கால மாற்றம் சில தொழில்களை புதிது புதிதாக உருவாக்குகிறது; சில தொழில்களை சரியச் செய்கிறது. திருப்பூருக்கு அருகே உள்ள அனுப்பர்பாளையம் பித்தளைப் பாத்திரங்களுக்கு பெயர் பெற்றது. பித்தளைப் பாத்திரங்கள் மட்டும் அல்லாமல் தாமிரம், எவர்சில்வர் பாத்திரங்களும் அதிக அளவில் உற்பத்தி ஆகிக் கொண்டிருந்த நிலை இன்று படிப்படியாக மாறி வருகிறது. அந்த ஊரில் உள்ள வீடுகள் தோறும் பாத்திரங்கள் தட்டும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்.
அங்கே தயாரிக்கப்படும் பானைகள், குடங்கள், வாய் அகன்ற பாத்திரங்களான தேக்சாக்கள், பராத்து எனப்படும் பெரிய தட்டுகள் மிகுந்த வரவேற்பு பெற்றவை.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பாத்திரம் அடிக்கும் பட்டறைகள் ஐநூறுக்கும் மேல் இருந்தனவாம். அதற்கேற்ப வேலை வாய்ப்புகளும் இருந்திருக்கின்றன. ஐநூறு பட்டறைகள் இருந்த இடத்தில் இப்போது நூறு பட்டறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த சரிவுக்கு என்ன காரணம்?
இப்போது அடுப்பில் வைக்கும் சாமான்களைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களும் பிளாஸ்டிக்கில் கிடைக் கின்றன. இதனால் உலோகத்தால் செய்யப்பட்ட சாமான்களை வாங்கிக் கொண்டு இருந்த மக்கள் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறி விட்டார் கள். அதே போல முன்பெல்லாம் திருமணம் போன்ற விழாக்களின் போது பித்தளைப் பாத்திரங்களில் தங்கள் பெயரை வெட்டி பரிசு அளிக்கும் பழக்கம் அதிக அளவில் இருந்தது. சீர்வரிசைப் பொருட்க ளிலும் பித்தளைப் பாத்திரங்கள் இன்றி அமையாத இடத்தைப் பிடித்து இருந்தன. இப்போது அப்படி பரிசு அளிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இப்போது பெரும்பாலும் பணத் தையே கவரில் வைத்து கொடுத்து விடுகிறார்கள். அல்லது அரிதாக ஃபேன்சியான பரிசுப் பொருட் களை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள்.
இதைப் போன்ற காரணங்களால் அனுப்பர் பாளையத்தின் பாத்திரத் தொழில் படிப்படியாக குறைந்து கொண்டே வந்து விட்டது. இதன் சரிவைப் பார்த்த புதிய தலைமுறையினர் பலர் தொழிலை மாற்றிக் கொண்டு விட்டனர். குறிப்பாக பனியன் தொழிலுக்கு மாறி விட்டனர்.
இருப்பினும் இன்னமும் சென்னை, திருச்சி, கேரளா போன்ற இடங்களில் இருந்த இங்கே தயாரிக்கப்படும் பாத்திரங்களை வாங்கிச் செல்லும் குறைந்த அளவிலான வாடிக்கையாளர் களை நம்பியே மீதி உள்ள நிறுவனங்களும் உள்ளன.
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு மற்ற தொழில்களை அது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்ப்படுத்தி இருப்பதைப் போலவே இந்த தொழிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் முப்பத்தைந்து விழுக்காடு அளவுக்கு இன்னும் சரிந்து விட்டிருக்கிறது, என்கிறார்கள் அந்த தொழிலில் அனுபவம் உள்ளவர்கள்.
–தஞ்சை என். ஜே. கந்தமாறன்