சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா.
அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து விட்டு வருகிறவர்கள், போகிறவர்களுக்கு வணக்கம் சொல்லும் வேலைதான் அது.
அந்த வேலையைத்தான் மனநிறைவாக செய்து வந்தான். வரும் விருந்தினர்கள் எப்போதும் இவன் முகத்தில் புன்னகையைத்தான் பார்ப்பார்கள். சோர்வு இல்லாமல் வணக்கம் சொல்லி வரவேற்பான்.
அன்றும் அப்படிப் பணியில் இருக்கும்போது, ஓட்டல் வாசலில் ஒரு கார் வந்து நின்று, அதில் இருந்து ஒருவர் இறங்கினார். வழக்கம் போலவே முகத்தில் புன்னகையுடன் வரவேற்று வணக்கம் சொன்னான் தேவா.
இவன் சொன்ன வணக்கத்திற்கு பதிலாக “மிஸ்டர், நீ நாளையில் இருந்து இந்த கேட் வாசல்ல நிற்காதே. இந்த வேலை இனிமேல் உனக்கில்லை” என்று சொல்லி விட்டு சர்ரென உள்ளே போய் விட்டார் அந்த பெரிய மனிதர்.
தேவாவுக்கு அதிர்ச்சி! யார் இவர் ? நாம என்ன தப்பு செஞ்சோம். காரில் வந்து இறங்கினார். வேலை இல்லை என்கிறார். குழப்பத்தோடு வரவேற்பாளரிடன் போய் விவரம் சொல்லிக் கேட்டான்.
“இப்ப வந்தவரா? அவர்தான் இந்த ஓட்டல் முதலாளியோட நெருங்கிய நண்பர். இவர் என்ன சொன்னாலும் நம் முதலாளி கேட்பார். ஏன் அவர் இப்படிச் சொல்லி விட்டுப் போகிறார் என்று எனக்கும் புரியவில்லையோ அனுதாபத்தோடு கூறினாள், அந்த பெண்.
மதிய உணவு இடைவேளையில் மேனேஜர் அறைக்கு போய் விவரம் சொல்லத் தொடங்கும் போதே அட என்னப்பா நீ வாசல்ல நின்று வரவேற்கிற வேலைதான் கிடையாதுன்னு அவர் சொல்லி இருக்காரு அதுக்கு பதிலா, முதலாளி கிட்ட சொல்லி சூப்பர்வைசர் வேலையை கொடுக்க சொல்லிட்டாருப்பா, இந்தா அந்த ஆர்டர் என மேனேஜர் கொடுத்தார்.
“நானா ? சூப்பர்வைசரா எப்படி சார் இது?, வியப்புடன் கேட்டான்.
“வாசல்ல நின்னு வரவேற்கிற உன் முகத்தில் புன்னகையும், வருகிறவர்களை அன்போடு வரவேற்கும் உன்னுடைய இயல்பு அவருக்குப் பிடித்து விட்டது. பல வாடிக்கையாளர்களும் என்னிடமே இது பற்றி கூறி இருக்கிறார்கள். இதை நான் முதலாளி கிட்டேயும் சொல்லி இருக்கேன். அதுவும் நீ ஒரு நாள் கூட லேட்டா வந்ததே இல்லை. இப்ப நீ சூப்பர்வைசர் ஆகிட்டே மகிழ்ச்சியோடு கூறினார், மேனேஜர்.
‘சூப்பர்வைசர் வேலைக்கான ஆர்டரை வாங்கிக் கொண்டு மேனேஜரின் கரங்களை குலுக்கிவிட்டு, பணி உயர்வை ஏற்றுக் கொள்ள தயாரானான், தேவா.
– கே. அசோகன்