ஆடு, மாடு, கோழி வளர்ப்பு கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. வேளாண் மையுடன் இவற்றையும் சேர்த்துச் செய்பவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கிறது. இந்த வகையில் ஆடு வளர்ப்பைப் பற்றி பார்க்கலாம்.
ஆடு வளர்ப்பை நன்கு திட்டமிட்டு நவீன அறிவியல் முறைப்படி பராமரித்தால் நல்ல லாபம் பெறலாம். ஆடுகளை வெயில், மழை, குளிர் ஆகியவற்றில் இருந்தும் மற்ற விலங்குகளிடம் இருந்தும் பாதுகாக்க கொட்டில் (கொட்டகை) அமைக்க வேண்டியது மிகத்தேவை ஆகும். தேவையான காற்றோட்டம், நீர் தேங்காத உலர்ந்த தரை, நல்ல வெளிச்சம் இருக்கும்படி கொட்டில் அமைக்கப்பட வேண்டும்.
குறைந்த எண்ணிக்கையில் ஆடுகள் வளர்ப்பவர்கள் வீட்டின் ஒரு பக்க சுவரில் சாய்வாக கூரை அமைத்து வளர்க்கலாம். இரண்டு ஆடுகள் வளர்ப்பதற்கு பத்து அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள இடவசதி வேண்டும். வீட்டுச்சுவர் அருகே உயரம் எட்டு அடியாகவும், எதிர்ப்பக்க கூரையின் உயரம் ஆறு அடியாகவும் இருக்க வேண்டும். மூங்கில், சவுக்கு மரம், தென்னை ஓலை, பனை ஓலை, ஓடு ஆகியவற்றைப் பயன்படுத்தி கூரை அமைக்கலாம். பக்க வாட்டில் மூங்கில் பத்தை, சவுக்கு மரக் குச்சிகள் போன்றவை கொண்டு வேலி அமைக்க வேண்டும். கொட்டிலின் ஒருபுறம் கதவு ஒன்றும் அமைக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் ஆடுகள் வளர்க்க எண்ணும்போது, வயது வாரியாக அவற்றுக்கு தனிப்பட்ட கொட்டகைகள் அமைக்க வேண்டும். அவற்றை எப்படி அமைக்க வேண்டும் எனப் பார்க்கலாம்.
வளர்ந்த பெட்டை ஆடுகளுக்கான கொட்டகை
ஒரு கொட்டகையில் அறுபது ஆடுகள் வரை வளர்க்கலாம். ஆடு ஒன்றுக்கு பதினைந்து முதல் இருபது சதுர அடி வீதம் கணக்கிட்டு இடவசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
பொலி கிடாக்களுக்கான அறை – ஒவ்வொரு கிடாவிற்கும் முப்பது சதுர அடி இடம் உள்ள வகையில் தனித்தனியே அறைகள் அமைத்து அவற்றில் விட வேண்டும்.
ஈனும் அறை
ஈனுவதற்கு பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பு நிறை சினை ஆடுகளை ஈனும் அறைக்கு மாற்ற வேண்டும். இதற்கான அறை ஆறு அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஈனும் அறையைச் சுற்றிலும் கம்பி அல்லது பிளாஸ்டிக் வலை அடித்து பறவைகள் உள்ளே நுழையா வண்ணம் தடுக்க வேண்டும்.
குட்டிகளுக்கான கொட்டகை
முப்பத்தைந்து அடி நீளம், பதினைந்து அடி அகலம் உள்ள கொட்டகையில் எழுபத்தைந்து குட்டிகளை விடலாம். இந்த கொட்டகையிலும் தடுப்புகள் அமைத்து பால்குடி குட்டிகள், பால்குடி மறந்த குட்டிகளை தனித்தனியே விடலாம். கிடாக் குட்டிகள், பெட்டைக் குட்டிகளுக்கும் தனித்தனியே தடுப்பும் அமைக்கலாம்.
நோய் வாய்ப்பட்ட ஆடுகளை பராமரிக்க ஒரு தனி அறை இருக்க வேண்டும். தீவனங்கள், கருவிகள் வைப்பதற்கு ஒரு அறை தேவைப்படும். ஆடுகளை எடை போடுவதற்கு ஒரு அறை இருக்க வேண்டும்.
இனப்பெருக்க மேலாண்மை
ஆட்டுப் பண்ணையில் இருந்து கிடைக்கும் முதன்மையான வருமானங்களில் ஒன்று, கிடைக்கக் கூடிய குட்டிகள் ஆகும். எனவே அதிக எண்ணிக்கையில் குட்டிகள் கிடைக்கும் அளவில் பராமரிப்பு முறைகளை கைக்கொள்ள வேண்டும்.
முதல் இனச்சேர்க்கை
பெட்டை ஆடுகள் சராசரியாக ஆறு மாதங்களில் பருவத்திற்கு வந்து விடும். ஆனால் இந்த வயதில் சினையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு முழுவளர்ச்சி பெற்று இருக்காது. மிகவும் சின்ன வயதில் சினை தரிக்கும் ஆடுகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். குட்டிகள் ஈனுவதற்கும் சிரமப்படும். மேலும் குட்டிகளுக்குத் தேவையான பால் சுரப்பும் இருக்காது. எனவே பெட்டை ஆடுகளுக்கு ஒரு ஆண்டு ஆன பிறகுதான் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்.
குட்டிகளுக்கு நான்கு மாதங்கள் ஆன பிறகு கிடாக் குட்டிகளையும், பெட்டைக் குட்டிகளையும் தனித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு பிரித்து வளர்க்கவில்லை என்றால் இளம் வயதிலேயே இனச்சேர்க்கை எற்பட்டு சினை தரித்து விடும்.
குட்டி ஈனும் இடைவெளி
ஆடுகளின் சினைக்காலம் ஐந்து மாதங்கள். பெட்டை ஆடுகள் குட்டி போட்ட பின், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இனச்சேர்க்கை செய்தால் இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈத்துகள் கிடைக்கும். அதாவது குட்டி ஈனும் இடைவெளி எட்டு மாதங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இனப்பெருக்க சிறப்புத் தீவனம்
ஆடுகள் நன்றாக வளர்ச்சி அடைய நல்ல சூழ்நிலை, போதுமான சத்துள்ள தீவனம் மிகவும் தேவை ஆகும். பெட்டை ஆடுகளின் பருவ சுழற்சி ஆண்டு முழுவதும் நடைபெறும். ஆனால் கோடை காலங்களில் ஆடுகள் வெப்ப அயர்ச்சிக்கு உட்படுவதால் பருவ சுழற்சி நடைபெறுவது இல்லை. இனச் சேர்க்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து நாள்தோறும் ஆடு ஒன்றுக்கு கால் கிலோ வீதம் அடர் தீவனம் அல்லது சோளம், மக்காச் சோளம், கம்பு போன்ற தானியங்களைக் கொடுத்து வந்தால் ஆடுகள் முறையாக பருவத்துக்கு வந்து அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் வெளியாகி கருத்தரிப்பு விகிதம் அதிகரிக்கும்.
ஆடு வளர்ப்பு பற்றிய எண்ணற்ற தளங்கள் இணையத்தில் உள்ளன. goat farming என்று கூகுளில் தட்டச்சு செய்தால் எண்ணற்ற தளங்கள் தோன்றுகின்றன. அவற்றில் இருந்து நமக்குத் தேவையான கூடுதல் செய்திகளைப் பெற முடியும்.
-எம். ஞானசேகர், தொழில் ஆலோசகர்!