உமேஷ் தத் ஏழைதான். இப்போது இல்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவர் ஏழையாக இருந்தார். கல்கத்தாவில் நடந்த இனக் கலவரங்களில் அவருடைய தாயும், தந்தையும் கொல்லப் பட்டார்கள். தத்-தனது அத்தை வீட்டில் அநாதையாகவும், உற வாகவும் வளர்ந்தார், பனிரண்டு வயது பையனாக.
சொந்தக்காரர்கள் வீட்டில் அநாதையாக வளர்வது ஒரு கவலையான அனுபவம். அப்பா அம்மாவை எடுத்து சாப்பிட்டு விட்ட தரித்திரக் குழந்தைகள் என்று ஓயாமல் சொல்லிக் காட்டுவார்கள். வளர்ப்பு நன்மையில் முடிந்தால் ‘நான் வளர்த்தேன்!’ என்பார்கள். தீமையில் முடிந்தால், – அந்த தறுதலைக்கு அது தான் தலைவிதி!’ என்பார்கள். வளருகின்றவர்களும் மனிதர்கள் அல்லவா? அவர்கள் பெரிய மனுஷர்கள் ஆகிவிட்டால்; என் உழைப்பு; என் முயற்சி!’ என் பார்கள். குட்டிச்சுவர் ஆனால்; அத்தை கெடுத்தாள்! என்று வரும்.
தத்தினுடைய இந்த தத்துவம் எனக்கு ரொம்ப பிடித்தது. வாழ்க்கையில் இரண்டு பக்கங்களையும் பெரும்பாலான மனிதர்கள் பார்ப்பதில்லை அல்லவா? பொதுவாக மனிதர்களின் வாழ்க்கை கோட்பாடு; “‘பூவிழுந்தால் எனக்கு தலை விழுந்தால் உனக்கு இல்லை ” என்பதுதான்! அதாவது எல்லாமும் எனக்கே. அதில் தத் மாறுதலாக இருந்தார். தத் இப்போது ஒரு சின்ன முதலாளி. ஒரு நாற்பத்து ஐந்து வயதுக் குள்ளேதான் இருக்கும். அதற்குள் வாழ்க்கை போட்ட புடத்தில் அவர் உருகி, நசுங்கி, பக்குவப்பட்டு விட்டவர். அவருடைய தொழிற்சாலையில் இப்போது பத்து பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் சேர்ந்து முதலீடு ஒரு முப்பது லட்சம் ரூபாய் இருக்கும். வருஷத்தில் பத்து லட்சம் ரூபாக்குக் குறையாமல் சம்பாதிக்கிறார். எல்லாரும் இப்படிச் செய்யலாம், தத்தின் உழைப்பும் நாணயமும் இருந்தால்!
“தத், இதைத் தொடங்கவேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது” ?- நான் தத் தனது வரலாற்றின் முதல் அத்தியாயத்தை சொல்லுகிறார்.
”பனிரண்டு வயது பையனாக கௌரா வீதிகளில் செய்தித்தாள் விநியோகிப்பதுதான் எனது வேலை. உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் செய்தேன். ஒரு பேப்பருக்கு எனக்கு ஐந்து பைசா கிடைக்கும். தினம் பத்து தெருக்களில் நானூறு பேப்பர் போட்டுவிடுவேன். தினப்படி இருபது ரூபாய் மாதம் அறுநூறு என்பது பனிரண்டு வயது பையனுக்கு பெரிய வருமானம்.
ஒரு நாள் நான் வீட்டுக்கு வந்தபோது-என் தங்கை கையில் ஒரு தங்க வளையல் போட்டிருந்தாள். நான் அசந்து போனேன். “எங்கே, எங்கே, காட்டு. அழகாக இருக்கிறதே?” அவள் ஓடினாள். சிரித்தாள். கையை பிடித்து வளையலை பார்த்தேன். அது தங்க நிறத்தில் ஜிகினாத்தாள் ஒட்டப்பட்ட கண்ணாடி வளையல்தான். அவளேதான் ஒட்டியது. என் தங்கையை அணைத்து முத்தமிட்டேன். இந்தியப் பெண்களுக்கு தங்கத்தின் மேல் இவ்வளவு ஆசை எப்படி வந்தது?
