இளைஞர்கள், தாங்கள் பார்த்துக் கொண்டு இருந்த அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த பணிகளில் இருந்து விலகி, தாங்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தைக் கொண்டு பத்து ஏக்கர், இருபது ஏக்கர் என்று நிலம் வாங்கி வேளாண்மை செய்வதைப் பார்க்க முடிகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும் வேளாண்மை தொடர்பான உலக அளவிலான பார்வை இவர்களுக்கு இருக்கிறது.
படித்த இளைஞர்கள் கூட்டுறவு முறையில் வேளாண்மைப் பண்ணை அமைக்க முன்வந்தால் நபார்டு வங்கி, இவர்களுக்கு உதவ பல திட்டங்களை வைத்து இருக்கிறது. சிறுசிறு அளவில் நிலங்களை வைத்து இருப்பவர்கள் லாபகரமாக விவசாயமோ, விவசாயம் சார்ந்த மதிப்புக் கூட்டுத் தொழிலோ செய்ய இயலாது. ஆகவே இவர்களை ஒன்று சேர்த்து, உறுப்பினர்களாக்கி கூட்டுறவு வேளாண்மைப் பண்ணையம் அமைத்து, அவர்கள் நிலங்களில் வல்லுநர்களின் உதவியுடன் மொத்தமாக வேளாண்மைப் பணிகளை மேற்கொண்டால் அதிக பயன் அடையலாம்.
விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பது தொடர்பான விழிப்புணர்வும் இத்தகைய இளைஞர்கள் நடுவே அதிகரித்து வருவதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். வேளாண்மைத் தொழில்கள் நல்ல லாபத்துடன் நடைபெறத் தொடங்கினால் கிராமப் புறங்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கான அரசின் திட்டங்களையும், வாய்ப்புகளையும், எம்எஸ்எம்இ நிறுவனம் தொழில் முனைவோருக்கு அறிமுகப் படுத்துகிறது.
அதே போல மூலிகைகளுக்கும், மூலிகை சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களுக்கும் விற்பனை வாய்ப்பு உள்ளது. இவற்றுக்கு ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளது.
நீலகிரி, ஏலகிரி, ஏற்காடு, ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களின் வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இல்லை. காரணம் அவர்கள் செய்யும் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் சேகரித்து வரும் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதற்கான முயற்சிகளை சில இடங்களில் அரசாங்கம் எடுத்து வருகிறது.
மலைப் பகுதிகளில் காளான் வளர்த்தல், தேன் சேகரித்தல், தினை மற்றுக் குதிரைவாலி போன்ற சிறு தானியங்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மலைப் பகுதிகளில் மட்டும் கிடைக்கும் பொருட்களை ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.
பொதுவாக நாங்கள் கிராமப்புறம் சார்ந்த தொழில் முனைவோருக்கு வேளாண்மை சார்ந்த தொழில்கள், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், மேலும் அவர்கள் வாழும் ஊர்களைச் சுற்றிலும் உள்ள தொழில்களை மேம்படுத்திச் செய்தல் போன்றவற்றுக்கான ஆலோசனை களைச் சொல்கிறோம். நகர்ப் புறங்களைச் சார்ந்த தொழில் முனைவோருக்கு புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு நகர்ப்புறங்களில் செய்யக் கூடிய தொழில்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறோம்.
தொழில் முனைவோர் சிறப்பாகச் செயல்பட அவர்களுக்கு உள்ள தேவையற்ற தடைகள் நீக்கப்பட வேண்டும். ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும். அனுமதி பெறும் முறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
ஒருவர் தொழில் தொடங்கிய பின்பு அதிகாரிகளை அணுக பல்வேறு வகையான அரசுத்துறை அலுவலகங்களுக்கு தனித்தனியே செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் தொழிலில் கவனம் செலுத்துவது குறைகிறது என்றும் தொழில் முனைவோர் கூறுகிறார்கள்.
இந்த சிக்கலும் தீர்க்கப்பட வேண்டும் என்பது பல தொழில் முனைவோர் அமைப்புகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இத்தகைய தொழில் முனைவோர் அமைப்புகளின் வேண்டுகோள்கள் குறித்தும் அரசு சிந்தித்து வருகிறது.
தங்களுக்கு ஏற்ற தொழில் எது என்பதைத் தேர்ந்து எடுப்பதற்கு உதவுவதற்காக, ‘என்ன தொழில் செய்யலாம்? என்ற தலைப்பில் பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்த உள்ளோம். பல்வேறு தொழில்கள் பற்றிய பயிற்சி வகுப்புகளையும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்த உள்ளோம். இந்த பயிற்சிகள் பற்றிய விவரங்களை எம்எஸ்எம்இ அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பெறலாம்.
எம்எஸ்எம்இ ஜாப் என்ற பெயரில் ஒரு இணைய தளத்தை உருவாக்கி வருகிறோம். இந்த தளத்தைப் பயன்படுத்தி வேலை தேடுபவர்களையும், வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்களையும் இணைக்க இருக்கிறோம். இது சிறுதொழில் முனைவோருக்கு மிகுந்த பயன் அளிப்பதாக அமையும். அடுத்ததாக மொபைல் ஆப் ஒன்றையும் வடிவமைத்து வருகிறோம். இப்போது இணையத்தில் தேடுவதை விட எளிமையாக தேட உதவும் இந்த மொபைல் ஆப் உடனுக்குடன் மேம்படுத்தப்படுத்தப்படும்.
மேலும் மரபு சார்ந்த தொழில்களுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதற்காக அவற்றையும் கிளஸ்டர் முறையின் கீழ் கொண்டு வருவது குறித்தும் சிந்தித்து வருகிறோம். பல பாரம்பரிய தொழில்கள் புதிய தொழில் நுட்பங்களின் பார்வை படாமல் இருக்கின்றன. அவர்களிடையே கிளஸ்டர் தொழில் முறை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
தொழில் முனைவோருக்கு உதவுவதற்காகவே நாங்கள் செயல்படுகிறோம். தொழில் முனைவோர் எங்களிடம் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
திரு. எஸ். சிவஞானம். (044 – 22501011/12/13
website: msmedi-chennai .gov.in)
– ஆ. வீ. முத்துப்பாண்டி