”மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்றது. அதை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் எவ்வளவோ போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது கல்வி எந்த பட்டியலில் இருக்கிறது என்பது தெரியாமல் அது ரகசிய பட்டியலில்தான் இருக்கிறது” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை கண்டித்து உள்ளார். இது பற்றி சென்னையில் அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் அன்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசும்போது,
”கல்வித் துறை அரசியல் செய்வதற்கான துறை அல்ல; அடுத்த உலகத்தை உருவாக்கும் மாணவச் செல்வங்களை வளர்த்து எடுக்கும் துறையாகத்தான் இருக்கிறது. கல்வி தொடர்பாக எந்த ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்றாலும் அதில் கல்வியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேசியக் கல்விக் கொள்கை குழுவில் ஒரே ஒரு கல்வியாளர்தான் இருந்தார். மற்ற அனைவரும் அதிகாரிகள்தான். நம்முடைய கண்ணைக் கட்டி ஏமாற்றி உள்ளே நுழைகிறார்கள்.
மேலும் தேசிய கல்விக் கொள்கையில் எந்த ஒரு இட ஒதுக்கீடு பற்றியும் பேசப்படவில்லை. இது எந்த அளவுக்கு ஏமாற்றும் வேலை? கண்மூடித்தனமாக நாங்கள் எதையும் எதிர்க்கவில்லை. நியாயத்தைத்தான் பேசுகிறோம்.
எது தேவையோ அதை தூக்கி எறிந்து விட்டு, மாணவர்களை சமூக நீதிக்கு எதிரான வேறொரு வழியில் கொண்டு செல்லும் முயற்சியைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் நாம் ஏமாந்து விடக்கூடாது. நம்முடைய முதல் அமைச்சர் எந்த திட்டங்களைக் கொண்டு வந்தாலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டுதான் கொண்டுவர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதன்படிதான் தமிழ்நாடு கல்வித் துறை செயல்பட்டுவருகிறது” என்றார்.