சேலத்தைச் சேர்ந்த இளைஞர் திரு. சோமசுந்தரம். இவர் இயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic. com தளத்தை தொடங்கி இருக்கிறார். அதுபற்றி அவர் கூறும்போது,
“சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் ஆக இருந்தது. நான் அதை பலமுறை பலவழிகளில் சிந்தித்து இருக்கிறேன். பல தொழில்களில் முயற்சி செய்து தோல்வி அடைந்து இருக்கிறேன். என் தோல்விகளில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இயந்திரவியல் பிரிவில், 2013 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் கல்லூரியில் எனது படிப்பை முடித்தேன். அதன் பிறகு மும்பையில் ஒரு ஆண்டு காலம் பணிபுரிந்து விட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். என்னுடைய அப்பா திரு. ப. கருணாகரன் டிரைவர் ஆக பணி புரிகிறார். அம்மா திருமதி. ராஜாத்தி செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார். என் தங்கை சந்தியா, வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிகிறார்.
இரசாயன உரம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, குதிரைவாலி, செக்கில் ஆட்டிய எண்ணைய் போன்றவற்றை விற்பனை செய்வதற்கான இணைய தளத்தை உருவாக்கினேன்.
இதில் விளைவிப்பவர்களே விலையை நிர்ணயிப்பவர்கள். எங்கள் தளம் HcOrganic. com 2017 மார்ச் அன்று தொடங்கப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த அதே அலுவலகத்தில் 100 சதுர அடியில் துவக்கப்பட்டது. எங்கள் நிறுவனம் இ-காமர்சை (E-commerce) அடிப் படையாகக் கொண்டது.
இயற்கையான முறையில் எந்த ஒரு இரசாயனமும் கலக்காத உணவு பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்பவர்களும், இயற்கையை பாதிக்காத பொருட்களை (பாக்குமட்டை தட்டு, பேப்பர் கப், மண் பானை போன்றவை) தயாரிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்யலாம். இயற்கையான பொருள்கள் தேவைப்படும் பொதுமக்கள் எங்கள் இணைய தளம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. கேஷ் ஆன் டெலிவரி வசதியும், பொருளை திரும்ப கொடுக்கும் வசதியும், பணத்தை திரும்பப் பெறும் வசதியும் கொடுத்து உள்ளோம்.
எங்கள் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் போது சேவை கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. விவசாயிகள் அவர்களின் பொருட்களின் விலையை அவர்களே தீர்மானிக்க முடியும்.
வாடிக்கையாளர்களிடம் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்து செலவு அதிகமாக வருகிறது. அதை குறைக்க பல கூரியர் நிறுவனங்களிடம் வேண்டுகோள் கொடுத்து உள்ளோம்” என்றார் திரு. சோமசுந்தரம்.
-ஆயிஷா