கல்கத்தா கடைவீதிகளில் அலைந்து தங்கமுலாம் இட்ட வளையல்களில் ஒரு ஜோடி அவளுக்கு வாங்கிக் கொடுத்தேன், தங்கம் இல்லை என்று சொல்லித்தான்! அவளுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை . எனது முத்தத்தை அவள் திருப்பித் தந்தாள். அவள் ரொம்ப சாகசக்காரி. பத்துக்கு ஒன்று வீதம்தான் என் முத்தங்களை திருப்பித் தருவாள். அவள் குழந்தை. என்னுடைய ஒரே உறவு. அவளை மகிழ்ச்சியாக்கியது எனக்கு அளவற்ற மன நிம்மதியை தந்தது.
இந்திய ஏழைப் பெண்கள் அத்தனை பேருக்கும் இப்படி தங்க வளையல்கள் மூன்று ரூபாய்க்குள் கொடுத்தால் எத்தனை மகிழ்ச்சியை இந்த நாடு முழுவதும் ஏற்படுத்த முடியும்? கன்னிப் பெண்களில் மனப்பூரிப்பு என்பது நமது பக்ராநங்கல் அணைக்கட்டை விட, கௌரா பாலத்தை விட பெரியது” என்றார் தத்.
தத்தின் உதாரணங்கள் எனக்கு பிரமாதமாக இருந்தன. தத் எல்லார் கண்களிலும் நுழைந்து உலகை பார்ப்பது மாதிரி எனக்கு தெரிந்தது. எல்லார் நெஞ்சுக்குள்ளும் ஓடி, அங்கே மெல்ல கசியும் ரத்தத்தை துடைத்தெடுத்து ரணத்துக்கு மருந்து போடுவது மாதிரி இருந்தது.
“ஒரு ஆயிரம் ரூபாய் பணத்தோடு – அத்தை மாமாவின் ஆசியோடு நான் ராஜஸ்தான் சென்றேன். பதினைந்து வயதுதான். பத்திரிகை விநியோகம் எனக்கு உலகை நன்கு பரிச்சயப்படுத்தி யஇருந்தது. மேலும் என்னுடைய தரைமட்ட வாழ்வில் மேலும் கீழே விழ வழியே இல்லை அல் லவா? எனவே துணிந்து சென் றேன்.
ராஜஸ்தானில்தான் அந்த வளையல் செய்கிறார்கள். ஐந்து ஆண்டுகள் கொத்தடிமை போல இருந்து இந்த தொழிலைக் கற் றேன், அலுமினிய ஷீட் எங்கே வாங்கு கிறார்கள்- அதை வளை யல் அகலத்துக்கு பட்டையாக வெட்டி பூ பூவாக டிசைன் போட்ட டைகளில் அமுக்கி, ஒரங்களை சுருட்டி, வளையலாக மடித்து வெல்டு பண்ணி-தங்கமுலாமிட்டு, அழகான மிட்டாய் தாளில் நளினமாக மடித்து வண்ண வண்ண பெட்டிகளில் அடைத்து சந்தைக்கு அனுப்புகிறவரை!
என்னுடைய இருபதாவது வய தில் – இந்த கிராமத்தில் இந்த வேலையை தொடங்கினேன். என்னுடைய ஐந்து வருஷ சம்பாத்தியத்தில் சேர்த்த ரூபாய் இரண்டு லட்சம் ரூபாய்தான்தான் முதல் முதலீடு. ஷீட் கட்டிங் மெஷின், டைகள், வெல்டிங் மெஷின் எல்லாமும் ரூபாய் ஒன்றரை லட்சத்துக்குள் ஆனது. எனது அத்தைவீட்டு மாடியில் குடியிருந்த ஒரு வங்கி அதிகாரி – என் தொழில் திறனை பார்த்து எனக்கு வங்கிக் கடன் கிடைக்க உதவினார்.”
விதம் விதமாக, மின்னல் மின்னலாக ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கில் வளையல்கள் உற்பத்தியாகின்றன. ஆண்டுக்கு மூன்று லட்சம் ஏழைப்பெண் களின் நகைக் கனவுகளை தத் நிறைவேற்றுகிறார். ஒரு ஜதை மூப்பது ரூபாய் வீதம் பத்து லட் சத்துக்கு மேல் வியாபாரம். பத்து சதவீதத்திற்கு குறையாத லாபம்.
ஒரு திறப்பு கிடைத்து அதில் உழைப்பை திணித்தால் அலுமினியம் தங்கமாக கலகலக் கும் என்பதற்கு தத் நல்ல எடுத்துக்காட்டு.
– சங்கமித்ரா